Monday, June 22, 2009

முதன் முதலாய் காதலித்தபோது...

அடுத்த வாரம் இதே ஞாயிற்றுக்கிழமை திருமணம் என்பதால் புதுமாப்பிள்ளை ஆனந்த் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். திருமண அழைப்பிதழ் யாருக்கும் கொடுக்கப்படாமல் விடுபட்டுபோய்விடக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினான்.

தன்னுடன் பள்ளி, கல்லூரியில் படித்தவர்களின் முகவரியைக்கூட, தூசி படிந்த 'ஆட்டோகிராப்' வாங்கிய நோட்டில் தேடிக் கொண்டிருந்தான். அந்த நோட்டில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு முகவரியையும் எழுத எழுத அவனது கடந்த கால பள்ளி வாழ்க்கை நினைவுக்குள் வந்து சென்றது.

ஒரு பெயரை பார்த்த மாத்திரத்தில் அவனது பேனா எழுத அடம்பிடித்தது. அந்த பெயரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

முத்து முத்தாய் அழகான எழுத்துக்கள்.

" பள்ளி நாட்கள் இவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து போனது எனக்கு ஏமாற்றம்தான். ஆனாலும், உனக்குள் நான் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். எனக்குள்ளும் நீ இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியும். காலங்கள் வேகமாக ஓடினால் என்ன, நாம் சேர்ந்து வாழ்வது ஒரு பொழுதானாலும் எனக்கு அதில் சம்மதமே! அன்புடன் உன் ஆனந்தி...'' என்று, அதில் எழுதப்பட்டு இருந்த எழுத்துக்களை மனதுக்குள் வாசித்த ஆனந்த் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர்த் துளிகள், அந்த அழகான எழுத்துகளுக்கு கசப்பான முத்தம் கொடுத்தன.

மேற்கொண்டு அவனால் அந்த 'ஆட்டோகிராப்' நோட்டை புரட்ட முடியவில்லை. அப்படியே நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.பிறந்த ஊரான குட்டம் என்ற கடற்கரையோர கிராமத்தில் அவன் படித்த அரசு உயர்நிலைப்பள்ளி நினைவுக்குள் வந்து சென்றது.அங்குதான் ஆனந்தும், ஆனந்தியும் ஒன்றாக படித்தார்கள். டீன்-ஏஜ் பருவம் அவர்களை காதலுக்குள் சிக்க வைத்தது. இவர்களது காதல் உடல் அழகைப் பார்த்து வந்தது அல்ல; மனதை பலமுறை படித்து வந்த இனம் புரியாத, அப்பழுக்கற்ற உன்னத காதல்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அவர்கள் இருவரையும் பிரித்தது. அதை விதி எழுதிய தீர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இருவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மேல்நிலை கல்வி பயில வெளியூருக்கு பஸ்சில் சென்றுவர வேண்டும் என்பதால் ஆனந்தியின் படிப்பு 10-ம் வகுப்போடு நின்றுபோனது. ஆனந்த் மட்டும் வெளிïர் சென்று விடுதியில் தங்கிப் படித்தான். விடுமுறையில் கிராமத்துக்கு வந்து போவான்.

அவன் மேல்நிலை பள்ளிக்கல்வியை முடித்ததும், கல்லூரி படிப்பை தொடர 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்துக்கு சென்றான். அதேநேரம், வயதுக்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்று எண்ணிய ஆனந்தியின் பெற்றோர் உடனடியாக திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்து, அவளுக்கு திருமணமும் முடித்துவிட்டார்கள்.

இந்த தகவல் திருமணம் முடிந்த பிறகுதான் ஆனந்துக்கு தெரிய வந்தது. அவனால் கண்ணீர்விட மட்டும்தான் முடிந்தது. மனதுக்குள் ஆலமரமாய் வேர் விட்டிருந்த முதல் காதலை அவனால் எளிதில் பிடுங்கி எறிய முடியவில்லை.

இன்று அவன் சென்னையில் மிகப்பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறான். விரைவில் அவனது மனதில் இன்னொரு பெண் மனைவியாக குடியேறப்போகிறாள். என்றாலும், அந்த மனதின் ஒரு ஓரத்தில் ஆனந்திக்கும் இடம் இருக்கத்தான் செய்கிறது.

திருமணம் ஆன ராமையாவுக்கும், தனது பள்ளிப்பருவ காதலியை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அப்போதே அவ்வளவு அழகாக இருப்பாள் அவரது காதலி. ஒருநாள் அந்த முன்னாள் காதலி வசித்த கிராமத்துக்குச் சென்றார். அங்கே இங்கே என்று விசாரித்து அவளது வீட்டை அடைந்தார்.

கதவை தட்டினார். ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒரு குண்டு பெண் கதவை திறந்தார். 'ரம்யா வீடு இதுதானே?' என்று கேட்டார். அதற்கு அந்த பெண், 'நான்தான் ரம்யா' என்று சொல்ல, 'இல்ல... நான் தேடி வந்த ரம்யா வேற...' என்று கூறிவிட்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தவர்தான், நேராக வீட்டுக்கு வந்த பின்னர்தான் அமைதியானார்.

'நல்லவேளை, நம்ம காதல் கைகூடவில்லை. ஒருவேளை அவளை திருமணம் செய்து இருந்தால் இன்னிக்கு நான் என்ன பாடுபட்டிருப்பேன்?' என்று மனதுக்குள்ளேயே நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டார்.

இன்றைய அவசர உலகில் பலருக்கு கடந்த கால வாழ்க்கையை புரட்டிப் பார்க்க நேரமில்லை. ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அந்த கடந்த கால வாழ்க்கையை சற்று புரட்டினால் அந்த முதல் காதல் அனுபவம் உங்களையும் தழுவிச் செல்லும். இப்படி புரட்டிப் பார்ப்பதை விட்டுவிட்டு, நேராக காதலியை சந்திக்க சென்றால் ராமையாவுக்கு ஏற்பட்ட அனுபவம் உங்களுக்கும் ஏற்படலாம்.


வாழ்க்கையில் இந்த முதல் காதல் தவிர்க்க முடியாத ஒன்று. சிலருக்கு பள்ளிப் பருவத்தில் இந்த அனுபவம் ஏற்படலாம். இன்னும் சிலருக்கு கல்லூரியில் படிக்கும்போது ஏற்படலாம். மிகச்சிலர் பணிக்கு செல்லும் இடத்தில் முதன் முதலாக காதல் வயப்படலாம்.

ஜோடியாக பார்க், பீச், தியேட்டர் என்று சுற்றினால்தான் காதல் என்று அர்த்தமல்ல. ஒருவன் மனதுக்குள் ஒருத்தியோ, ஒருத்தி மனதுக்குள் ஒருவனோ வந்துவிட்டாலே அங்கே காதல் மலர்ந்துவிடுகிறது.

இந்த காதல் நிச்சயமாக நிறைவேறும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு நிறைவேறலாம். பலருக்கு நிறைவேறாமல் போகலாம்.

காதல் நிறைவேறாமல் போனவர்கள் பெற்றோர் பார்க்கும் வரனை திருமணம் செய்து கொள்கிறார்கள். இதில் பிரச்சினை இல்லை. திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தபிறகு முதல் காதலை பற்றியோ, பழைய காதலன் அல்லது காதலியை பற்றியோ பேசும்போதுதான் பிரச்சினையே ஏற்படுகிறது.

அதனால், எக்காரணம் கொண்டும் திருமண வாழ்க்கைக்கு பிறகு, தோல்வியால் முடிவுரை எழுதப்பட்ட காதல் பற்றி துணையிடம் பேசக்கூடாது என்கிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள்.

மேலும், சில கணவன்மார்களும் தங்கள் மனைவியிடம், அவர்களது முதல் காதல் அனுபவத்தைக் கேட்டு தெரிந்துகொண்டு, அவர்களை சித்ரவதை செய்யத் தொடங்கி விடுகிறார்கள். அதேநேரம், பெண்கள் இதுபற்றி கணவன்மாரிடம் பெரும்பாலும் கேட்காவிட்டாலும், அதுபற்றி கணவரே உண்மையை சொல்லிவிட்டால், அவர்கள் மீதான அன்பை குறைத்துக் கொள்கிறார்கள்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் ஒன்று இந்த தகவலை தெரிவிக்கின்றது.

இதுபோன்ற முதல் காதல் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? அதற்கு மனோதத்துவ நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் சில :

நீங்கள் திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவரை காதலித்து இருந்தால், அதுபற்றி துணையிடம் சொல்லி, தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். துணையே அதுபற்றி கேட்டாலும்கூட சொல்லிவிட வேண்டாம். மீறி சொன்னால், அந்த முதல் காதலை காரணம் காட்டி நீங்கள் துன்புறுத்தப்படலாம். அல்லது மகிழ்ச்சியை இழக்க நேரலாம்

உங்கள் முதல் காதலை ஒப்புக்கொண்டால், இனியும் இவள்(ர்) வேறு ஒரு துணையை தேடலாம் என்கிற சந்தேகம் உங்கள் துணைக்கு வந்துவிடும் வாய்ப்புகள் உண்டு.

காதலிக்கும்போது எழுதிய கடிதங்கள், டைரிகள் மற்றும் காதலன் அல்லது காதலி வாங்கிக்கொடுத்த பரிசுப் பொருட்களை பத்திரப்படுத்தி வைக்காதீர்கள். ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவை உங்களை காட்டிக்கொடுக்கலாம்.

முன்னாள் காதலன் அல்லது காதலி உடனான தகவல் தொடர்பை திருமணத்திற்கு பிறகு முற்றிலுமாக நிறுத்திவிடுங்கள். வெளியில் செல்லும்போது சந்திக்க நேர்ந்தால், 'இவர் என் தூரத்து உறவினர்' என்று மட்டும் துணைக்கு அறிமுகம் செய்து, அந்த இடத்தைவிட்டு அகன்று விடுங்கள்.

'இனி நாம் நண்பர்களாக பழகுவோமே' என்று உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலி வற்புறுத்தினால் அதை ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்கள் துணை அருகில் இல்லாதபட்சத்தில், அந்த முன்னாள் காதலனையோ அல்லது காதலியையோ வெளியிடங்களில் சந்திக்கும்பட்சத்தில் 'ஹாய், ஹலோ, எப்படி இருக்கீங்க?' என்பது போன்ற நல விசாரிப்புகளோடு மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்யும் தொழிலில் உங்கள் முன்னாள் காதலனையோ அல்லது காதலியையோ பங்குதாரராகவோ அல்லது பணியாளராகவோ அனுமதிக்க வேண்டாம். மீறி அனுமதித்தால், உங்கள் குடும்ப வாழ்வில் அதுவே பிரச்சினையாக அமையலாம்.

நீங்கள் ஒருதலையாகவே காதலித்திருக்கும் பட்சத்தில், உங்கள் மனதில் பழைய காதல் எண்ணம் இல்லாவிட்டால் அந்த காதலரையோ அல்லது காதலியையோ நண்பராக ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.

மொத்தத்தில், முதல் காதலை மனதுக்குள் அவ்வப்போது புரட்டிப் பார்ப்பதோடு நிறுத்திவிடுங்கள். அதுபற்றி விரிவாக துணையிடம் பேசுவது, உங்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்கலாம்.

என்ன... உங்கள் மனதிலும் முதல் காதல் அலைபாய்கிறதா? பக்கத்தில் மனைவியோ அல்லது கணவனோ இல்லாவிட்டால் அசைபோடுவதோடு திருப்திப்பட்டுக் கொள்ளுங்கள். யாரிடமாவது பகிர்ந்து கொண்டால்தானே பிரச்சினை...!

No comments: