Wednesday, May 20, 2009

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் ஆரம்பம்


பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்து கொண்டிருக்கும், ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு, அதனை மறைத்துத் திசைதிருப்பும் நோக்கத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக ஒரு வதந்தியை உலகெங்கும் பரப்பி வருகின்றது.

இலங்கைக்கே உணவளித்துக் கொண்டிருந்த வன்னிப்பெரு நில மக்கள், இன்று உணவின்றியும், குடிநீர் இன்றியும், காயங்களுக்கு மருந்தின்றியும் பேரவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். அம்மக்களின் துயர் துடைக்க வேண்டிய கடமை, உலகத் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச சமூகத்திற்கே உரியதாக உள்ளது.

இச்சூழலில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்பதற்கும், ஜனநாயக உரிமைகளை அவர்கள் பெற உதவுவதற்கும், தமிழ் மக்களைக் கொன்றொழித்து வரும் ராஜபக்சே என்னும் போர்க் குற்றவாளியை அனைத்து நாடுகளின் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் உரிய முயற்சிகளை எடுக்க, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் ``ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்'' ஆரம்பிக்கப்படுகிறது.

சர்வதேச இயக்கமாக விரிவு பெறவிருக்கும் இவ்வியக்கத்தில், தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகளும், சுப.வீரபாண்டியன் தலைமையிலான திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் தம்மை இணைத்துக் கொள்கின்றன. ஒத்த கருத்துள்ள பல்வேறு இயக்கங்களும், இயக்கத்தில் இணைந்து செயல்படுமாறு அழைக்கப்படுகின்றன.

அரசியல் சூதாட்டம் இங்கு இல்லாவிட்டால் இதுவும் ஒரு நல்ல முயற்சியே.

No comments: