Sunday, June 21, 2009

வளம் பெறுவோம்.. நலம் பெறுவோம்!


"நாளை ஒரு நாள் மட்டும் ஐம்பது சதவீத தள்ளுபடி'' என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அந்தக்கடை முன்பு அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. அதில் நடுத்தர வயது கொண்ட ஒருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே செல்ல முனைந்தார். ஆனால் கூட்டத்தினர் அவரை `கிïவில் வா' என்று பிடித்து, இழுத்து பின்னுக்குத் தள்ளினர். நான்கு முறை முயன்றும் அவரால் முன்னோக்கி நகர முடியவில்லை. உடனே, ``போங்கள், எனக்கென்ன வந்தது. இன்று நான் கடையைத் திறக்கப்போவதில்லை'' என்று கூறிக்கொண்டு அவர் சாவியுடன் திரும்பிப்போய் விட்டார்.

சிறந்த பொருள், குறைந்த விலையில், நிறைந்த தரத்தில் கிடைக்கிறது என்றால், அப்பொருளுக்கு எல்லா நாட்டிலும் போட்டிதான். ஆனால் `சீப் அண்டு பெஸ்ட்' எனப்படும் மலிவான விலையில், நல்ல பொருள்களை வாங்குவது என்பது எந்த நாட்டிலும் நடக்காத காரியம் என்பது தான் பொருளாதாரத்தின் பிரதான தத்துவம். சரியான விலை இல்லையேல் தரமான பொருட்களை எப்படி உற்பத்தி செய்ய முடியும்?

தரமான பொருட்களை வாங்க நமக்கெல்லாம் `பர்சேசிங் பவர்' எனப்படுகிற வாங்கும் சக்தி தேவை. `இந்த சக்தி எங்களிடம் இல்லவே இல்லை' என்று நம் நாட்டில் 70 சதவீத மக்கள் கையை விரிக்கிறார்கள். இதில் மலிவு விலைப் பொருட்களைக்கூட வாங்கி பயன்படுத்த முடியாதவர்களாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் 42 சதவீதத்தினர்.

இது கம்ப்ïட்டர் யுகம்தான். எனினும் நம் நாட்டில் 78 சதவீத வீடுகளில் இன்னும் கம்ப்ïட்டர் இல்லை. மக்களின் சராசரி வருமானம் உயர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், வருமானம் எட்டடி பாயும்போது, விலைவாசி பதினாறு அடி பாய்ந்து ஏழைகளை எழும்பவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. இதனால் தான் விலை குறைவு- தள்ளுபடி என்ற உடன், எங்கே என்று கேட்டு ஓடும் நிலையில் மக்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

`ஏழைகள் வாழும் பணக்கார நாடு இந்தியா' என்று நமக்கு ஒரு பெயருண்டு. உலகின் `டாப் 10' செல்வந்தர்களில் 4 பேர் இந்தியர்கள் என்பது ஒருபுறம். ஏழைகள் இன்றும் ஏழைகளாக இருந்து கொண்டிருப்பது இன்னொருபுறம்.


நம் நாட்டில் சராசரி தனி நபர் வருமானமாக (பெர் கேப்பிட்டா இன்கம்) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது 3 ஆயிரம் ரூபாய். அதாவது ஐந்து பேர் வாழும் ஒரு குடும்பத்தின் மாத வருமானம் ரூ.15,000 என்கிறது கணக்கு. ஆனால் ஒரு குடும்பம் ரூ. 25 ஆயிரம் சம்பாதிக்கிறது. இன்னொரு குடும்பம் ரூ.5 ஆயிரம்தான் சம்பாதிக்கிறது. அதனால் நம்நாட்டில் பொருளாதார மேடு, பள்ளங்கள் நிறைந்து கிடக்கின்றன.

நமது நாட்டில் இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வு இருப்பதால்தான் பொருட்கள் எக்ஸ்போர்ட் குவாலிட்டி, லோக்கல் குவாலிட்டி' என்று தரம் பிரிக்கப்படுகிறது. நம்மால் ஏற்றுமதித் தரத்தில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாது என்பது ஒரு காரணமாக இருந்து கொண்டிருக்கிறது. பெரிய இறால் மீனையும், முழு முந்திரிப் பருப்பையும் நம் சந்தைகளில் பார்ப்பது அபூர்வம். இவை எல்லாம் வசதி படைத்தவர்கள் வாழும் நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

`தங்கம் எடுத்த கை.. அது தங்கம் பார்த்ததா?' என்றார் கவியரசு கண்ணதாசன். இந்த மண்ணில் கிடப்பதை, இந்த மண்ணில் விளைவதை, இந்த மண்ணில் பிறந்தவர்கள் பலர் வாங்கி சாப்பிட முடியாமல் போவது துர்அதிர்ஷ்டமே.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் `எக்ஸ்போர்ட் குவாலிட்டி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் வேறு. எது அந்நாட்டு மக்களுக்குத் தேவையில்லையோ அல்லது மீதம் இருக்கிறதோ அதுவே அங்கு எக்ஸ்போர்ட் குவாலிட்டி என்று கூறப்படுகிறது. தரம் குறைந்த கோதுமையும், வலு குறைந்த ராணுவத் தளவாடங்களும் ஏழை நாடுகளுக்கு அனுப்பப்படுவதை அமெரிக்காவே ஒப்புக் கொண்டிருக்கிறது.

உலகிலேயே அதிகமாக `குடிக்கும்' நாடுகளைக் கொண்டது, ஐரோப்பிய கண்டம். குடும்பமாகவோ, தனியாகவோ அல்லது உணவுடன் கலந்தோ மது அருந்துவது அங்கு பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் உள்ளது. ஆனால் `டிரங்கன் கண்டிஷன்' என்றழைக்கப்படும் குடித்து, தலைசுற்றி, விழுந்து தள்ளாடும் காட்சிகள் அங்கு இல்லை. காரணம் உயர்ந்த விலையில், நல்ல தரத்தில் கொஞ்சமாக பருகி அவர்கள் தப்பித்து விடுகிறார்கள். ஆனால் இங்கு நம்மவர்கள் படு(த்து)ம் பாட்டைச் சொல்லவே வேண்டாம்.

தரமான பொருட்களை உற்பத்தி செய்து விற்கமாட்டோம் என்று இங்கு எந்தத் தயாரிப்பாளரோ, விற்பனையாளரோ சொல்வதில்லை. ஆனால் வாங்கத்தான் ஆளில்லை. ஏனென்றால், வாங்குவதற்கு வசதி இல்லை. வசதி உள்ள முப்பது சதவீதத்தினருக்காக மட்டும் வியாபாரம் செய்வது என்பது வணிகத்துறைக்கு சாத்தியமற்ற விஷயம்.

உதாரணமாக, லண்டனில் நல்ல தரத்துடன் நூறு ரூபாய்க்கு விற்கப்படும் அரை லிட்டர் குளிர்பானம் இங்கு `ஏதோ தரத்தில்' பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாம் நூறு ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராக இருந்தால், இப்போது கிடைப்பதைவிட இன்னும் தரமான குளிர்பானங்களை உற்பத்தியாளர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். அதெல்லாம் போணியாகாது என்பதால்தான் நம் வாங்கும் சக்திக்கேற்ற பொருட்கள் இங்கே தயார் ஆகிறது.

நாம் உண்ணும் உணவில் தரமில்லையென்றால் உயிருக்கே ஆபத்து என்பதைக் கூட மறந்து போகும் அளவுக்கு வாங்கும் சக்திக்கு இங்கே பஞ்சம். மலிவான விலையில் கிடைக்கும் எல்லா உணவுகளிலும் உடலைக் கெடுக்கும் அம்சங்கள் நிறைந்துள்ளது நாம் எல்லோரும் அறிந்ததே. இருப்பினும் அதை வாங்கி சாப்பிட்டு, வகை வகையான நோய்களினால் அவதிப்பட்டு, பின் வேறுவழியின்றி மிச்சப்படுத்த நினைத்த பணத்தை ஆஸ்பத்திரிக்கு செலவு செய்து, அப்படியும் குணமாகாமல் சிலர் மாண்டு போகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ஏழ்மைதான் என்பதை இந்நாட்டின் எதிர்கால மன்னர்கள், தலைவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வாங்கும் சக்தி குறைவாக இருப்பதினால், `புவர் டயட்' காரணமாக இந்தியாவில் இப்போதும் கர்ப்பிணிப் பெண்கள் இறந்துபோய்க் கொண்டிருப்பதாக ïனிசெப் நிறுவனம் தெரிவிக்கிறது. பல கர்ப்பிணிகள் இருக்கும் கொஞ்ச உணவையும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தங்கள் வயிற்றில் ஈரத்துணி போர்த்தி படுத்து விடுவதால் இந்த மரணம் நேர்வதாக ïனிசெப் சொல்கிறது. ``சொல்லத் துடிக்குதடா நெஞ்சம்; வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம்?'' என்று பாரதி அன்று பாடிய வரிகள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பொருந்துமோ என அஞ்ச வேண்டியதிருக்கிறது.

நம்மவர்களின் வாங்கும் சக்தியில் இருக்கும் பலவீனத்தை கருத்தில் கொண்டு சீனா போன்ற நாடுகள் மலிவான, தரம் குறைந்த பொம்மைகள், அலங்கார பொருட்கள், மொபைல் போன்கள், சூட்கேஸ்கள் போன்றவற்றை இங்கு விற்பனை செய்து நல்ல காசு பார்க்கின்றன. ஆனால் இப்பொருட்கள் மிக விரைவாகவே ரிப்பேராகி தண்டமாகி விடுகிறது. இருக்கும் கொஞ்ச பணமும் எப்படியெல்லாம் விரயமாகிறது பாருங்கள்.

இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் இன்றைய இளைஞர்கள் நாட்டின் மீது, குடும்பத்தின் மீது அக்கறை கொண்டாக வேண்டும்.

ஐந்து முறை மட்டும் பயன்படுத்தவேண்டிய ஷேவிங் பிளேடை வருமானம் கருதி ஐம்பது முறை பயன்படுத்தி முகத்தை கரியாக்கிக் கொள்ளும் நிலையில் தங்கள் தந்தைகள் இருப்பதை மகன்கள் உணர்ந்து, உழைத்து, படித்து, சம்பாதித்து தத்தம் குடும்பத்தின் வாங்கும் சக்தியை உயர்த்த உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

டூவீலரில் கண்ணாடி உடைந்தாலோ, படுக்கும் கட்டில் ஆட்டம் கண்டு சத்தம் போட்டாலோ, வீட்டுக்கதவு விரிசல் கண்டாலோ, ஓடும் மின்விசிறி வேகம் குறைந்து ரீங்காரமிட்டாலோ, எப்போதோ வாங்கிய டி.வி. நகைச்சுவை காட்சிகளையும் சோகமாகக் காட்டினாலோ, இவையனைத்தையும் உடனே மாற்றும் பொருளாதார வல்லமை எல்லாக் குடும்பங்களுக்கும் கிடைக்க வேண்டும். இதற்கு வீட்டில் சம்பாதிக்கும் சக்தி எல்லோருக்கும் இருக்க வேண்டும். குறிப்பாக படிக்கும் மாணவர்கள் தங்கள் குடும்பங்களின்மீது பற்றுதல் கொண்டு வேலை பார்க்க முன்வர

வேண்டும்.ஒரு நாட்டில் எல்லா மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ, கீழே இருப்பவர்கள் பொருளாதாரத்தில் மேலே ஏறி வர வேண்டும். மேலே இருப்பவர்கள் ஏழைகளுக்கு உதவ மனதளவில் கீழே இறங்கி வர வேண்டும். அதே சமயம் இன்னொருவர் உதவியைப் பெற்றே முன்னுக்கு வந்துவிடலாம் என்ற சோம்பல் உணர்வு போயாக வேண்டும். ஒரு ஏழை, செல்வந்தராக மாற அந்த ஏழைக்குடும்பத்தின் உழைப்புதான் பெரும் காரணமாக இருக்க வேண்டும்.

எனவே நாடு முன்னேற வேண்டுமென்றால் குடும்பங்கள் முன்னேற வேண்டும். குடும்பங்கள் முன்னேற, ஏழ்மை ஒழிந்து மக்களிடையே வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும். அதற்கு குடும்பங்களில் உள்ள இளைய தலைமுறையினர் வீறுகொண்டு எழ வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அண்ணன்கள், தம்பிகள், அக்கா, தங்கைகள் போட்டி போட்டு உழைக்க வேண்டும். போதும் போதும் எனுமளவுக்கு பொருளீட்ட வேண்டும். வாங்கும் சக்திக்கு ஏங்கும் நாடு இதுவல்ல என்பதை செயலளவில் காட்ட வேண்டும். எல்லோரும் முதல்தரமான பொருட்களையே வாங்கும் நிலை ஏற்பட்டு இரண்டாம்தர, மூன்றாம்தரப் பொருட்களை சீண்டுவோர் இல்லை எனுமளவுக்கு இந்தியா வளம் பெற வேண்டும்; நலம் பெற வேண்டும்.

-பாபு புருஷோத்தமன்

No comments: