Monday, June 29, 2009

இலங்கைத் தமிழர் - வரலாற்றுச் சுவடுகள் (21)

திருமதி பண்டாரநாயகா பிரதமர் ஆனார்
"சிங்களம்தான் ஆட்சி மொழி" என்று பிரகடனம்
*************************************************

ண்டாரநாயகா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் ஆன தகனாயகே ஆட்சி 6 மாதம் மட்டுமே நீடித்தது.

கட்சிக்குள் மோதல் ஏற்பட்டதால், ஆட்சி கவிழ்ந்தது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது.

பண்டாரநாயகா கொல்லப்பட்டதால், அவருடைய "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி" க்கு ஆதரவாக நாடு முழுவதும் அனுதாப அலை வீசியது.

1960 -ல் நடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகத்தான வெற்றி பெற்றது.

பண்டாரநாயகாவின் மனைவி திருமதி சிறிமாவோ பண்டாரநாயகா, பிரதமாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையுடன் 1960 ஜூலை 21 -ந்தேதி பதவி ஏற்றார்.

இவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை, எனவே இலங்கை மேல் - சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

திருமதி பண்டாரநாயகாவின் ஆட்சியில் மிக முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1961 ஜனவரி 1-ந்தேதி முதல் இலங்கை முழுவதும் சிங்களம் மட்டும்தான் ஆட்சி மொழி என்று உத்தரவிடப்பட்டது.

"நாடு முழுவதும் நீங்கள் சிங்களத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழர்கள் வாழும் பகுதிகளில் மட்டும், கோர்ட்டு நடவடிக்கைகளையும், அரசாங்க அலுவலக வேலைகளையும் தமிழில் நடத்த அனுமதியுங்கள்" என்று செல்வநாயகத்தின் தமிழரசு கட்சி கேட்டுக்கொண்டது. இதை, சிங்களர் கட்சிகள் ஏற்கவில்லை. இதுகுறித்து பாராளுமன்றத்தில் தமிழரசு கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை, சிங்களக் கட்சிகள் தோற்கடித்தன.

சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டத்தை எதிர்த்து, அகிம்சை வழியில் போராட்டம் நடத்த தமிழரசு கட்சி முடிவு செய்தது. இந்த சட்டத்தை எதிர்த்து, ஜனவரி 2 -ந்தேதியன்று தமிழர் பகுதிகளில் முழு அடைப்பு ("பந்த்") அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடந்தது. இதை சிங்கள அரசு கண்டுக் கொள்ளவில்லை. சிங்களத் திணிப்பை தீவிரப்படுத்தியது.

பிரவரி 20 -ந்தேதி யாழ்ப்பாணத்தில் உள்ள அரசு அலுவலகத்தின் முன், செல்வநாயகமும், தமிழரசு கட்சியின் தொண்டர்களும் "சத்தியாகிரக" போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து, சிங்களச் சட்டத்துக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார்.

யாழ்ப்பாணத்தில் தொடங்கிய இந்த போராட்டம், தமிழர்கள் வாழும் இதர பகுதிகளுக்கும் பரவியது.
திரிகோணமலையில் போட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினார்கள். இதில் படுகாயம் அடைந்த ஏகாம்பரம் என்ற தமிழர் மரணம் அடைந்தார். இதனால் செல்வநாயகம், அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். "அஹிம்சை போராட்டத்துக்கு அரசாங்கம் பணிய மறுப்பதால், சட்ட மறுப்பு போராட்டத்தைத் தொடங்குவோம்" என்று அறிவித்தார்.

ஏப்ரல் 14 -ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று, அவர் அரசு தபால் நிலையத்துக்குச் சென்றார். தபால் அதிகாரி (போஸ்ட் மாஸ்டர்) இருக்கையில் அமர்ந்து, தபால் தலைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
அரசாங்கத்துக்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்தன.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 17 -ந்தேதி, "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது.
செல்வநாயகமும், தமிழரசு கட்சியின் மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். தொண்டர்களும் வேட்டையாடப்பட்டனர்.

தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தியவர்களை ஒடுக்க, ராணுவம் பயன்படுத்தப்பட்டது. போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ராணுவம் ஒடுக்கியது.

செல்வநாயகமும் மற்றும் 8 பேர்களும் 6 மாதங்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் 3 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவித்தனர்.

தமிழ்ப் பள்ளிக்கூடங்களை அரசுடமை ஆக்கி சிறிமாவோ உத்தரவிட்டார். அந்தப் பள்ளிக்கூடங்களில், சிங்கள இனத்தின் வரலாறு போதிக்கப்பட்டது. புத்த மதத்தின் சிறப்பை விளக்கி பாடம் நடத்தப்பட்டது.

தமிழர்கள் இதை எதிர்த்த போதிலும் பலன் ஏதும் இல்லை. சிங்களப் பகுதிகளில் இருந்த பல தமிழ்பள்ளிகள் மூடப்பட்டன. பல பள்ளிகள் சிங்களப் பள்ளிகளாக மாற்றப்பட்டன. தமிழர்களின் குழந்தைகள் சிங்களம் படித்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் 1961 டிசெம்பரில் புது உத்தரவு ஒன்றை சிறிமாவோ பிறப்பித்தார். "அரசு ஊழியர்கள், வேலையில் நீடிக்க வேண்டுமானால், சிங்களம் படிக்க வேண்டும். சிங்கள மொழியில் புலமை பெறவேண்டும். அப்போதுதான் வேலையில் நீடிக்கமுடியும்" என்பதே அந்த உத்தரவு !

சிங்களம் படிக்க விரும்பாத தமிழ் ஊழியர்கள், மலேசியா, கானா, நைகீரியா, ஜாம்பியா முதலிய நாடுகளில் வேலை தேடிக்கொண்டு, இலங்கையை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

தமிழர்கள் புதிதாக அரசு வேளையில் சேர முடியாத நிலைமை ஏற்பட்டது. சிங்களம் தெரிந்தவர்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

இலங்கையில், பிராஜா உரிமை மறுக்கப்பட்டு, "நாடற்றவர்கள்" என்று அறிவிக்கப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்ந்திருந்தது.


அவர்களை இந்தியா ஏற்கவேண்டும் என்று சிறிமாவோ வலியுறுத்தத் தொடங்கினார். அப்போது இந்தியாவின் பிரதமராக நேரு இருந்தார். சிறிமாவோவின் கோரிக்கையை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினரை ஏற்றுக் கொள்ள நேரு சம்மதித்து விட்டதாக, பத்திரிகையில் செய்தி வெளியாகியது. அதைப் பார்த்து நேரு கோபம் அடைந்தார்.

"இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் பிரஜா உரிமை தரவேண்டும். அவர்களை ஆடு - மாடு போல் கருதி சிங்கள அரசு பேச்சு நடத்த முயன்றால், நான் சம்மதிக்க மாட்டேன்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

இந்த நிலையில் 1964 மே 27 -ந்தேதி நேரு காலமானார்.

சாஸ்திரியுடன் சிறிமாவோ ஒப்பந்தம் - நாளை
நன்றி தினத்தந்தி

No comments: