Sunday, May 10, 2009

நிருபர்கள் கேள்விகளும் மன்மோகன்சிங் பதிலும்


கேள்வி:- இலங்கையில் தனி ஈழம் அமையவேண்டும் என்று அ.தி.மு.க.வும், உங்கள் கூட்டணியில் உள்ள தி.மு.கவும் வலியுறுத்தி வருகின்றன. இது பற்றி தாங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்:- இப்போது எங்கள் கவனமெல்லாம், போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை மற்றும் மருத்துவ வசதிகள் அளிப்பது போன்றவற்றிலேயே உள்ளது. அங்கு போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்பதுதான் உடனடி விருப்பம். இது நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினை ஆகும்.

இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்கள், அங்குள்ள மக்களுக்கு (சிங்களர்கள்) சமமான அந்தஸ்தையும், கவுரவத்தையும் பெறவேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கின்றோம். அப்போதுதான் அவர்கள் சுயமரியாதையுடன் வாழ முடியும். ஒன்றுபட்ட இலங்கையில் அமைதியாக இருதரப்பினரும் வாழவேண்டும் என்பதே இந்திய அரசின் விருப்பம்.

கேள்வி:- தமிழகத்தில் ஜெயலலிதா மற்றும் உங்களது முன்னாள் கூட்டாளிகளான வைகோ, ராமதாஸ் மற்றும் கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் போன்றோர், தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் விரும்பிய ஆட்சி வந்தால், இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி, தனி ஈழத்தை அமைப்போம் என்று கூறி வருகிறார்கள். அவர்களால் செய்ய முடியும் என்றால், அதனை நீங்கள் இப்போதே ஏன் செய்ய முடியாது? அது நடக்குமா?

பதில்:- அது நடக்குமா, நடக்காதா என்பதெல்லாம் சொல்ல முடியாது. இலங்கை ஒரு சுதந்திரமான நாடு. நீங்கள் சொல்வதுபோல், ஒரு சுதந்திர நாட்டுக்குள், இன்னொரு நாட்டு ராணுவம், அவர்களது அனுமதியின்றி நுழைவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. சர்வதேச சட்டம் என்று ஒன்று உள்ளது. எனவே இது அவ்வளவு எளிதில் நடைபெற கூடியது அல்ல என்பது, மேற்சொன்ன வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர்களுக்கே தெரியும்.

கேள்வி:- இலங்கை தமிழர் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தமிழக கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன. இது தேர்தலில் உங்கள் அணியின் வாக்குகளை குறைக்குமா?
பதில்:- இலங்கையில் தமிழ் மக்கள் தங்களது வசிப்பிடத்துக்காகவும், உரிமைக்காகவும் போராடி வருவதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். இலங்கையில் தமிழ் மக்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவே அறிந்து, உணர்ந்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு சுயமரியாதையுடனும், கவுரவத்துடனும் வாழ உரிமை உண்டு என்பதையும் அனைத்து இந்தியர்களும் உணர்ந்துள்ளார்கள். மேலும், தமிழகம் இந்தியாவிலேயே மிகவும் விவரம் தெரிந்தவர்களை கொண்ட மாநிலம் ஆகும். இலங்கை தமிழர் பிரச்சினை, வேறு சுதந்திரமான நாட்டினுடைய பிரச்சினை என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

கேள்வி:- இலங்கையில் தமிழர்களுக்காக இந்திய அரசு உதவி வரும் வேளையில், அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டு, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் அவரை விசாரணைக்காக இந்தியாவுக்கு அழைத்து வருவதில் நீங்கள் எவ்விதமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்?
பதில்:- பிரபாகரன் ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளி. அவர் இந்திய அரசால் தேடப்படுபவர். ஆனால், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியே நாம் இப்போது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அதுவே இப்போது நம்முன் உள்ள முக்கிய பிரச்சினை ஆகும். போர் நடைபெறும் பகுதியில் சிக்கியிருக்கும் தமிழ் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வரப்படவேண்டும் என்பதுதான் நமது இப்போதைய கவலையாக உள்ளது.

அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வரப்படவேண்டும். அவர்களது நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை கிடைக்க செய்ய வேண்டும். ராணுவ நடவடிக்கை மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது என்பதனை இலங்கை அரசும், அந்நாட்டு மக்களும் உணர வேண்டும்.

அரசியல் பேச்சுவார்த்தை மூலமாகவே, அதாவது தமிழர்களுக்கு கவுரவமான, சம உரிமை பெற்ற குடிமக்கள் என்ற அந்தஸ்தை தருவதன் மூலமாகவே அங்கு பிரச்சினை தீரும். இதுவே, இந்திய அரசின் கொள்கையாக இருந்து வருகிறது. இந்த கொள்கையே தொடரும்.

கேள்வி:- விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் அதிக அளவில் உலவுகிறதே...?

பதில்:- இது ஜனநாயக நாடு. மக்களுக்கு தங்களது கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் உண்டு. ஆனால் அது பண்புடையதாக, எல்லை மீறாததாக இருக்க வேண்டும்.

கேள்வி:- பிரான்சில் (சீக்கியர்கள்) டர்பன் அணிவது தொடர்பான பிரச்சினை எழுந்தபோது, நீங்கள் தனிப்பட்ட முறையில் பேசி அதனை தீர்த்து வைத்தீர்கள். ஆனால், இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். ஆனால் நீங்கள் வாயே திறக்கவில்லையே?

பதில்:- அது உண்மையல்ல. இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையில் கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். இப்பிரச்சினை தொடர்பாக இலங்கை அதிபருடனும், இலங்கை பிரதம மந்திரியுடனும் மற்றும் இதர தரப்பினருடன் பல முறை பேசியுள்ளேன். இது தமிழ்நாட்டை சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிரச்சினை ஆகும். இலங்கை தமிழர்களுக்கு கவுரவமான அந்தஸ்தை தரவேண்டியது அந்நாட்டின் கடமை என்பதை அவர்களும் உணரவேண்டும்.

கேள்வி:- இலங்கை ராணுவத்துக்கு உதவவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், வெளியுறவுத்துறை இணையதளத்திலோ, 3 ஆயிரம் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதே...?

பதில்:- இலங்கைக்கு சில உதவிகள் அளிக்கப்பட்டது உண்மையே. ஆனால், அவை, பாதுகாப்பு பயன்பாட்டுக்காகவே அளிக்கப்பட்டது. நாம் அளிக்கும் உதவியோ, ராணுவ தளவாடங்களோ மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த பயன்படக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகிறோம். இதுவே, இந்திய அரசின் தொடர் கொள்கையாக இருந்து வருகிறது. நமது பாதுகாப்பு துறைக்கு நான் இட்ட உத்தரவும் அதுவே ஆகும்.

கேள்வி:- இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று இங்கு சொல்லப்படும் நிலையில், இலங்கை அரசும், பாதுகாப்பு மந்திரியும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்கிறார்கள். இலங்கை விஷயத்தில் இந்தியாவின் பிடி தளர்ந்துவிட்டதா?
பதில்:- இலங்கையுடன் இப்பிரச்சினை தொடர்பாக தினந்தோறும் பேசி வருகிறோம். நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை சென்றபோது, போர் நிறுத்தம் செய்வதாக அவர்கள் உறுதி அளித்தார்கள். அந்த உறுதியை மதித்து நடந்து வருவதாகவே அவர்கள் சொல்லியுள்ளனர்.

கேள்வி:- இலங்கை பிரச்சினையில் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்களா?

பதில்:- இலங்கையில் தமிழ் மக்களின் அனைத்து பிரதிநிதிகளையும் அழைத்து பேசி அங்கு இறுதியான, உறுதியான அரசியல் முடிவு எடுக்கப்படவேண்டும்.

கேள்வி:- விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கமா? இல்லையா? என்பது தமிழகத்தில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இது பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில்:- இந்திய அரசை பொறுத்தவரையில், விடுதலைப்புலிகள் அமைப்பானது தீவிரவாத அமைப்பாகத்தான் கருதப்படுகிறது. அதுவே இந்திய அரசின் நிலைப்பாடும் ஆகும்.

கேள்வி:- இந்த தேர்தல் பிரசாரத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக சில தரப்பினர் மேற்கொண்டு வரும் பிரசாரத்துக்கு காங்கிரஸ் கட்சி சரியாக பதில் அளிக்கவில்லையே?
பதில்:- இதனை ஒரு நல்ல ஆலோசனையாக எடுத்துக்கொள்கிறேன். நாங்கள் அதை செய்ய தவறியிருந்தால் அதை உடனே திருத்திக்கொள்கிறோம். தற்போது நான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக கூறப்பட்டுள்ள விவரங்களை, சாதாரண தமிழ் மக்கள் கூட தெரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

கேள்வி:- ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கையில் கொல்லப்பட்டு வரும் நிலையில், இந்திய பொருளாதார தடை போன்றவற்றை பிரயோகித்து அவர்களை கட்டுப்படுத்தியிருக்கலாமே?
பதில்:- நாம் மோசமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதையும், இலங்கை சுதந்திர நாடு என்பதையும் உணரவேண்டும். அவர்களுடன் நாம் நடந்துகொள்வதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதுபோல் நாம் செயல்படும்போது, நாட்டின் ஒரு பகுதியினருக்கு அதிருப்தி ஏற்படத்தான் செய்யும்.

No comments: