Sunday, June 28, 2009

நூறு சதவீத ரிசல்ட்!


"புத்தகங்களைப் படித்து அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், அதே சமயம் வானத்தில் வட்டமிடும் பறவைகளையும், மலைப்பிரதேசங்களில் வளர்ந்துள்ள வண்ணமிகு பூக் களையும் பார்த்து மனதை சாந்தப்படுத்திக் கொள்ளவும் அவனுக்கு சொல்லிக் கொடுங்கள். காப்பியடிப்பதை விட பெயிலாவதே கவுரவம் என்பதை உணர்த்துங்கள். கேட்பவர்கள் பலரும் அந்தக் கருத்து தவறு என்று சொன்னாலும் அவனுடைய சொந்தக் கருத்துக்களின் மீது அவனுக்கு நம்பிக்கை வரட்டும். கூட்டத்தோடு சேராமல் தன்னிச்சையோடு சிந்தித்து பயணிக்கக் கூடிய அறிவாற்றலை அவனுக்கு வழங்குங்கள்.

எல்லோர் பேச்சையும் கேட்கட்டும்; ஆனால் அவற்றில் உண்மை எது என்று வடிகட்டும் வல்லமையை அவனுக்குத் தாருங்கள், துயரத்தில் சிரிக்கவும், கண்ணீர் விடுவது அவமானமல்ல என உணரவும், இனிப்பின் மீது உள்ள அதே பற்றுதல் கசப்பின் மீதும் வரவும் செய்யுங்கள். தன் மூளையை எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் விற் கட்டும்; ஆனால் இதயத்திற்கு விலை பேசக் கூடாது என வலியுறுத்துங்கள்; நிறைய சொல்லியிருக்கிறேன். என்ன செய்ய முடியும் எனப் பாருங்கள். ஏனென்றால், அவன் அவ்வளவு நல்ல பையன்; என் மகன்''- இது தன் மகனுடைய ஆசிரியருக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் எழுதிய கடிதம்.

இன்று இதை எல்லாம் கற்றுக் கொடுக்கும் கல்வியாளர்களுக்கு, "இதுவெல்லாமா அவனுக்கு என்ஜினீயரிங் கட்-ஆப் மார்க்கை பெற்றுத் தரப் போகிறது? அவன் மார்க் எடுத்து கைநிறைய சம்பாதிக்கும் வழியை சொல்லிக் கொடுங்கள். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என பெற்றோரிடமிருந்து டோஸ் தான் விழுகிறது. பிள்ளைகள் எதிர்காலத்தில் குடும்பத்துக்கு பொருளீட்டவும் வேண்டும்; அதே சமயம் நல்ல பண்புகளுடன் வீட்டையும், நாட்டையும் நன்கு வழி நடத்தவும் வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இன்று ஆதரவு குறைந்து வருவது உண்மையே.

'வக்கற்றவருக்கு வாத்தியார் வேலை; போக்கற்றவருக்கு போலீஸ் வேலை' என்பது அக்காலக்கூற்று. மேலெழுந்தவாரியாக நோக்கினால் இந்த வார்த்தைகளுக்கு வேறு மாதிரியான அர்த்தம் தெரியலாம். ஆனால் வாக்கு (சொல், கற்பிக்கும் திறனை) கற்றவர் வாத்தியார்; போக்கு (குற்றவாளிகளின் மனம், செயல் சார்ந்த போக்கை) கற்றவர் போலீஸ் என்பதே உண்மை. அதுவே காலப்போக்கில், நழுவி மாற்றப்பட்டு இவ்வாறு ஆகி விட்டது.

வெள்ளை வேட்டி, கறுப்பு சட்டை, தலைப்பாகை அணிந்து கையில் கம்புடன் வலம் வந்து மேதைகளை உருவாக்கிய அக்கால ஆசிரியர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். மரத்தடியோ, வயல்வெளியோ, தெருவோ, திண்ணையோ எல்லா இடங்களிலும் அறிவாளிகள் விதைக்கப்பட்ட அது ஒரு கனாக் காலம்.

இன்று, காலம் மாறி விட்டது. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஆசிரியர் வேலை செய்யும் சூழல் இன்று இல்லை. வேறு வேலையில் இருந்து திடீரென ஆசிரியர் வேலைக்கு வருவதும், பிடிக்கவில்லை என்றால் ஆசிரியர் வேலையை விட்டு நல்ல சம்பளத்தில் வேறு வேலைக்கு சென்று விடுவதும் இன்றைய கல்வித் துறையின் கசப்பான உண்மை.

மாலையில் சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடலாம்; மாதத்தில் பத்து நாள் லீவு; காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறைகள்; மழையென்றால் லீவு; பந்த் என்றாலும் லீவு- இதனால் பணிச்சுமை இன்றி பணி செய்யலாம் என நினைத்து ஆசிரியர் துறையை ஒரு சிலர் தேடி வருகிறார்கள்.

"வரன் எப்போது வேண்டுமானாலும் அமையலாம். எனவே வேறு வேலை வேண்டாம். வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகி விடு. பாதுகாப்பாக இருக்கும். திருமணம் நிச்சயமாகும் போது வேலையை விட்டுவிடலாம்''- இது பட்டம் படித்து திருமணத்திற்கு காத்திருக்கும் சில பெண்களுக்கு அவர்களின் பெற்றோர் வழங்கும் அறிவுரை.

"இப்போதுதான் திருமணமாகி உள்ளது. எந்த நேரமும் கர்ப்பமாகலாம். அதுவரை பக்கத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை செய்; சீக்கிரம் வந்து வீட்டு வேலைகளையும் பார்க்கலாம். அலைச்சலும் இருக்காது''- இது திருமணமான சில பெண்களுக்கு மாமியார், மாமனார், கணவன் சொல்லும் ஐடியா.

அதனால்தான் இன்டர்விïவில், 'எவ்வளவு சம்பளம்?,' 'சனிக்கிழமை லீவா?', 'கேசுவல் லீவு எத்தனை நாட்கள்?', 'ஒரு நாளில் எத்தனை லெஷர் பீரியட்?', 'மாலையில் கோச்சிங் கிளாஸ் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளதா?,' 'ஒரு வகுப்பில் எத்தனை பேரை பார்த்துக் கொள்ள வேண்டும்?', போன்ற கேள்விகள் பிரதான இடம் பெற்று, 'என்ன வகுப்பு, எந்த பாடம், என்ன இலக்கு' என்ற கேள்விகளெல்லாம் பின்னுக்கு போய் விட்டன என்று வருத்தப்படுகிறார்கள், கல்வியாளர்கள்.

இப்படி 'ஏதோ ஒரு வேலை, ஏதோ சில காலம்' என்ற சூழலில் ஒருவர் ஆசிரியரானால் அவர் மனம் எப்படி பள்ளியில் செட்டிலாகி மாணவர்களுக்கு நல்ல படிப்பையும், பண்புகளையும் கற்பிக்கும் என்பதுதான் மூத்த கல்வியாளர்கள் கேட்கும் கேள்வி.

இதற்கேற்றபடி இன்றைய மாணவர்களும் அன்றுபோல் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். வசிஷ்டருக்கு ராமர் - லட்சுமணன், துரோணருக்கு பாண்டவர்கள், ராமகிருஷ்ணருக்கு விவேகானந்தர் போலெல்லாம் கலியுக மாணவர்கள் அமைவதில்லை. குருவுக்காக கட்டை விரலை எடுத்த ஏகலைவன் போலவும், குரு பெயரையே தன் பெயராக்கிக் கொண்ட டாக்டர் அம்பேத்கர் போலவும் இருக்க வேண்டிய அவசியம் இன்றைய மாணவர்களுக்கு இல்லை என்று கருதுகிறார்கள். ஆன்லைன் குருஜி வந்து விட்டது கூட ஒரு காரணமாக இருக்கலாம்!


வகுப்பில் இருப்பது நாற்பது பிள்ளைகள் அல்ல; நாற்பது குடும்பங்கள். ஒவ்வொரு குடும்பமும் உங்கள் பெயர் சொல்லுமளவுக்கு பணியாற்றுங்கள். இயற்கையாகவே நன்கு படிக்கும் மாணவர்கள் அவர்களே படித்து விடுவார்கள்; பண்புகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். படிக்காத மாணவர்களை படிக்க வைத்து ஜெயிப்பவர்தான் உண்மையான ஆசிரியர்.

இப்போதுள்ள ஆசிரியர்கள் நிலைமையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்று பிரம்பு தான் ஆசிரியரின் ஆயுதம். இன்று மாணவனை அடித்தால் கம்பி எண்ண வேண்டி வரும் எனுமளவுக்கு சட்டங்கள். 'ஐயா வணக்கம்' போய் 'ஹாய் சார்' என அழைக்கும் அளவுக்கு நாகரீக வளர்ச்சி! அன்று மாணவர்களின் பையில் 'கம்' மட்டும்தான் இருந்தது. இன்று 'கன்'னும் இருக்கலாம் என பயப்பட வேண்டி உள்ளது. ஆசிரியர்கள் முறைத்தது அந்தக் காலம்; மாணவர்கள் முறைப்பது இந்தக் காலம்.

ஒரு மாணவனிடத்தில் அடக்கம், இரக்கம், மரியாதை, ஒழுக்கம், நேர்மை போன்ற குணங்களை வளர்க்க ஆசிரியர்கள் தயாராக இருந்தாலும் பத்தாம் வகுப்பு, பிளஸ்-டூ மார்க் íட்டில் இதெல்லாம் பிரிண்ட் ஆவதில்லையே என பெற்றோர் சுட்டிக் காட்டுகின்றனர். எனவே 25 மதிப்பெண்களாவது புத்தகத்திற்கு அப்பாற்பட்ட நல்ல பண்புகளுக்கு வழங்கினால் மட்டுமே நல்ல சமுதாயத்தை நாம் காண முடியும். காந்திஜி, அன்னை தெரசா, விவேகானந்தர், பாரதி, கென்னடி, மண்டேலா போன்ற தலைவர்களும், பில்கேட்ஸ், டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற பணக்காரர்களும் ஸ்டேட் ரேங்க் வாங் கினார்களா என்ன? அல்லது பள்ளிகளில் ஸ்டேட் ரேங்க் வாங்கியவர்கள்தான் இந்த நிலைக்கு வந்து விட்டார்களா? முடிந்த அளவுக்கு மதிப்பெண்கள் எடுக்க வைக்கவும், 'முடியும்' என்கிற அளவுக்கு நல்ல மனிதர்களை உருவாக்கவும் ஆசிரியர்களுக்கு சுதந்திரம் வேண்டும்.

நீ என்னவாக வரப்போகிறாய் என்று வகுப்பில் மாணவர்களைப் பார்த்து ஒரு ஆசிரியர் கேட்டால் 'நல்ல ஆசிரியராக' என்ற பதிலைத்தவிர வேறு அனைத்து பதில்களும் வருகின்றன! 'மணமக்கள் தேவை' விளம்பரங்களில் 'ஆசிரியர் மணமகன் வேண்டும்' என்ற வாசகம் பைனாக்குலரை வைத்து தேடினாலும் கிடைக்காது. பணம், வளம், வசதி என்ற கோணத்தில் பார்க்கும் போது வேறு துறையில் கிடைக்கும் பலன்கள் ஆசிரியர் துறையில் இல்லை என்பதுதான் இதற்குக் காரணம். ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிக்கூடங்கள் இல்லை; பள்ளிக்கூடங்கள் இன்றி மனித இனம் இல்லை. அப்படியென்றால் நாளைய நம் பேரப்பிள்ளைகளின் கதி என்ன என்று நினைத்தாலே உள்ளம் நடுங்குகிறது.

இத்தனைக்கும் மத்தி யில் ஆசிரியர்களாக இருக் கும் அன்பு உள்ளங்களுக்கு நாம் வைக்கும் வேண்டு கோள் ஒன்று தான்.

'லவ் யுவர் ஒர்க்' என்பதுதான் அது. ஆம், இத்தொழிலை நேசியுங்கள்; உலகம் உங்களை நேசிக்கும். வகுப்பில் இருப்பது நாற்பது பிள்ளைகள் அல்ல; நாற்பது குடும்பங்கள். ஒவ்வொரு குடும்பமும் உங்கள் பெயர் சொல்லுமளவுக்கு பணியாற்றுங்கள். இயற்கையாகவே நன்கு படிக்கும் மாணவர்கள் அவர்களே படித்து விடுவார்கள்; பண்புகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். படிக்காத மாணவர்களை படிக்க வைத்து ஜெயிப்பவர்தான் உண்மையான ஆசிரியர். ஒரு நல்ல பள்ளிக்கூடமும் அதுவே. அப்படிப்பட்ட மாணவர்களை ஓரங்கட்டாமல், பெயிலாக்கி வீட்டுக்கு அனுப்பி அவர்கள் குடும் பத்தின் கனவுகளுக்கு வேட்டு வைத்துவிடாதீர்கள்.

இப்படி பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஒரு கட்டத்தில் தவறான பாதையில் சென்று தங்களுக்கும், பிறருக்கும் ஆபத்தை உருவாக்காமல் இருக்க பாடுபடுங்கள். இதுதான் உண்மையில் ஆசிரியர் சமுதாயம் நாட்டுக்குத் தரும் நூறு சதவீத ரிசல்ட். ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளின் நான்கு சுவர்களுக்குள் உள்ளது என்று அறிஞர்கள் சொன்னது இதை வைத்துத்தான்.

No comments: