Tuesday, July 7, 2009

இலங்கைத் தமிழர் - வரலாற்றுச் சுவடுகள் (26)


கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு "தமிழ்நாட்டுக்கே உரியது கச்சத்தீவு" ஆதாரங்களுடன் இந்திராவுக்கு கருணாநிதி எழுதிய கடிதம்
*********************************************


"ச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்'' என்று ஆதாரங்களுடன் பிரதமர் இந்திரா காந்திக்கு தமிழக முதல்- அமைச்சர் கலைஞர் கருணாநிதி கடிதம் எழுதினார். கச்சத்தீவு பற்றி இந்திரா காந்தியும், திருமதி பண்டாரநாயகாவும் பேச்சு நடத்திக் கொண்டு இருந்த காலகட்டத்திலேயே, கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே உரியது என்பதை வலியுறுத்தி, இந்திரா காந்திக்கு கருணாநிதி கடிதம் எழுதினார்.

"கச்சத்தீவு பிரச்சினை குறித்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி கேவல்சிங் என்னுடன் பேச்சு நடத்தியதை தொடர்ந்து எனது இலாகா அதிகாரிகள் கச்சத்தீவு பற்றிய ஆதாரங்களை சேகரித்தார்கள். கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக ஒருபோதும் இருந்ததில்லை என்று நிரூபிப்பதற்கு தேவையான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

நெதர்லாந்து நாட்டு மன்னருக்கும், கேன்டி அரசருக்கும் இடையே 14-2-1776 அன்று ஏற்பட்ட ஒப்பந்தம், டச்சு நாட்டிடம் இருந்த கடற்கரை பகுதிகள் இங்கிலாந்து அரசுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தம், 17-3-1762 அன்று ஜான் சுரூடர் என்பவர் எழுதிய நினைவுக் குறிப்புகள், டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரை படங்கள் ஆகிய எல்லா குறிப்புகளும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை காட்டவில்லை. 1954-ம் ஆண்டு வெளியான இலங்கையின் வரைபடத்திலும் ("மேப்'') கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக குறிக்கப்படவில்லை.

நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டு கடற்கரை பகுதியில் முத்துக் குளித்தல், சங்கு எடுப்பு ஆகிய உரிமைகள் ராமநாதபுரம் ராஜா உள்பட தென் இந்திய மன்னர்களுக்கே உரித்தானது என்பதை வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன. கச்சத்தீவு செல்லும் பாதையிலும் கச்சத்தீவின் மேற்கு பகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதை காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியது இல்லை.

இப்போது கிடைத்து இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த அகில உலக கோர்ட்டிலும் எடுத்துக்கூறி நிரூபிக்க முடியும் என்று சென்னை சட்டக்கல்லூரியின் ஆராய்ச்சி பிரிவு கருத்து தெரிவித்து இருக்கிறது. எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும் பொழுது, இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி, "கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமல்ல'' என்று நிரூபிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.'' இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டு இருந்தார்.

இந்தக் கடிதத்துக்கு பதில் ஏதும் வரவில்லை. கச்சத்தீவு தானம் குறித்து, இந்திரா காந்தியும் திருமதி பண்டாரநாயகவும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை, சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டினார். இந்த கூட்டம் 1974 ஜுன் 29-ந்தேதி நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வருமாறு:-

1. பொன்னப்ப நாடார் (.காங்கிரஸ்)
2. .ஆர்.மாரிமுத்து (.காங்கிரஸ்)
3. திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்)
4. அரங்கநாயகம் (.தி.மு..)
5. வெங்கடசாமி (சுதந்திரா)
6. .எஸ்.தியாகராசன் (தமிழரசு கழகம்)
7. .ஆர்.பெருமாள் (பார்வர்டு பிளாக்)
8. மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்ïனிஸ்டு)

மேல்-சபை

9. .பொ.சிவஞானம் (தமிழரசு)
10. ஜி.சாமிநாதன் (சுதந்திரா)
11. அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்)
12. ஆறுமுகசாமி (.காங்கிரஸ்)
13. சக்தி மோகன் (பா.பிளாக்)
14. .ஆர்.தாமோதரன் (ஐக்கிய கட்சி)

தீர்மானம்

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது:
"இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்தது. தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.''
மேற்கண்டவாறு தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானம், பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் சொன்னதாவது:- "கூட்டத்துக்கு வந்திருந்த எல்லா கட்சித் தலைவர்களும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள்.

.தி.மு.. பிரதிநிதி, தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்துவிட்டு போய்விட்டார். கச்சத்தீவு பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று தீர்மானம் போடும்படி அவர் சொன்னார். அது ஏற்றுக்கொள்ளப்படாததால், வெளியேறினார். .காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிக்காரர்களும் கொடுத்த திருத்தங்களை ஏற்றுத்தான் இந்தத் தீர்மானம் முடிவு பெற்று இருக்கிறது.'' இவ்வாறு கருணாநிதி கூறினார்.


நிருபர் கேள்வி:- கச்சத்தீவு பற்றிய ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்றால் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுபற்றி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரவேண்டும் என்று ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய் கருத்து தெரிவித்து இருக்கிறாரே?

கருணாநிதி பதில்:- கோர்ட்டுக்கு போவது பற்றி நாம் எதுவும் சொல்வதற்கில்லை. சட்டசபையை கூட்டுவது பற்றி யோசிக்கலாம்.

கேள்வி:- மத்திய அரசு வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல்சிங் உங்களைச் சந்தித்தபோதே கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவதாக சொன்னாரா?

கருணாநிதி:- அப்போது அகதிகள் பிரச்சினை பற்றிதான் பேச வந்திருந்தார். இது முக்கியமாகப் பேசப்படவில்லை. அப்போதே தமிழர்கள் இப்படி ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் கூறி இருக்கிறேன்.

கேள்வி:- ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதே. இனிமேல் எதுவும் திருத்தம் செய்ய முடியுமா?

கருணாநிதி:- மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. செய்யலாம்.

ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்திலோ அல்லது முந்தினநாளோ, தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சரையோ அல்லது மற்ற அமைச்சர்களையோ டெல்லிக்கு அழைத்து பேசி இருக்கலாம். இந்த மாநில அரசைக் கலந்து கொள்ளாவிட்டாலும், மிக முக்கியமான பிரச்சினையில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக்கட்சித் தலைவர்களையாவது அழைத்து பிரதம மந்திரி சர்வகட்சி கூட்டத்தை கூட்டி அவர்களது கருத்துக்களை அறிந்து இருக்கலாம். அப்படிச் செய்யாதது வருந்தத்தக்கது.

கேள்வி:- கச்சத்தீவு பிரச்சினைக்காக தமிழக அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று .தி.மு..வினர் கூறுகிறார்களே?

கருணாநிதி:- கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்ட இந்திராவை ராஜினாமா செய்யும்படி சொல்ல தைரியம் இல்லாதவர்கள், எங்களைப் பார்த்து ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள்.''

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

பாராளுமன்றத்தில் அமளி - நாளை
நன்றி தினத்தந்தி

No comments: