Thursday, July 9, 2009

இலங்கைத் தமிழர் - வரலாற்றுச் சுவடுகள் (28)

'சயனைடு' தின்று தற்கொலை செய்த முதல் போராளி
சிவகுமாரன்
பற்றிய உருக்கமான தகவல்கள்

************************************************

ழத்தமிழர் போராட்டத்தில் 17 வயதான சிவகுமாரன் 1974-ம் ஆண்டு ஜுன் 5-ந்தேதி சயனைடு (விஷம்) தின்று தற்கொலை செய்து கொண்டார். ஈழப் போராட்டத்தில் சயனைடை சாப்பிட்டு உயிர் துறந்த முதல் போராளி இவர்தான். தனது மரணத்தின் மூலம் அன்றைய இலங்கையின் இளம் தமிழர் தலைமுறையை - தமிழ் சமூகத்தை ஒரு உலுக்கு உலுக்கிய சிவகுமாரன், 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி பிறந்தார். இவருடைய தந்தை பொன்னுசாமி, தமிழ் ஆர்வலர். அரசியல் ஞானம் மிக்கவர். தாய் அன்னலட்சுமி. சிவகுமாரன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். இளமையில் இருந்து விடுதலை வேட்கை உடையவராகத் திகழ்ந்த சிவகுமாரன், தமிழ் மாணவர் பேரவையுடன் தொடர்பு வைத்திருந்தார்.

தொடக்கத்தில் தங்கதுரையின் குழுவில் இருந்த சிவகுமாரன் பின்பு தன் வழியே போகத்தொடங்கினார். சிறிமாவோ பண்டாரநாயகாவின் யாழ்ப்பாணத்து பிரதிநிதியாக, யாழ்ப்பாணம் நகர மேயர் ஆல்பிரட் துரையப்பா விளங்கினார். பெரும்பாலான தமிழர்கள் அவரை ஒரு தமிழ்த் துரோகியாகவே கருதினார்கள். துரையப்பாவை, சிவகுமாரன் தீர்த்துக் கட்டத் தீர்மானித்தார். 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் 2-வது கிராஸ் சாலையில் நின்ற துரையப்பாவின் கார் மீது வெடிகுண்டு வீசினார். இதனால் துரையப்பா கார் சேதம் அடைந்தது. காரை நிறுத்திவிட்டு ஓய்வு விடுதியில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த துரையப்பா உயிர் தப்பினார். இதற்காக சிவகுமாரனை போலீசார் கைது செய்தனர். போதிய ஆதாரம் இல்லாததால் சில மாதங்களுக்குப் பிறகு அவர் விடுதலையானார்.

ஆனால் போலீஸ் காவலில் இருந்தபோது கடும் சித்ரவதைக்கு உள்ளானார். இதனால் போலீஸ் கையில் சிக்குவதைக் காட்டிலும், உயிரை மாய்த்துக் கொள்வதே மேல் என்ற முடிவில் கழுத்தில் எப்போதும் `சயனைடு' குப்பியை தொங்கவிட்டு இருந்தார். போர்க்குணம் உடையவராக சிவகுமாரன் திகழ்ந்தார். அவரது போர்க்குணத்திற்கும், தனித்த செயல்பாட்டிற்கும் சான்றாக ஒரு சம்பவத்தைக் கூறலாம். 1973-ம் ஆண்டு நல்லூர் திருவிழாவின்போது காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிங்கள போலீசார், பெண்களிடம் அத்துமீறி நடக்க முற்பட்டனர். இதை கண்ட சிவகுமாரன், தன்னந்தனியாகவே நின்று அவர்களை எதிர்த்தார். இதற்காக அவர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டார். பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் போலீசார் அவரை விடுவித்தனர்.


1974-ம் ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்காக சிவகுமாரன் கடுமையாக உழைத்தார். போலீஸ் அட்டூழியத்தால், 9 பேர் மரணத்துடன் மாநாடு முடிந்தது அவரது மனதைப் பெரிதும் நோகச் செய்தது. கலவரத்துக்கு காரணமாக இருந்த இலங்கை அமைச்சர் குமாரசூரியரையும், போலீஸ் அதிகாரி சந்திரசேகராவையும், யாழ்ப்பாண நகர மேயர் ஆல்பிரட் துரையப்பாவையும் பழிவாங்க வேண்டும் என்று துடித்தார்.

சந்திரசேகரா, யாழ்ப்பாணம் கைலாசப்பிள்ளையார் கோவிலுக்கு அருகே குடியிருந்தார். அந்தக் கோவிலைக் கடந்துதான் அவர் போலீஸ் நிலையத்திற்குச் செல்வது வழக்கம். இதைக் கவனித்த சிவகுமாரன், நண்பர்களுடன் கோவில் அருகே காத்திருந்தார். போலீஸ் 'ஜீப்'பை ஓட்டிக்கொண்டு சந்திரசேகரா வந்தார். அவரது 'ஜீப்'பை வழிமறித்து கதவைத் திறந்து சிவகுமாரன் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கி வெடிக்கவில்லை.

இதனால் சந்திரசேகராவை வெளியே இழுத்து கத்தியால் குத்த முயன்றார். அப்போது நண்பர்களின் உதவியைக் கோரினார். அவர்கள் ஏற்கனவே ஓடிவிட்டதால், சிவகுமாரனும் அங்கிருந்து ஓட நேர்ந்தது.

தப்பிச் செல்லும் வழியில், ஆல்பர்ட் துரையப்பாவின் காரைக் கண்டார். அவரை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டார். மறுபடியும் துப்பாக்கி ஒத்துழைக்க மறுத்தது. மீண்டும் ஓட்டம் பிடித்தார். இதனால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

தலைமறைவாக இருக்கும் சிவகுமாரனைக் காட்டிக் கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்தது. ஈழப்போராளி ஒருவரைப் பிடித்துத் தந்தால் சன்மானம் என்று அறிவிக்கப்பட்டது, அதுவே முதல் முறையாகும். மேலும் 1974-ம் ஆண்டு ஒரு லட்சம் என்பது பெரிய தொகை.

சிவகுமாரனைப் பிடிக்க போலீஸ் வலை வீசியது. அதுவரை மீசை வைத்திராத அவர் பெரிய மீசை வளர்த்தார். இந்தியாவுக்கு தப்பிச்சென்று சிலகாலம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று அவருக்குச் சில நண்பர்கள் யோசனை கூறினார்கள். அதற்குப் பணம் தேவைப்பட்டது. அவருக்குப் பணம் அளிப்பதாக வாக்குறுதி அளித்த சிலரும், கடைசி நேரத்தில் கைவிரித்தனர். இதனால் கோப்பாய் என்ற இடத்தில் உள்ள வங்கியை கொள்ளையடிக்க சிவகுமாரன் திட்டம் தீட்டினார்.

1974-ம் ஆண்டு ஜுன் 5-ந்தேதி இதற்காக ஒரு வாடகைக்காரை அமர்த்திக்கொண்டு நண்பர்களுடன் வங்கிக்குச் சென்றார். வங்கிக் காவலரை சிவகுமாரன் இருமுறை சுட்டார். குறிதவறியது. அதற்குள் யாரோ போலீசுக்குத் தகவல் தெரிவித்து விட்டனர்.

சிவகுமாரனும் அவருடைய நண்பர்களும் காரை நோக்கி ஓடினர். சாவியுடன் டிரைவர் தப்பிச் சென்றிருந்தார். அதற்குள் போலீஸ் படை வந்துவிட்டது. நண்பர்கள் நால்வரும் ஆளுக்கொரு பக்கம் ஓடினார்கள். சிவகுமாரன் செம்மண் நிலத்தில், புகையிலைக் காட்டில் ஓடினார். புகையிலை செடியை வெட்டிய பிறகு நிலத்தில் மிஞ்சிய கட்டைகள் அவரது காலை குத்திக் கிழித்தன. ரத்தம் சொட்டியது. அதற்கு மேல் ஓட முடியாமல் கீழே விழுந்தார். போலீசார் அவரைச் சுற்றி வளைத்தனர். சுற்றி வளைத்த போலீசாரிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த சிவகுமாரன் 'சயனைடு' சாப்பிட்டார். அவரைப் போலீசார் யாழ்ப்பாணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் மரணம் அடைந்தார்.

தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தில் சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொண்ட முதல் போராளி சிவகுமாரனே ஆவார். அவரது மரணச்செய்தி கேட்டு யாழ்ப்பாண மக்கள் - குறிப்பாக தமிழ் இளைஞர்கள் கண்ணீர் சிந்தினர். 17 வயதான சிவகுமாரனின் இறுதி ஊர்வலம் ஜுன் 7-ந்தேதி நடந்தது. திரளான மக்கள் அதில் பங்கேற்றனர். இறுதி சடங்கு நடப்பதற்கு முன்பு இளைஞர்கள் பலர் பெருவிரலைக் கிழித்து, சிவகுமாரன் நெற்றியில் ரத்தத் திலகமிட்டு தங்களைத் தமிழ் ஈழப் போராட்டத்திற்கு அர்ப்பணிப்பதாகச் சபதம் செய்தனர்.

சிவகுமாரனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமிர்தலிங்கம் பேசுகையில், "சிவகுமாரன் தமிழ் மக்களுக்காக அளப்பரிய தியாகத்தைப் புரிந்துள்ளார். பிறப்புரிமையை மீட்டு எடுப்பதற்காக அவர் கையாண்ட வன்முறை போராட்டத்தில் நான் வேறுபடுகிறேன். இருந்தபோதிலும் அவரது அர்ப்பணிப்பு உணர்வுக்கு தலைவணங்குகிறேன். அவரின் வீரத்தியாகம் வீணாகாது. அவரது சாம்பலில் இருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்கள் முளைப்பார்கள். அவரது சமாதியில் இருந்து தமிழ் ஈழம் எழும்பும்'' என்று உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார்.

சிவகுமாரனின் சொந்த ஊரான உரும்பிராயில் அவருடைய வெண்கலச்சிலை 1975-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதை 77-ம் ஆண்டு சிங்கள ராணுவம் தகர்த்தது. அதை மீண்டும் தமிழர்கள் நிறுவினார்கள். 81-ல் ராணுவம் மீண்டும் இடித்தது. சிவகுமாரன் நினைவு நாளை விடுதலைப்புலிகள் இயக்கம், "மாணவர் எழுச்சி நாளாக'' கடைப்பிடித்து வருகிறது.

யாழ்ப்பான மேயர் துரையப்பா சுட்டுக்கொலை - நாளை
நன்றி தினத்தந்தி

No comments: