Monday, May 11, 2009

திடுக்...திடுக்...திடுக்கிடும் கடிதம் - படியுங்கள்

மகாலிங்கம் காலையில் எழுந்ததும் பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டு சிற்றுண்டி சாப்பிடுவதற்காக வெளியே வந்தார்.

மகள் ரேணுகாவின் அறை திறந்திருந்தது. வழக்கமாக அந்த வேளையில் சுருண்டு மடங்கித் தூங்கிக் கொண்டிருக்கும் ரேணுவை காணவில்லை. உள்ளே போய்ப் பார்த்தார். படுக்கை துளிகூட கசங்காமல் அப்படியே இருந்தது. படுத்திருந்ததற்கான அடையாளமே இல்லை.

எதோ ஒரு விபரீத சந்தேகம் அவருக்கு எழுந்த போது, தலையணை மீதிருந்த கடித உறை கண்ணில்பட்டு அவரை படபடக்கச் செய்தது. 'அப்பாவுக்கு என எழுதப் பட்டிருந்த அந்த உறையைத் திறந்து நடுக்கத்தோடு அதனுள்ளிருந்த கடிதத்தை எடுத்துப் படித்தார்.


அன்புள்ள அப்பாவிற்கு,
மிகுந்த வருத்தத்துடனும், மனகஷ்டத்துடனும் இக்கடிதத்தை எழுதுகிறேன். ஆம்! என் சிநேகிதன் ராம்ஜியுடன் புது வாழ்க்கையைத் தொடங்க வீட்டை விட்டே போகிறேன். இதை உங்களிடமும் அம்மாவிடமும் சொல்ல நினைத்தேன். ஆனால், வீட்டில் பெரிய ரகளை ஏற்படும் என்பதால் சொல்லவில்லை. ராம்ஜி மீது எனக்கு மட்டற்ற காதல். அவனுக்கும் அப்படியே, ரொம்ப நல்ல இளைஞன். அவனை நேரில் பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கும். கைகளில் பச்சை குத்திக் கொண்டிருக்கும் டிசைன்களும், ஹிப்பி முடியும், வினோதமான டிரஸ்சும், பழைய மோட்டார் பைக்கும் உங்களுக்கு என்னவோபோல் இருந்தாலும் அவனுடன் பழகினால் உங்களுக்கு பிரியம் ஏற்பட்டுவிடும். நான் காதலுக்காக மட்டும் வீட்டை விட்டு போகவில்லை. கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. நான் விரைவில் தாயாக போகிறேன். குழந்தையைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம் என்று ராம்ஜி சொல்கிறான். அவனுக்கு வயது 38 (காதலுக்கு வயது தடையில்லை தானே அப்பா ) அவனுடைய கையில் பணமும் இல்லை தான். என்னைத் தவிர அவனுக்கு பல சிநேகிதிகள் இருந்தாலும் என்னிடம் விசுவாசமாக இருப்பான் என்று எனக்கு நம்பிக்கை உண்டு. சங்கீதத்தில் அளவற்ற மோகம் கொண்டவன் ராம்ஜி. ஏழையானாலும் ஏராளமான சிடிக்களை வைத்திருக்கிறான். எப்போதும் பாட்டுக் கேட்டுக் கொண்டே இருப்பான். மதுரைக்குப் பக்கத்தில் ஒரு குக்கிராமத்தில் தான் அவனது தாயும் கல்யாணமாகாத தங்கைகளும் இருக்கிறார்கள். விவசாயக் கூலிகளானாலும் எங்களையும் அங்கேயே வரச் சொல்லியிருக்கிறார்கள். அங்கே சிலர் கஞ்சா பயிரிடுகிறார்கள். அது ஒரு நல்ல தொழில் என்று ராம்ஜி சொன்னான். விரைவில் நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கஞ்சா பயிரிட்டு பணக்காரர்கள் ஆகிவிடுவோம். இது விஞ்ஞான யுகம் என்பதால் எல்லா வித நோய்களுக்கும் மருந்து கண்டுப்பிடிப்பதைப் போல் எய்ட்ஸ் நோய்க்கும் விரைவில் மருந்தை கண்டுபிடித்து விட்டால் ராம்ஜியை பற்றிய என் ஒரே கவலையும் தீர்ந்து விடும். எங்களுக்காக கடவுளிடம் வேண்டுங்கள். அப்பா! என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள். என் வயது பதினைந்து தான் என்றாலும் உங்களிடமிருந்து வாழ்க்கையை எப்படி சமாளிப்பது என்று கற்றுக் கொண்டுள்ளேன். என்றைக்கேனும் ஒரு நாள் நான் உங்களை பார்ப்பதற்கு வருவேன். அப்போது நீங்கள் உங்கள் பேரக்குழந்தைகளுக்கு ஆசி கூற வேண்டும் என்பதுதான் என் ஒரே ஆசை.
கண்ணீருடன் உங்கள் அன்பு மகள் ரேணு.

கடிதத்தின் கீழே 'பின் பக்கம் பார்க்கவும்' என்ற குறிப்பினைப் பார்த்து மேலும் மேலும் நடுங்கும் கைகளுடன் மகாலிங்கம் கடிதத்தை திருப்பினார்.

அப்பா! பயப்படாதீர்கள். முன் பக்கத்தில் நான் எழுதியிருப்பது அத்தனையும் பொய். சுத்த கப்சா. நான் மைலாப்பூர் சித்தப்பாவின் வீட்டில் பத்திரமாக இருக்கிறேன். வாழ்க்கையில் பயங்கரமான, சோதனையான, வேதனையான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவைகளுடன் ஒப்பிட்டால் என் மேசைக்குள்ளிருக்கும் ஸ்கூல் ரிப்போர்ட் கார்டும் நான் பெற்றுள்ள மார்க்குகளும் ரொம்ப அற்பமான பிரச்சனையென்று உங்களுக்கே புரியும். என் மீது கோபமும் வராது. நல்ல வேளை முன் பக்கத்தில் உள்ளது போல் ஒன்றும் நேர்ந்து விடவில்லையே என்று நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.தயவு செய்து ரிப்போர்ட் கார்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு எனக்கு போன் செய்யுங்கள். அப்பொழுது தான் நான் பயமில்லாமல் வீடு திரும்புவேன்.
உங்கள் அன்பு மகள் ரேணு

மிரட்டியவர் விக்னேஷ்

2 comments:

Rajeswari said...

வாவ்..சூப்பரா இருந்தது கடிதம்...

நல்ல திடுக் ..திடுக் தான் ..!

YOGI said...

super yaaaaa