Tuesday, June 23, 2009

இன்றைய பத்திரிகை செய்திகள்

பிரபாகரன் மரணம் குறித்து சந்தேகங்கள்

பிரபாகரன் மரணம் அடைந்தது எப்படி? என்பது குறித்து இலங்கை ராணுவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடலோரத்தில் உள்ள வெள்ளமுல்லி வாய்க்கால் பகுதியில் கடந்த மாதம் 18, 19 தேதிகளில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. இதில் விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர்.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் பிணமாக கிடக்கும் படங்களை இலங்கை ராணுவம் வெளியிட்டது.

அதன் பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடல்புலிகள் தலைவர் சூசை ஆகியோரும் கொல்லப்பட்டு விட்டதாக ராணுவம் அறிவித்தது. அவர்களில் பிரபாகரனின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் உடல் கைப்பற்றப்பட்ட காட்சிகளை வீடியோவாக எடுத்து ஒளிபரப்பியது.

பின்னர் பிரபாகரனின் முன்னாள் நண்பரான கருணாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து ராணுவத்திடம் சரண் அடைந்தவருமான தயா மாஸ்டர் ஆகியோர் கொழும்பில் இருந்து வன்னி பகுதிக்கு சென்று பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டினார்கள். இதையடுத்து அவர் உடல் பரிசோதனைக்கு பிறகு எரிக்கப்பட்டு சாம்பல் வங்காள கடலில் கரைக்கப்பட்டு விட்டதாக ராணுவ தளபதி பொன்சேகா அறிவித்தார்.

பிரபாகரன் சாகவில்லை என்று முதலில் கூறிவந்த விடுதலைப்புலி இயக்கமும் சமீபத்தில் தனது அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டு, பிரபாகரன் போரில் வீரமரணம் அடைந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டது.

இதையடுத்து பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை ஓய்ந்து விட்டதாக கருதப்படும் நிலையில் இப்போது ராணுவத்தின் தரப்பில் புதிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. பிரபாகரன் எப்படி இறந்தார்? என்பதில் பலவிதமான கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்றும் அவர் ராணுவ தாக்குதலில் உயிர் இழக்க வில்லை, அவருடன் கூடவே இருந்த ஒரு நபர்தான் அவரை சுட்டுக்கொன்று இருக்க வேண்டும் என்றும் ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் `ஏசியன் டிரிபியூன்' என்ற ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

"பிரபாகரனின் மரணம் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக இறுதி கட்ட போரில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளிடம் விசாரித்த போது அவர்கள் சில சந்தேகங்களை வெளியிட்டனர்.

பிரபாகரன் மிக நெருக்கத்தில் இருந்து சுடப்பட்டுள்ளார். அவரை சுட்ட நபர் முன்பக்கத்தில் நின்று சுடவில்லை. பிரபாகரனின் பின் பக்கத்தில் நின்று அவருடைய தலையின் பின்பகுதியில் சுட்டு இருக்கிறார். பிரபாகரன் ராணுவத்துடன் நேருக்குநேர் நடந்த சண்டையில் இறந்து இருந்தால் அவருடைய தலையின் பின் பகுதியில் குண்டு பாய்ந்து இருக்க வாய்ப்பு இல்லை.

பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான, அவருடைய முழுநம்பிக்கைக்கு உரிய, எந்தவித சந்தேகத்துக்கும் உள்ளாகாத ஒரு நபர்தான் இப்படி நெருக்கத்தில் நின்று அவரை சுட்டு இருக்க முடியும்.

ஏனென்றால் பிரபாகரனை சுற்றி 300 பேர் அடங்கிய தற்கொலை படை எப்போதும் காவல் நிற்கும். அவர்களை தாண்டி எந்த நபரும் பிரபாகரனை நெருங்கவே முடியாது. அந்த படையில் உள்ள அனைவரும் பிரபாகரனால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள். அவருடைய முழு நம்பிக்கைக்கு உரிய கமாண்டோ வீரர்கள். அவர்களுடைய செயல்பாட்டில் பிரபாகரன் எள்ளளவுக்கு கூட சந்தேகப்பட்டது இல்லை. எனவே கொலைகாரன் வெளிநபராக இருக்க வாய்ப்பே இல்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ள ஒரு நபரால்தான் பிரபாகரன் கொல்லப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும் முன்பின் தெரியாத ஒரு நபர் பிரபாகரனின் பின் பக்கத்தில் நின்று அவரை சுட்டுக்கொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கமாண்டோ வீரர்களை தாண்டி சென்று பிரபாகரனை நெருங்கக்கூடிய அளவுக்கு அதிகார பலம் உள்ளதோடு பிரபாகரனுக்கு நிழலாக இருக்கக்கூடிய அளவுக்கு செல்வாக்கு பெற்ற ஒருவரால்தான் இப்படி மிகமிக நெருக்கமாக நின்று தலையின் பின்பக்கத்தில் சுட்டு இருக்க முடியும்.

இவ்வளவு தகுதிக்கும் உரிய நபர் யார் என்று ஆய்வு செய்ததில் அவர் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மானாகத்தான் இருக்க முடியும் என்று தெரிய வருகிறது.

பொட்டு அம்மானின் உண்மையான பெயர் சண்முகநாதன் சிவசங்கரன். இவர் உளவுப்பிரிவுக்கு வரும் முன்பு கரும்புலிகள் அமைப்பின் தலைவராக இருந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எத்தனையோ தளபதிகள் இருந்தாலும் பிரபாகரன் பொட்டு அம்மான் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருந்தார். பிரபாகரன் எந்த நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அதை பொட்டு அம்மான் மூலமாகத்தான் செய்து முடிப்பது வழக்கம்.

ஏப்ரல் மாத இறுதியில் விடுதலைப்புலிகளின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், `தமிழ் ஈழ கனவு சீர்குலைந்து போய் விட்டதே' என்று பொட்டு அம்மான் மன வெறுப்பு அடைந்து இருக்க வேண்டும். அந்த கோபத்தில் இருந்த அவர் கடைசி நேரத்தில் தன்னை காப்பாற்றி கொள்ளும் நோக்கத்தில் பிரபாகரனை பின்பக்கத்தில் நின்று சுட்டுக்கொன்று இருக்க வேண்டும். அதன்பிறகு அங்கிருந்து தப்பி சென்று இருக்க வேண்டும். தன்னை காப்பாற்றி கொள்வதற்காக அவர் துரோகியாக மாறி இருக்கிறார்.

பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு யாரோ ஒரு நபர் ராணுவத்துடன் தொடர்பு கொண்டு பிரபாகரன் இறந்து விட்ட தகவலை தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமின்றி பிரபாகரன் உடல் எந்த இடத்தில் கிடக்கிறது என்ற விவரத்தையும் கூறியிருக்கிறார்.

உடனடியாக ராணுவம் சம்பவ இடத்துக்கு சென்று பிரபாகரன் உடலை கைப்பற்றி இருக்கிறது. அப்போது கூட ராணுவம் அது பிரபாகரன் உடல்தான் என்பதை நம்பவில்லை. கருணாவை வரவழைத்து அவர் கருத்தை கேட்ட பிறகே பிரபாகரன் உடலை உறுதி செய்தது.

பொட்டு அம்மான் போரில் இறந்து விட்டதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அவருடைய உடல் இதுவரை கைப்பற்றப்பட வில்லை. அவர் இறந்து விட்டாரா? அல்லது உயிரோடு இருக்கிறாரா? உயிரோடு இருந்தால் எங்கே இருக்கிறார்? அவருடைய நோக்கம் என்ன? என்பது விடை காண முடியாத கேள்விகளாக உள்ளன.''

இவ்வாறு செய்தியில் கூறியிருக்கிறது.

***********************************************************************************************************************

இலங்கை அதிபர் பதவி காலம் நீட்டிப்பு கிடையாது

லங்கை அதிபர் ராஜபக்சேயின் பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. இதற்கிடையே, தேர்தலை நடத்தாமல் அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காக இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிபர் பதவி காலத்தை அதிகரிப்பதற்கான திருத்தம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

அந்த தகவலை இலங்கை அரசு மறுத்துள்ளது. இது குறித்து தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுரா பிரியதர்சனா கூறுகையில், "அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, மக்கள் தீர்ப்பு மேல் நம்பிக்கை வைத்துள்ளது. வாக்காளர்களின் உரிமையை மதிக்கிறது. எனவே, தேர்தல் மூலமாக மக்கள் அளித்த பதவி காலத்தை நீட்டிக்கும் எண்ணம் எதுவும் கிடையாது'' என்று தெரிவித்தார்.

***********************************************************************************************************************

சென்னை அருகே கடலில் நிற்கும் இலங்கை நிவாரண பொருள் கப்பல் திருப்பி அனுப்பப்படுமா?

சென்னை துறைமுகத்துக்கு வெளியே நிற்கும் கேப்டன் அலி கப்பல் திருப்பி அனுப்பப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு வழங்குவதற்காக ஐரோப்பாவில் வசிக்கும் தமிழர்கள் சேர்ந்து நிவாரண பொருட்களை அனுப்பினர். 884 டன் எடையுள்ள அந்த நிவாரணப் பொருட்களை, வணங்காமண் என்று பெயரிடப்பட்ட கேப்டன் அலி என்ற கப்பல் கொண்டு வந்தது.

ஆனால் அந்த கப்பல் இலங்கை கடல் பகுதியில் நுழைய இலங்கை அரசு அனுமதி மறுத்துவிட்டது. எனவே சரக்குகளை இறக்குவதற்கு இடமில்லாத நிலையிலும் மற்ற துறைமுகங்களுக்குள் நுழைய முடியாத சூழலிலும் இந்தக் கப்பல் தவித்தது.

சென்னையை நோக்கி வந்த அந்த கப்பல் கடந்த 12-ந் தேதி சென்னை துறைமுகத்துக்கு வெளியே 5 கடல் மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டது. இந்தக் கப்பலில் உள்ள பொருட்களை இலங்கைத் தமிழர்களிடம் சேர்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் தண்ணீரின்றி தவித்த அந்தக் கப்பலில் ஊழியர்கள் 15 பேருக்கு மனிதாபிமான அடிப்படையில் துறைமுகத் தலைவர் கே.சுரேஷ் 17-ந் தேதி 200 லிட்டர் தண்ணீர் அனுப்பி வைத்தார். மேலும் ஏதாவது உதவி கேட்டாலும் அதை செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார். அதன் பிறகு இதுவரை வேறு உதவிகளை கப்பல் சிப்பந்திகள் கேட்கவில்லை என்று துறைமுக வட்டாரம் கூறியது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் சென்னை துறைமுகத்துக்கு கேப்டன் அலி கப்பலை கொண்டு வரும் முயற்சியில் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு உள்ளது. அவர்களிடம் இருக்கும் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டது. நிவாரணப் பொருட்கள் யாருக்கு அனுப்பப்படுகிறது என்ற விவரம் அடங்கிய ஆவணம், பொருள் அனுப்புவதற்கான அறிவிப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இருந்தால் மட்டுமே ஒரு துறைமுகத்துக்குள் கப்பல் அனுமதிக்கப்படும்.

ஆனால் இவை எதுவும் அந்தக் கப்பலில் இல்லை. எனவே சென்னை துறைமுகத்துக்குள் நுழைவதற்கு சிறப்பு அனுமதி எதையாவது பெற்றால் மட்டுமே அது சாத்தியமாகும். ஆனால் அதற்கு மத்திய அரசு சாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை. எனவே வணங்காமண் ஐரோப்பாவுக்கே திருப்பிச் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

No comments: