Friday, June 26, 2009

இலங்கைத் தமிழர் - வரலாற்றுச் சுவடுகள் (20)


இலங்கை பிரதமர் பண்டாரநாயகா கொலை
புத்த
சாமியார் 6 முறை சுட்டான்
- 26.09.1959
*********************************************

இலங்கைப் பிரதமர் பண்டாரநாயகா சிங்கள புத்தப் பிட்சு ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். பண்டாரநாயகா பிரதமர் ஆவதற்கு புத்த பிட்சுகளும் சிங்களர் கட்சிகளும் ஆதரவாக இருந்தனர்.

இந்நிலையில் தமிழ் பகுதிகளில் வாழ்கிறவர்கள் அரசாங்கத்துடன் தமிழில் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளலாம் என்று சட்டம் இயற்றியதால் புத்தப் பிட்சுகளும் சிங்கள வெறியர்களும் ஆத்திரம் அடைந்தனர்.

1959 செப்டம்பர் 25 ந்தேதி காலை சுமார் பத்து மணிக்கு தன்னைக் காண வந்தவர்களுக்கு பேட்டியளிக்க வெளியே வந்தார் பண்டாரநாயகா. வெளியே பெரிய கூட்டம் கூடியிருந்தது.

எல்லோரையும் பார்த்து பண்டாரநாயகா கைக் கூப்பி வணங்கினார். பிறகு தன் அறைக்கு திரும்பி ஒவ்வொருவராக அழைக்க எண்ணினார். அவர் திரும்பவதற்குள் கூட்டத்தில் இருந்த புத்த சாமியார் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு பண்டாரநாயகாவைச் சுட்டான்.

ஆறு குண்டுகள் சீறிப் பாய்ந்தன மார்பிலிருந்து ரத்தம் பீறிட பண்டாரநாயகா கீழே சாய்ந்தார்.

பண்டாரநாயகாவின் உதவியாளர் ஒருவர் மீதும் குண்டு பாய்ந்து, படு காயம் அடைந்தான்.

பண்டாரநாயகாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள்.

அவரைத் துப்பாக்கியால் சுட்ட புத்த சாமியாரை அருகில் இருந்தவர்கள் சூழ்ந்துக் கொண்டு அடித்து நொறுக்கினார்கள். போலீசார் விரைந்து வந்து சாமியாரை கைது செய்து ஜெயிலுக்கு கொண்டுப் போனார்கள்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகப்பட்ட பண்டாரநாயகாவிற்கு அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது உடலில் 4 குண்டுகள் பாயந்திருந்ததை டாக்டர்கள் கண்டுப்பிடித்தனர்.

ஒரு குண்டு வயிற்றில் பாய்ந்து இருந்தது. மற்றொரு குண்டு கல்லீரலைத் துளைத்திருந்தது.

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தாலும் மரணப் படுக்கையில் இருந்தவாறே அவர் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

"ஒரு முட்டாள் என்னை சுட்டுவிட்டான். பொதுமக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். அவனை பழிவாங்க கூடாது. நெருக்கடியான இந்த தருணத்தில் எல்லோரும் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் பிழைத்து எழுந்து மீண்டும் மக்களுக்கு சேவை செய்வேன் என்று நம்பிக்கை இருக்கிறது" என்று அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அவர் நம்பிக்கை வீணாயிற்று. மறுநாள் (26 ந்தேதி ) காலை எட்டு மணிக்கு அவர் மரணம் அடைந்தார். உயிர் பிரியும் போது மனைவி சிறிமாவோ பண்டாரநாயகா மற்றும் குழந்தைகள் முக்கிய அமைச்சர்கள் அருகில் இருந்தனர்.

பண்டாரநாயகா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இலங்கையை மட்டுமல்ல உலக நாடுகளையெல்லாம் அதிர்ச்சி அடைய செய்தது. கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

இந்திய பிரதமர் நேரு ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஆகியோர் அனுதாப செய்தி விடுத்தனர்.

பண்டாரநாயகாவின் மரணத்தை தொடர்ந்து இலங்கை மந்திரி சபை கூட்டம் நடந்தது. தற்காலிக பிரதமராக மூத்த மந்திரி தசனாயகா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

பண்டாரநாயகா இறக்கும் போது வயது அறுபது. அவர் 1899 ஆம் ஆண்டு ஜனவரி 8 ந்தேதி பிறந்தார். லண்டனுக்குப் போய் சட்டம் படித்தார். வழக்கறிஞராக பணி புரிந்தார்.

1927 -ல் அரசியலில் ஈடுப்பட்டார். 1931 -ல் இருந்து இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். 1936 ஆம் ஆண்டு முதல் மந்திரியாக இருந்து வந்தார்.

பண்டாரநாயகாவின் மனைவி சிறிமாவோ பிற்காலத்தில் பிரதமாராகி "உலகின் முதல் பெண் பிரதமர்" என்று புகழ் பெற்றவர்.

மகள் சந்திரிக்கா இலங்கைப் பிரதமராகவும் அதிபராகவும் பதவிக்கு வந்தவர்.

இலங்கை வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது பண்டாரநாயகாவின் குடும்பம்.


பண்டாரநாயக்கவை சுட்டு கொன்றவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவன் பெயர் சோமராமதேரோ.

பண்டாரநாயகா தேர்தலில் நின்றப் போது அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவன்.

பண்டாரநாயகாவை சுட்டுக் கொன்ற சோமராமதேரோ மீது வழக்கு தொடரப்பட்டது.

இலங்கையில் தூக்கு தண்டனை விதிப்பதை பண்டாரநாயகா ஏற்கனவே ரத்துச் செய்திருந்தார். பண்டாரநாயகாவிற்கு பின் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயகா மீண்டும் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை கொண்டு வந்தார்.

சோமராமதேரோவிற்கு கோர்ட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவன் தூக்கில் போடப்பட்டான்.

திருமதி பண்டாரநாயகா பிரதமாரானார் - திங்கட்கிழமை

நன்றி தினத்தந்தி

No comments: