Monday, July 6, 2009

இலங்கைத் தமிழர் - வரலாற்றுச் சுவடுகள் (25)

இந்திரா - திருமதி பண்டாரநாயகா ஒப்பந்தம்
இலங்கைக்கு கச்சத்தீவு தானம்

இந்தியா
கொடுத்தது - 28.06.1974

********************************

மிழ்நாட்டுக் கடற்கரையில் இருந்து 12 மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை, இலங்கைக்கு இந்தியா தானமாகக் கொடுத்தது. இதற்கான ஒப்பந்தத்தில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கைப் பிரதமர் திருமதி பண்டாரநாயகாவும் 1974-ம் ஆண்டு ஜுன் 28-ந்தேதி கையெழுத்திட்டனர்.

தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து ஏறத்தாழ 12 மைல் தூரத்தில் இருக்கிறது. முன்பு இந்தத் தீவு, ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்களுக்கே சொந்தம் என்று, சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை உரிமை கொண்டாடியது. இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயகா கடந்த ஜனவரி மாதம் டெல்லி வந்திருந்தபோது பிரதமர் இந்திராகாந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார். கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று, அப்போது தீர்மானிக்கப்பட்டது.

"கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம். அதை இலங்கைக்கு தரக்கூடாது'' என்று தமிழக அரசு வற்புறுத்தி வந்தது. முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தபோது இதை வலியுறுத்தினார்.

இப்போது கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது என்று இந்திய அரசு முடிவு செய்துவிட்டது. 28-6-1974 அன்று, கச்சத்தீவு பற்றிய ஒப்பந்தத்தை இலங்கையில் இருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி ஜெயசிங்கே டெல்லிக்கு விமானத்தில் கொண்டு வந்தார். அதில் இந்திரா கையெழுத்திட்டார். அதேபோல, டெல்லியில் இருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி கேவல்சிங், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கைக்கு கொண்டு போனார். அதில் இலங்கை பிரதமர் திருமதி பண்டார நாயகா கையெழுத்திட்டார். இரண்டு பிரதமர்களும் ஒரே நேரத்தில் கையெழுத்து போடுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

கச்சத்தீவு 280 ஏக்கர் பரப்புள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் உள்ளது. அங்கு கிறிஸ்தவ கோவில் ஒன்று இருக்கிறது. ஆண்டுதோறும் கச்சத்தீவில் திருவிழா நடைபெறும்போது, இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் கிறிஸ்தவர்கள் படகுகளில் செல்வார்கள். இருதேசங்களையும் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவுக்கு சென்று மீன் பிடிப்பது உண்டு. அங்கு குடிதண்ணீர் இல்லையாதலால், மக்கள் நிரந்தரமாக வசிக்கவில்லை.

முதல்-அமைச்சர் கருணாநிதியை நிருபர்கள் பேட்டி கண்டு, "கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்கு முன்னால் மாநில அரசின் கருத்து கேட்கப்பட்டதா?'' என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- "இரண்டு வாரங்களுக்கு முன்னால், வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல்சிங் இங்கு வந்தபோது, என்னிடம் அது பற்றி சில விவரங்களை விவாதித்தார். கச்சத்தீவு விஷயத்தில் தமிழ் மக்களுடைய உணர்ச்சியை நான் அவரிடத்தில் விளக்கி இருக்கிறேன்.'' இவ்வாறு கருணாநிதி கூறினார்.

ராமநாதபுரம் ராஜா ராமநாதசேதுபதி நிருபர்களிடம் கூறுகையில், "மத்திய அரசின் முடிவு வருத்தத்தை தருகிறது. கண்ணீர் விட்டு அழுவது தவிர வேறு வழி இல்லை'' என்றார்.

கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றிய அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-தமிழ்நாட்டில் இருந்து 12.5 மைல் தூரத்திலும், இலங்கையில் இருந்து 10.5 மைல் தூரத்திலும் இருக்கும் கச்சத்தீவில் இலங்கையைச் சேர்ந்தவர்களோ, இந்தியாவைச் சேர்ந்தவர்களோ எப்பொழுதும் நிரந்தரமாக குடியிருந்தது இல்லை.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே கச்சத்தீவு, இந்தியாவுக்கு சொந்தமா அல்லது இலங்கைக்கு சொந்தமா என்ற பிரச்சினை இருந்தது. அதன்பிறகு ஒரு தீர்மானமான முடிவு ஏற்படும் வரை கச்சத்தீவை இரண்டு நாடுகளும் சொந்தம் கொண்டாடக்கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இரண்டு நாடுகளும் ஒரு பிரச்சினையை பேசி தீர்க்க முடியாவிட்டால் வேறு யாராவது மூன்றாவது நபர் தலையிட்டு சமரசம் செய்து வைக்க வேண்டும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில், அண்டை நாடு சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையையும் மூன்றாவது நபர் தலையீடு இல்லாமல் நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறது. கச்சத்தீவு பற்றி தமிழ்நாடு, கோவா, பம்பாயிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள பழைய தஸ்தாவேஜ×களின் ஆதாரங்கள் திரட்டப்பட்டன. இந்த ஆதாரங்கள் பற்றி இரண்டு நாடுகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக பேச்சு நடத்தி வந்தனர்.

கச்சத்தீவு அமைந்து இருக்கும் பாக்.ஜலசந்தி பற்றி இரண்டு நாடுகளுக்கும் எல்லைத் தகராறு வரக்கூடாது என்பதற்காக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகி விட்டது. இதுவரை கிடைத்த ஆதாரங்களை வைத்து கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டது நியாயமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.'' மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியா-இலங்கை ஆகிய நாடுகள் இடையே கச்சத்தீவு பற்றி ஏற்பட்ட ஒப்பந்தம் விவரம் வருமாறு:- ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என்றாலும் அந்த தீவுக்கு இந்திய மக்கள் போவதற்கு "பாஸ்போர்ட்'' (அனுமதி) வாங்க வேண்டியது இல்லை. கச்சத்தீவு அமைந்து இருக்கும் கடல் பகுதியில் (பாக் ஜலசந்தி) இரண்டு நாட்டு மீனவர்களும் முன்போல் மீன் பிடிக்கலாம். இரண்டு நாடுகளின் படகுகளும் அந்த பகுதியில் வழக்கம் போல் தடை இல்லாமல் போய் வரலாம். எண்ணைக்கிணறு பாக் ஜலசந்தியில் புதிதாக எல்லை பிரிக்கப்பட்டு இருக்கும் பகுதியை மீறி இந்தியாவோ, இலங்கையோ எண்ணை கிணறு தோண்ட விரும்பினால், இரண்டு நாடுகளும் கலந்து பேசி கூட்டு முயற்சியுடன் எண்ணை வளம் பெருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.'' மேற்கண்டவாறு கூறப்பட்டு இருந்தது.

இந்திராவுக்கு கருணாநிதி கடிதம் - நாளை
நன்றி தினத்தந்தி

No comments: