Monday, June 22, 2009

இலங்கைத் தமிழர் - வரலாற்றுச் சுவடுகள் (16)

தமிழர் பகுதிக்கு "மாகாண சுயாட்சி"
பண்டாரநாயகா யோசனைக்கு சேனநாயகா எதிர்ப்பு
********************************************************


மிழர்கள் வாழும் பகுதிக்கு மாகாண சுயாட்சி வழங்கலாமா என்று, இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன் ஆலோசிக்கப்பட்டது. அதற்கு பண்டாரநாயகா (சந்திரிகாவின் தந்தை) ஆதரவு தெரிவித்தார். ஆனால், இடைக்கால பிரதமாராக இருந்த தி.எஸ்.சேனநாயகா எதிர்த்தார்.

1948 -ல் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பாக, இலங்கையின் நிர்வாக சீர்திருத்தம் குறித்து ஆலோசனை கூற பல்வேறு குழுக்கள் (கமிஷன்கள்) அமைக்கப்பட்டன. அதில் "சோல்பரி குழு" முக்கியமானது. இது 1944-ல் அமைக்கப்பட்டது.

இந்தக் காலக்கட்டத்தில் தமிழர்களின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜி.ஜி.பொன்னம்பலம், "இலங்கை பாராளுமன்றத்தில் சிங்களருக்கு 50 சதவிதமும், தமிழர்களுக்கு 50 சதவிதமும் (இரு சமுதாயத்தினருக்கும் சரிசமமான இடங்கள்) உதுக்கப்பட வேண்டும்" என்று வலியுருத்தினார்.

1944 நவம்பர் 27- ந்தேதி கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

"தமிழர்கள்தான் இந்த நாட்டின் ஆதிகுடிகள். இதை நமது நண்பர்களாகிய சிங்களர்கள் புரிந்து கொள்ளவேண்டும். பருத்தித்துறை முதல், தெய்வேந்திரமுனை வரை தமிழர்கள் ஆட்சி செய்தனர். இதனை, இலங்கை வரலாற்றில் காணலாம். ஐரோப்பியர்கள் வரும் வரை, எந்த அந்நியராலும் தமிழர்கள் ஆட்சி செய்யப்படவில்லை. நம்மை நாமே ஆண்டு வந்திருக்கிறோம்".
இவ்வாறு ஜி.ஜி.பொனம்பலம் கூறினார்.

கம்யூனிஸ்டுகள்

தமிழர்களின் கோரிக்கைக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவாக இருந்தது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மே தின அறிக்கையில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது:-

"தமிழர்கள், தனித்துவம் பெற்ற தேசிய இனமாகும். இலங்கையின் வடக்கு, கிழக்குப்பகுதிகள் அவர்களின் பாரம்பரிய தாயகம். இதை ஆளவும், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கவும் தமிழ் இனத்துக்கு உரிமை உண்டு. அவசியமானால், அவர்கள் தனியாகப் பிரிந்து தங்களுக்கென்று தனியாக ஆட்சி அமைத்துக் கொள்ள உரிமை பெற்றவர்கள்."
இவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சி கூறியது.

சிங்களர்கள் கருத்து

இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சிங்களப் பொதுமக்களில் பெரும்பான்மையோர் தமிழர்களிடம் நட்புடன்தான் இருந்தனர். தமிழர் - சிங்களர் இடையே காதல் திருமணங்கள் கூட நடந்துள்ளன.

சிங்கள அரசியல்வாதிகளும், சிங்கள வெறியர்களும்தான், இந்த இரண்டு சமூகத்தினர் இடையேயும் வெறுப்பை வளர்ப்பதிலும், தமிழர்களை நசுக்குவதிலும் ஈடுபட்டனர்.

பிற்காலத்தில் இலங்கைப் பிரதமரான எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயகா (உலகின் முதல் பெண் பிரதமரான திருமதி சிறிமாவோ பண்டார நாயகாவின் கணவர்;சந்திரிகாவின் தந்தை) தமிழர்களிடம் ஓரளவு அனுதாபம் உடையவர். "இலங்கையை நீண்ட காலம் மூன்று அரசுகள் ஆண்டு வந்துள்ளன. இந்த மூன்று பகுதியினரும் தனித் தனியே நாகரிகங்கள், பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள். எனவே, இலங்கையை மூன்று மாகாணங்களாகப் பிரித்து, மாகாண சுயாட்சி வழங்க வேண்டும். மூன்று மாகனங்களைப் பிரித்து, மாகாண சுயாட்சி வழங்க வேண்டும். மூன்று மாகனங்களுக்கும் பொதுவான மத்திய அரசு அமைய வேண்டும்" என்பது பண்டாரநாயகாவின் கருத்தாகும்.


சுதந்திரத்துக்கு முன் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, டி.எஸ்.சேனநாயகா பிரதமாராக இருந்தார். அவர், மாகாண சுயாட்சி முறையையும், தமிழர்களுக்கு சம உரிமை கொடுப்பதையும் எதிர்த்தார். அவர், சோல்பரி குழுவின் முன் ஆஜராகி சாட்சியும் அளிக்க மறுத்துவிட்டார்.

அறிக்கை மீது ஓட்டெடுப்பு

இலங்கை பாராளமன்றத்தில் சிங்களருக்கு 65 சதவிதமும், தமிழருக்கு 35 சதவிதமும் இடங்கள் ஒதுக்கலாம் என்று சோல்பரி குழு கருதியது. சகல இனங்களையும் பாதுகாக்கக் கூடிய வகையில் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

தனது கருத்துக்களை ஒரு அறிக்கையாகத் தயாரித்து அளித்தது.

இந்த அறிக்கை இலங்கை தேசிய சபையில் (பாராளுமன்றத்தில்) தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது விவாதம் நடந்த போது பிரதமர் டி.எஸ்.சேனநாயகா பேசுகையில், "நான் சிறுபான்மை மக்களுக்கு (தமிழர்களுக்கு) ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். நாங்கள் உங்களைத் துன்புறுத்துவோம் என்ற அச்சம் வேண்டாம். நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்போம்" என்று குறிப்பிட்டார்.

சோல்பரி குழு அறிக்கை மீது பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில், ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையில் உள்ள தமிழர் காங்கிரஸ் (4 உறுப்பினர்கள்) கலந்து கொள்ளவில்லை. அறிக்கைக்கு ஆதரவாக 51 பேர்களும், 3 பேர் எதிர்த்தும் ஓட்டுப்போட்டனர்.

எனவே அறிக்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேறியது.

இலங்கை சுதந்திரம் பெற்றது - நாளை

நன்றி தினத்தந்தி

No comments: