Wednesday, July 8, 2009

இலங்கைத் தமிழர் - வரலாற்றுச் சுவடுகள் (27)

பாராளுமன்றத்தில் அமளி
****************************

ச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு தானம் செய்ததற்கு, பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜனசங்க உறுப்பினர், ஆவேசத்துடன் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாட்டுக்கு அருகே உள்ளதும், முன்பு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததுமான கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு கொடுத்தது. இதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தத்தின் நகலை, பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் தாக்கல் செய்தார். அப்போது அதன் மீது காரசாரமான விவாதம் நடந்தது. இரா.செழியன் (தி.மு.க.) பேசுகையில், "தமிழ்நாட்டுக்கு உரிய கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சட்ட விரோதமானது. இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்கமாட்டோம்'' என்றார்.

மூக்கையா தேவர் (பார்வர்டு பிளாக்) பேசியதாவது:- "என்னுடைய ராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியது கச்சத்தீவு. அதை இலங்கைக்கு கொடுத்தது தவறானது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஏற்கனவே, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு தொல்லை கொடுத்து வருகிறது. எதிர்காலத்தில் போர் மூண்டால், இந்தத் தீவை இந்தியாவுக்கு எதிரான தளமாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.'' இவ்வாறு மூக்கையா தேவர் கூறினார்.

ஜனசங்க தலைவர் வாஜ்பாய் பேசுகையில், "இலங்கைக்கு கச்சத்தீவை தானம் செய்யும் பேரம், ரகசியமாக நடந்து இருக்கிறது. இலங்கையின் நட்பைப் பெறுவதற்காக கச்சத்தீவை தூக்கிக் கொடுப்பது கேவலம்!'' என்று கூறினார். மதுலிமாயி (சோசலிஸ்டு), பி.கே.தேவ் (சுதந்திரா), முகமது செரீப் (முஸ்லீம் லீக்), நாஞ்சில் மனோகரன் (அ.தி.மு.க.) ஆகியோரும் ஒப்பந்தத்தை கண்டித்துப் பேசினார்கள்.

வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் பதில் அளிக்கையில், "இந்தியா - இலங்கை நட்பு வளர, இந்த ஒப்பந்தம் உதவும். இரு தேசங்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது'' என்று கூறினார்.

ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.கழகம், சுதந்திரா, பழைய காங்கிரஸ், சோசலிஸ்டு, முஸ்லிம் லீக், ஜனசங்கம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகளில் வலது கம்ïனிஸ்டு, இடது கம்ïனிஸ்டு கட்சிகள் மட்டும் வெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை.

சபையை விட்டு வெளியேறும் போது கச்வாய் என்ற ஜனசங்க உறுப்பினர், கச்சத்தீவு ஒப்பந்த நகலை கிழித்து, சபையில் வீசி எறிந்தார்.
இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி மேல்-சபையிலும், கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். விவாதத்தின்போது எஸ்.எஸ்.மாரிசாமி (தி.மு.க.) பேசுகையில், "கச்சத்தீவு பற்றி தமிழக முதல்-அமைச்சருடன் கலந்து பேசாமலேயே, ஒப்பந்தத்தில் டெல்லி சர்க்கார் கையெழுத்திட்டு இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான போக்கு'' என்று கூறினார்.

ராஜ்நாராயணன் (சோசலிஸ்டு) பேசுகையில், "ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கு முன், தமிழ் மக்களின் கருத்தை அறிந்திருக்க வேண்டும்'' என்று கூறினார். "ஒப்பந்தத்தை தமிழகம் ஒருபோதும் ஏற்காது'' என்று அப்துல் சமது (முஸ்லிம் லீக்) கூறினார்.

கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். "இந்த ஒப்பந்தம் இந்திரா காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை காட்டுகிறது'' என்று பூபேஷ்குப்தா (வ.கம்.) கூறினார். முடிவில், வ.கம்ïனிஸ்டு, இ.கம்யூனிஸ்டு கட்சிகள் நீங்கலாக மற்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இலங்கை பாராளுமன்றம் கூடியது. கச்சத்தீவை இலங்கைக்கு பெற்றுத்தந்ததற்காக பிரதமர் திருமதி பண்டாரநாயகாவை உறுப்பினர்கள் பாராட்டினார்கள். திருமதி பண்டாரநாயகா பேசுகையில், கச்சத்தீவு பிரச்சினைக்கு தீர்வு கண்டதற்காக இந்திரா காந்தியை பாராட்டுவதாக தெரிவித்தார். சமரசம் ஏற்பட இந்திய வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் மிகவும் உதவியதாக அவர் சொன்னார்.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கலாமா, கூடாதா என்பது குறித்து இந்திரா காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. "இலங்கைக்கு கச்சத்தீவை இந்தியா கொடுத்தது சரி. அதை ஆதரிக்கிறோம்'' என்று தமிழ்நாடு இ.காங்கிரஸ் தலைவர் ராமையா நிருபர்களிடம் கூறினார். கச்சத்தீவை கொடுக்கக்கூடாது என்று கூறுவது வெறும் அரசியல் ஸ்டண்ட் என்று அவர் சொன்னார். இ.காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவரான பழைய முதல்-மந்திரி பக்தவச்சலமும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஆனால், சட்டசபை இ.காங்கிரஸ் தலைவரான ஏ.ஆர்.மாரிமுத்து, முதல்-அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, "கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது'' என்ற தீர்மானத்தில் கையெழுத்து போட்டார். இதேபோல் மேல்-சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமியும், தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டார்.

இப்படி அவர்கள் கையெழுத்துப் போட்டதற்கு ராமையா எதிர்ப்பு தெரிவித்தார். "அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மாரிமுத்துவும், ஆறுமுகசாமியும் கலந்து கொண்டது தவறு. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. அதற்கு எதிரான தீர்மானத்தில் அவர்கள் கையெழுத்திட்டது தவறு'' என்று அவர் சொன்னார். சட்டசபை இ.காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த அனந்தநாயகியும் ராமையாவின் கருத்தை ஆதரித்தார்.

ராமையாவுக்கு, மேல்-சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- "முதல்-அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நானும், மாரிமுத்துவும் கலந்து கொண்டது சரிதான். மக்களின் உணர்ச்சிகளை எதிரொலிப்பது சட்டசபை உறுப்பினர்களின் கடமை. நாங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு இ.காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்றுதான் நினைப்பார்கள்.

அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு எதிரானது அல்ல. மிக முக்கியமான இந்த பிரச்சினையில் நாங்கள் ஓடி ஒளிய விரும்பவில்லை. அதனால் நாங்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டோம்.'' மேற்கண்டவாறு ஆறுமுகசாமி கூறினார்.

கச்சத்தீவு தானத்தைக் கண்டித்து, ஜுலை 14-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன கூட்டங்கள் நடத்தப்பட்டன. முதல்-அமைச்சர் கருணாநிதி தஞ்சை, பாபநாசம் ஆகிய நகரங்களில் நடந்த கூட்டங்களில் பேசினார்.

கச்சத்தீவை தானம் செய்வது சட்ட விரோதம் என்றும், இந்திரா காந்தியும், திருமதி பண்டாரநாயகாவும் செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது என்றும், சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. தமிழ்நாடு ஜனசங்கத் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி இந்த வழக்கைத் தொடர்ந்தார். விசாரணைக்குப் பிறகு, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

பலத்த எதிர்ப்பு இருந்தாலும், கச்சத்தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைத்தது.

'சயனைடு' தின்று தற்கொலை செய்த முதல் போராளி - நாளை

நன்றி
தினத்தந்தி

No comments: