Friday, June 26, 2009

உலகையே உலுக்கிய இசையின் மரணம்

பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 50. பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். கருப்பர் இனத்தைச் சேர்ந்த இவரது பாப் இசைப் பாடல்களுக்கு உலகமே தலையாட்டியது.

அமெரிக்காவைச் சேர்ந்த இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள சன்செட் போலிவர்ட் என்ற பகுதியில் வசித்து வந்தார். நேற்று இரவு இந்திய நேரப்படி 1 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ரொனால்டு ரீகன் மருத்துவ மையத்தில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவருக்கு பலன் கிடைக்கவில்லை. மயக்க நிலையிலேயே சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். இன்று அதிகாலை 3 மணிக்கு மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மைக்கேல் ஜாக்சனின் திடீர் மரணம் அவரது கோடிக் கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தியாவில் கேபிள் டி.வி. வசதி வரும் முன்பே தன் ஆல்பங்கள் மூலம் இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சிறப்பு மைக்கேல் ஜாக்சனுக்கு உண்டு. இந்தியாவில் அவரது நடனம் மற்ற நாடுகளை விட அதிக வரவேற்பைப் பெற்றது.

அவரது வேகமான அங்க அசைவுகளை, பாரம்பரிய இந்திய நடனத்துடன் கலந்து ஆடும் புதிய நடன வகைகள் தோன்றியது. இந்தியாவில் மைக்கேல் ஜாக்சன் மேடை நிகழ்ச்சிகள் நடத்தாவிட்டாலும், ஆல்பங்கள் மூலம் அவரது பாப் இசை ஆட்டம் ரசனை பரவி இருந்தது.

இதனால்தான் இந்திய நடிகர்களில் சிலர் மைக்கேல் ஜாக்சன் நடனத்தை பின்பற்றினார்கள். மிதுன்சக்கரவர்த்தி முதல் கோவிந்தா வரை பலர் மைக்கேல் ஜாக்சன் பாணியில் படங்களில் நடனம் ஆடி உள்ளனர். சல்மான்கான் மேனே பியர் கியா படத்தில் மைக்கேல் ஜாக்சனை அப்படியே காப்பி அடித்திருந்தார்.

தமிழ் திரை உலகை பொருத்தவரை பிரபுதேவா, தன் எல்லா நடனத்திலும் மைக்கேல் ஜாக்சனை பின்பற்றினார். காதலன் படத்தில் வரும் முக்காலா, முக்காபலா பாடலில் மைக்கேல் ஜாக்சனின் பல பரிமாணங்களை பிரபுதேவா காட்டி இருப்பார்.

இதன் மூலம் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற சிறப்பு பிரபுதேவாவுக்கு கிடைத்தது. இவரைத் தொடர்ந்து பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக்ரோஷனும் மைக்கேல் ஜாக்சன் பாணி நடனத்தை இந்தியாவில் பிரபலப்படுத்தினார்.

மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு தமிழ் நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்:-

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட இரங்கல் செய்தியில், அகில உலக புகழ்பெற்ற பிரபல நடனக்கலைஞரும், பாப் இசை பாடகருமான மைக்கேல் ஜாக்சன் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

பாப் இசையோடு நடனத்தைக் கலந்து பல புதுமைகளை புகுத்தி அழியாத முத்திரை பதித்த ஒரு மாபெரும் கலை பொக்கிஷம். தமிழ் திரையுலகில் பல நடன நடிகர்கள் அவரின் அடிச்சுவட்டை பின்பற்றி புகழடைந்துள்ளனர்.

உலகத்தின் கலை வரலாற்றில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. மாபெரும் கலை வித்தகர். மைக்கேல் ஜாக்சனின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த அஞ்சலி செலுத்து கிறோம்.

நடிகர் விக்ரம்:- மைக்கேல் ஜாக்சன் மறைந்த அதிர்ச்சி செய்தி கேட்டு வருத்தமுற்றேன். என்னுடைய தலைமுறை அவருடனேயே வளர்ந்தது. பிராங்க் சினத்ரா, எல்விஸ் பிரஸ்லி போன்றறோரை காட்டிலும் இசையுலகில் புகழ்பெற்ற மனிதராக திகழ்ந்தார்.

தமிழ், இந்தி திரையுலகில் கூட அவர் பங்கு ஏராளம். நம் திரைப்படங்களின் நடனம், ஸ்டைல்களுக்கு உபயமே அவர்தான்.

பிரபுதேவா:- மைக்கேல் ஜாக்சன் புகழ்பெற்ற பெரிய மனிதர், சிறந்த பாடகர், நடன மேதை, இசையமைப்பாளர். எனக்கு வழிகாட்டி அவர்தான். அவரது நடன ஸ்டைலைத்தான் நான் பிற்பற்றுகிறேன். அவர் மறைந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீளவில்லை. அதற்கு நாளாகும்.

தனுஷ்:- என் நடன ஸ்டைல்களுக்கு வழிகாட்டு பவர் மைக்கேல் ஜாக்சன். நடிகர்களுக்கு புரூஸ்லி எப்படி முக்கியமாக இருந்தாரோ அதுபோல் நடனத்துக்கு மைக்கேல் ஜாக்சன் இருந்தார். அவரைப்பின்பற்றித்தான் நமது நடனங்கள் அமைந்தன.

படிக்காதவன்படத்துக்காக சுவிட்சர்லாந்தில் ஒரு பாடல் காட்சி எடுத்தோம். அதில் மைக்கேல் ஜாக்சன் போல் நடனம் ஆட முயன்றேன். அவர் ஸ்டைலை பின்பற்றாதவர்கள் எவரும் இல்லை. அவர் நிஜமாகவே ஒரு சகாப்தம். அவர் மரணம் அடைந்ததை என்னால் நம்ப முடியவில்லை.

சிம்பு:- உலகம் முழுவதும் அதிர்ச்சியானதுபோல் நானும் அவர் மறைவு செய்தியால் அதிர்ந்தேன். குழந்தையில் இருந்தே என்னை கவர்ந்தவர் அவர்.

டான்ஸ் மாஸ்டர் கலா:- மைக்கேல் ஜாக்சன் இடத்தை எவராலும் பூர்த்தி செய்ய முடியாது. என் ஆழ்ந்த வருத்தங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை.

No comments: