Tuesday, June 23, 2009

இலங்கைத் தமிழர் - வரலாற்றுச் சுவடுகள் (17)

இலங்கை சுதந்திரம் அடைந்தது
10 லட்சம் தமிழர்கள் வாக்குரிமை இழந்தனர்
**********************************************
Justify Full
வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ந்தேதி விடுதலை அடைந்தது.

அதற்கு 51/2 மாதம் கழித்து, 1948 பிப்ரவரி 4-ந்தேதி இலங்கை சுதந்திரம் பெற்றது.

சுதந்திரப் போராட்டம்

இரண்டு நாடுகளும் சுதந்திரம் அடைந்ததில் பெரிய வித்தியாசம் உண்டு.

இந்தியாவிற்கு சுதந்திரம் பெறுவதற்காக, மகாத்மா காந்தி 30 ஆண்டுகளுக்கு மேலாக அஹிம்சை வழியில் உண்ணாவிரதம், உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களை நடத்தினார். வேறு வழி இல்லாமல், சுதந்திரம் கொடுக்க இங்கிலாந்து முடிவு செய்தது.

இங்கையில் அத்தகைய போராட்டம் எதுவும் நடக்கவில்லை. வெள்ளையர்கள் தாங்களாகவே முன்வந்து சுதந்திரம் கொடுத்தனர்.

இன்னொரு முக்கிய வித்தியாசம், "முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும்" என்று ஜின்னா போராடி வெற்றியும் பெற்றார். அதனால் இந்தியா துண்டாடப்பட்டு, "பாகிஸ்தான்" அமைக்கப்பட்டது.

ஆனால், "தமிழீழம்" வேண்டும் என்று போராடுவதற்கு அந்த நேரத்தில் இலங்கையில் யாரும் இல்லை. அதன் காரணமாக, முழு இலங்கையையும் சிங்களர்களின் கையில் வெள்ளையர்கள் ஒப்படைத்து விட்டனர். அப்போது தமிழர் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியிருந்தால், "தமிழ் ஈழம்" கிடைத்திருக்கும்.

சிங்கக்கொடி


1948 பிப்ரவரி 4-ந்தேதி, இலங்கையில் பறந்து கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டுக் கொடியான "யூனியன் ஜாக்" இறக்கப்பட்டது. இலங்கையின் தேசியக் கொடி (சிங்கக்கொடி) ஏற்றப்பட்டது.

இக்கொடியை வடிவமைக்கும்போது, "இலங்கை, சிங்களர் தேசம் என்று குறிக்கும் விதத்தில் சிங்கத்தை இடம் பெறச் செய்திருக்கிறீர்கள். இலங்கையின் மற்றொரு தேசிய இனமான தமிழர்களைக் குறிக்கும் வகையில், கொடியில் மாறுதல் செய்யவேண்டும்" என்று தமிழர்களால் வற்புறுத்தப்பட்டது. இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.

தமிழர்களின் உரிமை பறிப்பு

சுதந்திரத்துக்கு முன்னதாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயகா, தொடர்ந்து பிரதமராக நீடித்தார்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததால், தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெள்ளையர் ஆட்சியின் போது ஓரளவுக்கு இருந்த உரிமைகளும் பறிபோயின.

தேயிலைத் தோட்டங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும் ஓயாது உழைத்த மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 10 லட்சம் மலையகத் தமிழர்கள் வாக்குரிமை இழந்து, "நாடற்றவர்கள்" என்று அறிவிக்கப்பட்டனர்.

அதாவது 1931, 1936, 1941, 1947 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்களித்த 10 லட்சம் தமிழர்கள், அந்த உரிமையை இழந்தனர்.

இலங்கை சுதந்திரம் அடைந்து ஒரு ஆண்டு ஆவதற்குள் இந்த அநியாயம் நடந்தது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததால், இலங்கையில் தமிழர்களால் குழப்பம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும், இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்போ, இங்கிலாந்து அரசின் எதிர்ப்போ வந்தால் அதை சமாளிக்கவும் பிரதமர் சேனநாயகா ஒரு ராஜதந்திர யுத்தியைக் கையாண்டார். அப்போது "அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்" தலைவராக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலத்தை அரசாங்கத்துக்கு ஆதரவாக இழுக்கத் தீர்மானித்தார். பொன்னம்பலத்தை சந்தித்துப்பேச தன் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆலிவர் குனதிலகாவை தூது அனுப்பினார்.

அவர், பொன்னம்பலத்தை சந்தித்தார். "எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு என்ன சாதிக்கப்போகிறீர்கள்? அரசாங்கத்தில் இடம் பெற்று, தமிழ் மக்களுக்கு நன்மை செய்யலாமே!" என்று ஆசை காட்டினார்.

இதுபற்றி, கட்சியின் செயற்குழுவில் கலந்துபேசி, அதன்பின் தன் முடிவைத் தெரிவிப்பதாக பொன்னம்பலம் கூறினார்.

அதன்படி செயற்குழு கூடியது. மந்திரிசபையில் சேரலாமா, வேண்டாமா என்று காரசாரமாக விவாதம் நடந்தது.

"மந்திரிசபையில் சேருவது நல்லது" என்று பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் குமாரசாமி கூறினார்.

கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நாகநாதன் அதை கடுமையாக எதிர்த்தார். "டி.எஸ்.சேனனாயகாவை வகுப்புவாதி என்று சில நாட்களுக்கு முன் ஏசினீர்களே! எந்த முகத்தோடு அவருடைய மந்திரிசபையில் போய் சேருவீர்கள்?" என்று பொன்னம்பலத்தை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டார்.

"எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு உணர்ச்சிகரமாகப் பேசலாமே தவிர, தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது" என்று பொன்னம்பலம் பதில் அளித்தார்.

செல்வநாயகம் எச்சரிக்கை


பிற்காலத்தில் "இலங்கை தமிழர்களின் தந்தை" என்று புகழ் பெற்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அப்போது "இலங்கை தமிழ்க் காங்கிரஸ்" கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

"தமிழ் மக்களை பலவீனப்படுத்தவே, சேனநாயகா உங்கள் ஆதரவைக் கோரியுள்ளார். அவருடைய வலையில் சிக்க வேண்டாம்" என்று அவர் பொன்னம்பலத்தை எச்சரித்தார். அவருடைய கருத்தை இன்னொரு முக்கிய தலைவரான வன்னிய சிங்கம் ஆதரித்தார்.

முடிவில், இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் நோக்கத்துடன் ஒரு தீர்மானத்தை செயற்குழு நிறைவேற்றியது. "மலையகத் தமிழர்களுக்கு பிரஜா உரிமை கிடைப்பதற்கு, பிரஜா உரிமைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய சேனநாயகா சம்மதித்தால், மந்திரிசபையில் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சேரலாம்" என்பதே அந்த தீர்மானத்தின் சாரமாகும்.

இந்த தீர்மானத்தை குணதிலகாவிடம் பொன்னம்பலம் தெரிவித்தார். "பிரஜா உரிமை சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வருவதில் சிரமம் ஏதும் இல்லை. நீங்கள் முதலில் மந்திரியாகி விடுங்கள். அதன் மூலமாக, சட்டம் திருத்தம் செய்வது எளிதாகி விடும்" என்று பசப்பு வார்த்தைகள் கூறினார், குணதிலகா.

அவர் கூறியதை அப்படியே நம்பினார். பொன்னம்பலம். மந்திரி பதவி ஏற்க சம்மதம் தெரிவித்தார். 1948 டிசம்பர் மாதத்தில், அவரை மந்திரியாக சேனநாயகா நியமித்தார். பொன்னம்பலம் விரும்பியபடியே கைத்தொழில், கடல் சார்ந்த தொழில் ஆகிய இலாகாக்கள் அவருக்கு ஒதுக்கப்பட்டன. அவருடைய ஆதரவாளரான கனகரத்தினத்துக்கு துணை மந்திரி பதவி கொடுக்கப்பட்டது.


கட்சி உடைந்தது

இதைத் தொடர்ந்து "இலங்கை தமிழ்க் காங்கிரஸ்" இரண்டாக உடைந்தது.
பொன்னம்பலத்தை எதிர்த்தவர்கள் செல்வநாயகம் தலைமையில் ஒன்று திரண்டனர்.

பொன்னம்பலம் கோஷ்டியும், செல்வநாயகம் கோஷ்டியும் தனித்தனியாக செயற்குழு கூட்டங்களை கூட்டி, ஒருவரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர்.

செல்வநாயகம், தமிழர் வாழும் பகுதிகளை ஒன்று சேர்த்து தனி மாகணம் ஆக்கி, "சுயாட்சி" வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"தமிழர் பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரே மாகாணமாக அமைக்க வேண்டும். இதுபோல், சிங்களப் பகுதிகளை ஒன்று சேர்ந்து மற்றொரு மாகாணம். இரண்டுக்கும் பொதுவான ஒரு மத்திய அரசு. மாநிலங்களில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி. இதன் மூலமாகத் தான் தமிழர்களின் நலனை காப்பாற்றமுடியும்" என்று அவர் கூறினார்.

இதற்காக புதிய கட்சி தொடங்க தீர்மானிக்கப்பட்டது.

"தமிழரசு கட்சி உதயம்" - நாளை

நன்றி தினத்தந்தி

No comments: