Monday, June 22, 2009

இருத்தலின் அவசியம்
















காற்றும்
வெளிச்சமும்
நுழையவிடாமல்
கதவு சன்னல்களை
மூடிக்கொள்கிறார்கள் பலர்.

எப்போதும் பூட்டிய மாதிரி
இருக்கும் வீடுகளில்
என்ன இருக்குமோ / நடக்குமோ
எனும் ஐயம் சிலருக்கு.

சில கதவுகள் திறந்திருந்தாலும்
பூட்டிய மாதிரித்தான்;
உள் இருப்பை அறிய முடிவதில்லை

வெப்பமோ குளிரோ
உள்ளிருப்பின் அவசியத்தை
உலகுக்கு அறிவிப்பவர் யார்?

வீடு வாசல் பற்றிய
மர்மங்கள் நிறைந்த முடிச்சுகளாய்
கற்பனைகள் கரையும்
வெளியே பார்க்கிறவர்களுக்கு.

தெருவின் அத்தனை வீடுகளிலும்
வீட்டின் அத்தனை கதவுகளுக்குள்ளும்
நடப்பவை ஆயிரம் இருப்பினும்
அறியவேண்டியது அவசியம்
அல்லது இல்லாமலும் போகலாம்
புறத்தே நின்று பார்ப்பவர்க்கு.

என்றாலும்
இருப்பைத் தொலைக்காமல்
இருக்கும் வீடுகளில்
இரும்புக் கதவுகளின் இடுக்குகளில் கூட
இளைந்தோடித் திரும்பும் சிட்டுக் குருவிகளை
தடுத்து நிறுத்தி சிறைப்படுத்த
முடிவதில்லை நம்மால்.

அவைகள் காற்றோடும் பேசிக்கொண்டு
இருத்தலையும் காட்டிக்கொடுக்கின்றன.

விழி.பா.இதயவேந்தன்.

No comments: