Thursday, June 25, 2009

வணங்காமண் மீண்டும் இலங்கை செல்கிறது


முதல் - அமைச்சர் கருணாநிதி மேற் கொண்ட முயற்சியை தொடர்ந்து, இலங்கை தமிழர்களுக்காக வணங்காமண் கப்பலில் கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்களை ஏற்றுக் கொள்ள இலங்கை அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது. இதற்கான உறுதிமொழியை வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவிடம் ராஜபக்சேயின் தூதர்கள் அளித்தனர்.

இலங்கையில், போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சம் தமிழர்கள் வன்னி பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் 884 டன் உணவு, மருந்து மற்றும் நிவாரண பொருட்களை திரட்டி, 'வணங்காமண்' என்று பெயரிடப்பட்ட கேப்டன் அலி என்ற கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அந்த கப்பலை தங்கள் நாட்டின் கடல் பகுதிக்குள் அனுமதிக்க இலங்கை அரசு மறுத்து விட்டது.

இதனால், வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில், வணங்காமண் கப்பல் சென்னையை நோக்கி வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த கப்பலை சென்னை துறைமுகத்துக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

எனவே, கடந்த 12-ந் தேதி அது சென்னை அருகே நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. 'வணங்காமண்' கப்பலில் இருக்கும் ஊழியர்களுக்கு குடிநீர் தேவைப்பட்டதால், சென்னை துறைமுகத்தில் இருந்து குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு மத்திய அரசை முதல்-அமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு எழுதிய கடிதத்தில்; வணங்காமண் கப்பல் மூலமாக அனுப்பப்பட்டுள்ள நிவாரண பொருட்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளின் மேற்பார்வையில் கப்பலில் இருந்து இறக்க அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என்று அவர் கூறி இருந்தார். அமைச்சர் பொன்முடி டெல்லியில் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேரில் சந்தித்து, முதல்-அமைச்சர் கருணாநிதியின் கடிதத்தை நேரில் வழங்கினார்.

இந்த பிரச்சினை தொடர்பாக, வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கருணாநிதி மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை மத்திய மந்திரி .ராசா நேற்று எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வழங்கினார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட இந்த தீவிர முயற்சிக்கு வெற்றி கிடைத்து உள்ளது. வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரண பொருட்களை ஏற்றுக் கொள்ள இலங்கை அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது.

இலங்கை தமிழர் மறுவாழ்வு குறித்தும், தமிழர்களுக்கு சம அரசியல் அதிகாரங்கள் வழங்குவது குறித்தும் இந்திய அரசுடன் ஆலோசனை நடத்துவதற்காக அதிபர் ராஜபக்சேயின் சகோதரர்களான கோதபய ராஜபக்சே (ராணுவ செயலாளர்), பசில் ராஜபக்சே (அரசியல் ஆலோசகர்) மற்றும் அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோர் அடங்கிய இலங்கை அரசின் உயர்மட்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தனர்

அவர்கள் நேற்று மாலை 5 மணி அளவில் வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினார்கள். அப்போது, இலங்கையில் அடுத்த 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட உள்ள புனர் நிர்மாணம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது பற்றி எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் அவர்கள் விவாதித்தார்கள்.

இந்த சந்திப்புக்கு பின் எஸ்.எம்.கிருஷ்ணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலங்கையின் வட பகுதியில் புலம் பெயர்ந்த மக்களுக்காக 'கேப்டன் அலி' கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்டு வினியோகிக்குமாறு இந்தியா தெரிவித்த யோசனையை இலங்கை அரசின் குழுவினர் ஏற்றுக் கொண்டனர். இந்த நிவாரண பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்.

மேலும், இலங்கையில் புலம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான புணரமைப்பு பணிகள் குறித்து இலங்கை குழுவினருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அடுத்த 6 மாத காலத்தில் அனைத்து அகதி முகாம்களும் அகற்றப்பட்டு, அங்கிருக்கும் மக்கள் அனைவரும் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இலங்கை குழுவினர் தெரிவித்தனர். இதற்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும்.

மாகாணங்களுக்கு குறிப்பிட்ட அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க இலங்கை அரசு தயாராக இருப்பதாகவும் அவர்கள் உறுதி அளித்தார்கள். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியாவின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இலங்கையின் அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

கடந்த 2008-ம் ஆண்டு இந்தியா-இலங்கை அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசின் தூதர்களிடம் வலியுறுத்தப்பட்டது. கச்சத்தீவில் எந்தவித கட்டுமான பணியையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் இலங்கை தெளிவுபடுத்தி இருக்கிறது.

இவ்வாறு வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

இலங்கை அதிபரின் அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்சே கூறியதாவது:-

இந்திய வெளியுறவு மந்திரியுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.

முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்படுகின்றன. அவர்கள் விரைவில் தங்கள் சொந்த இடங்களுக்கு சென்று வசிக்க தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு உள்ளது.

கண்ணி வெடிகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த பணி முடிவடைந்ததும் முகாம்களில் இருப்பவர்கள் அவரவர் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது 6 மாதங்களில் நிறைவு பெறும்.

இவ்வாறு பசில் ராஜபக்சே கூறினார்.

வணங்காமண் கப்பலில் வந்துள்ள நிவாரண பொருட்களை இறக்கி வினியோகிக்க சம்மதித்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு; "கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு உள்ளோம்'' என்று பதில் அளித்தார்.

குறிப்பு: 'வணங்காமண்' கப்பல் மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் தங்களின் முழு ஈடுப்பாட்டையும் செலுத்திய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது அமைப்பு நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை ஈழ மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments: