Monday, June 22, 2009

இன்றையப் பத்திரிகை செய்திகள்

இங்கிலாந்தில் தமிழர் பேரணி

இங்கிலாந்தில், லட்சம் பேர் கலந்து கொண்ட தமிழர் பேரணி நடந்தது. போரின் போது காணாமல் போன மக்களை மீட்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் தமிழர் பேரணி நடந்தது. ஹைட்பார்க் கார்னர் என்ற இடத்தில் இருந்து, பேரணி தொடங்கியது. 4 மணி நேரம் நடந்த இந்த பேரணி, எம்பாக்மென்ட் என்ற இடம் வரை சென்று முடிவடைந்தது. இங்கிலாந்து வாழ் தமிழர் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த இந்த பேரணியில் லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், "இலங்கை போரின் போது காணாமல் போன மக்களை மீட்க வேண்டும்; முகாம்களில் வாழும் மக்கள், இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்; இன படுகொலையை நடத்தியவர்களை, நீதியின் முன்பு நிறுத்த வேண்டும்'' என்பது போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள், கறுப்பு உடை அணிந்து இருந்தனர். ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை சித்தரிக்கும் காட்சிகளை கொண்ட பேனர்களையும் எடுத்து சென்றனர்.

ஊர்வலத்தின் முன் சென்ற தமிழர் கலை குழுவினர், வன்னியில் முகாம்களில் நடந்த கொடூரத்தை சித்தரிக்கும் காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டினார்கள்.

இங்கிலாந்தின் மூத்த அரசியல்வாதி டோனி பென், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெரமி கோபன், சைமன் ஹீஸ், மனித உரிமை விரிவுரையாளர் அன்டி ஹிகின் பாட்டம், இடது சாரி சோசலிச கட்சியின் தேசிய அமைப்பாளர் டான் மேயர், ஆக்ட்நோவ் அமைப்பின் ரிம் மார்ட்டின் ஆகியோர் பேரணியின் நிறைவு நிகழ்ச்சியில் பேசினார்கள்.

பேரணியில் தமிழர்கள் தவிர, ஏராளமான பிற மொழி பேசுவோரும் கலந்து கொண்டனர். ஊர்வலம் அமைதியாக நடந்ததாக, பேரணிக்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

***********************************************************************************************************************

மீட்ட பகுதியில் 4 மாதங்களில் தேர்தல் -இலங்கை மந்திரி

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் 4 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டு சட்ட ரீதியான அரசியல் தலைமை உருவாக்கப்படும் என்று இலங்கை சர்வதேச வர்த்தக துறை மந்திரி ஜி.எல்.பெய்ரிஸ் தெரிவித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை ராணுவம் கைப்பற்றி விட்டது. ஏற்கனவே, கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு ஒரு தமிழர் தலைமையில் அரசு அமைந்துள்ளது. இறுதி கட்ட போர் நடந்த வடக்கு மாகாணத்திலும் பல்வேறு நிவாரணப் பணிகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் இலங்கை ஏற்றுமதி மேம்பாடு மற்றும் சர்வதேச வர்த்தக துறை மந்திரி ஜி.எல்.பெய்ரிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்தில் வெளியுறவு இணை மந்திரி மல்லோக் பிரவுன் மற்றும் வெளிநாடு வர்த்தக மந்திரி மார்வின் டேவிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

பின்னர் அமெரிக்கா புறப்படும் முன்பாக லண்டனில் பெய்ரிஸ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விடுதலைப்புலிகளின் தீவிரவாதத்தால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுற்றுலா, மீன்வளம் மற்றும் மேம்பாடு போன்ற துறைகள் பாதிக்கப்பட்டன. விடுதலைப்புலிகளை ஒழிப்பது முடியாத காரியம் என்று கருதப்பட்டது. தற்போது, அதை இலங்கை அரசு நிறைவேற்றி இருக்கிறது. விடுதலைப்புலிகளால் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டன.

இலங்கையில் இருந்த தமிழின அரசியல் தலைவர்களை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஒழித்துக் கட்டினார். அதனால் தமிழ் தலைமையே இல்லாமல் போனது. தற்போது, தமிழர் பகுதிகளில் சட்ட ரீதியான அரசியல் தலைமையை உருவாக்குவதே எங்களுடைய (இலங்கை அரசின்) முக்கிய கடமைகளில் ஒன்றாகும். அதை எட்டும் வகையில், அடுத்த 4 மாதங்களுக்குள் மாகாண அரசை அமைப்பதற்கான தேர்தல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மனித நேய உதவிகளை செய்ய வேண்டி இருக்கிறது. போரில் சிக்கிய இரண்டு லட்சத்து 70 ஆயிரம் தமிழர்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம். அவர்களுக்கு தினமும் 10 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நிவாரண முகாம்களில் மக்களோடு மக்களாக ஏராளமான விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக தெரிகிறது. அவர்களை கண்டிப்பாக அடையாளம் காண வேண்டி உள்ளது.

போரில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மறு நிர்ணயம் செய்வது, அரசியல் நடைமுறையை மறு கட்டமைப்பது போன்ற திட்டங்கள் உள்ளன. இந்த மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி நிதியுதவியை அளிப்பதாக இந்தியா அறிவித்து இருக்கிறது. கடந்த செப்டம்பரில் ரூ.75 கோடி (ஒரு கோடியே 25 லட்சம் பவுண்டு) நிதியை இங்கிலாந்து வழங்கியது. மேலும் ரூ.30 கோடி (50 லட்சம் பவுண்டு) நிதி அளிக்க முன்வந்துள்ளது.

1 comment:

பனையூரான் said...

தொடருங்கள்