Wednesday, May 6, 2009

அஞ்சினர்க்குச் சத மரணம்


மனிதனைப் பின்னுக்குத் தள்ளும் அசுர பலம் பயத்திற்கு உண்டு.

பயம் கொள்ள ஆரம்பித்தால், அது விசுவரூபமெடுத்து படாதபாடு படுத்துகிறது.

பயத்திலேயே இயல்பானது - இயல்புக்கு முரணானது என்று இரண்டு வகை உண்டு.

இயல்பானது இயற்கையானது. ஒரு பாம்பைக் கண்டால் பயப்படுவது இயல்பானது. அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் பாம்பு பொம்மையைக் கண்டால்கூடப் பயப்படுவது என்பது இயல்புக்கு முரணானது.

ஆங்கிலத்தில் Phobia என்று சொல்லுவார்கள். 13ஆம் என்னைக் கண்டால் கூட மேலை நாடுகளில் பயப்படுவார்கள்.

இருளைக் கண்டு சிலர் பயப்படுவார்கள்.

உயரத்தைக் கண்டு சிலர் பயப்படுவார்கள்.

பயத்திற்கு என்ன காரணம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

பாதுகாப்பின்மைதான் பயத்திற்கு காரணம்.

ஒரு புதிய இடத்திற்குச் செல்லும்போது அங்கு நமக்குச் சரியான பாதுகாப்பு இருக்குமோ என்று தோன்றுகிறது. பயம் ஏற்படுகிறது.

பாதுகாப்பு என்பது உடலுக்கு மட்டுமல்ல, நமது கௌரவத்திற்கு, நமது அந்தஸ்த்திற்கு, நமது பொருள்களுக்கு, நம் பெயருக்கு, நம் புகழுக்கு.

மரணத்தைக் குறித்துப் பயம், நாம் இழக்கப் போகின்றவற்றை எண்ணி.

தெரிந்தவற்றிலிருந்து விடுதலை பெற முடியாமல் போனால் பயம் உண்டாகிறது.

நமது பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணம் பொருள்களின் மீது - மனிதர்களின் மீது - நமது சில இச்சைகளின் மீது நமக்கு ஏற்பட்டிருக்கும் பிடிப்புத்தான்.

'பிடிப்பு' ஏற்படும்போதெல்லாம் நம் பயம் கூடுகிறது.

பிடிப்பு என்கிறபோது அதில் உயர்ந்தது - தாழ்ந்தது என்பதெல்லாம் கிடையாது. எல்லாப் பிடிப்புகளும் ஒரே மாதிரிதான்.

நமது பயம் நாம் இழக்கப் போகின்றவற்றைக் குறித்து.

இழக்க - நேரிடுகிறபோது - அந்த இழப்பைச் சமரசம் செய்து கொள்ளாத போது நாம் தற்கொலை செய்ய நேரிடுகிறது.

சத்தியத்துடன் நிமிர்ந்து நிக்கிறவன் பயம் கொள்ளத் தேவையில்லை.

தேர்வில் காப்பி அடிப்பவன்தான் பதட்டத்தோடு இருக்கிறான்.

'பயம்' உண்மையை எதிர்கொள்ளுகிறபோது சிலருக்கு நேர்கிறது.

நேர்மையாக இருப்பவன் துணிச்சலுடன் இருக்க முடியும்.

நேர்மையற்று இருப்பவன் எப்போதும் பயத்தோடு நடமாடிக்கொண்டிருக்கிறான்.

அவனுடைய நிழல் கூட அவனைப் பயமுறுத்துகிறது.

ஒரு சின்ன சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஹென்றி என்பவன் குடிபோதையில், தான் குதிரைப் பந்தயத்தில் வென்றதைக் கொண்டாட ஒரு உணவு விடுதிக்குச் சென்றான்.

அங்கே உணவருந்தும்போது, வெள்ளியிலான கரண்டியை எடுத்துத் தன் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டான்.

உணவருந்தி முடிந்ததும் வெளியே வருவதற்கு முயன்றபோது அவனிடம் உணவு பரிமாறுபவன் ஓடிவந்து 'நீங்கள் இன்னும் சாப்பிட்டதற்கு பில் தரவில்லை' என்று கேட்டான்.

அதற்கு ஹென்றி 'எந்தக் கரண்டி' என்று கேட்டான்.

காரணம் அவன் செய்த தவறினால் அவன் மனதில் கரண்டியே ஆக்கிரமித்திருந்தது. அதனால் தான் 'பில்' என்பது அவன் காதுளில் 'கரண்டி' என்று விழுந்தது.

நாம் தவறு செய்கிறபோது பயத்தின் பிடியிலேயே இருக்கவேண்டியதாக இருக்கிறது. மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயப்பட வேண்டியதாக இருக்கிறது.

இந்தப் பயத்தில் இருந்து எப்படி விடுபடுவது?

நமது பயத்திற்கு யார் காரணம்?

பல நேரங்களில் நமக்குப் பயம் மற்றவர்களால் உண்டாகிறது. இருள், பேய், பிசாசு போன்றவற்றைக் குறித்த பயத்தை சமூகமும், பெற்றோர்களும் உண்டாக்குகிறார்கள்.

சில பயம் நம் ஒருமித்த உள்ளுணர்விலேயே கலந்திருக்கிறது.

அமெரிக்காவில் பாம்பின் படத்தை தொலைக்காட்சியில் பார்த்து இரண்டு வயதுக் குழந்தைகள் கூட அழுதன. காரணம் ஒருமித்த உள்ளுணர்வின் (Collective Consciousness) வெளிப்பாடு.

பயத்திலிருந்து விடுபட வேண்டுமானால் நாம் ஆசைகளில் இருந்து விடுபடவேண்டும்.

ஆசைகளில் இருந்து விடுபடவேண்டுமானால் நாம் அவற்றை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்காக - பயப்பட வேண்டிய விசயங்களுக்கு நாம் பயப்படத்தான் வேண்டும்.

ஒரு புலியைக் கண்டு தைரியமாக நின்றால், இறந்து போக வேண்டியதுதான்.

மதம் பிடித்த யானையைக் கண்டு ஓடி ஒழிய வேண்டியதுதான்.

ஆனால் எறும்புக்கும், கரப்பான் பூச்சிக்கும், பல்லிக்கும் பயந்து நடுங்குபவர்கள் இருக்கிறார்கள்.

பயம் நம்முடைய சிந்தனையை மழுங்கடிக்கிறது.

நம்முடிய ஆற்றலைக் குறைத்து விடுகிறது.

பலரால், தன் சொந்தவீட்டில் தான் சரியாக உறங்கமுடியும், சரியாகச் சாப்பிடவும் முடியும்.

இந்தப் பாதுகாப்பின்மையில் இருந்தும், பயத்தில் இருந்தும் விடுபட எல்லாப் பிடிப்புகளில் இருந்தும் விடுதலை பெற முடியாவிட்டாலும் ஒரு சில பிடிப்புகளில் இருந்தாவது நாம் விடுதலை பேர் வேண்டும். அப்பொழுதுதான் நாம் முழுமையை நோக்கிப் பயணிக்க முடியும்.

வெ.இறைன்பு
நன்றி - ஏழாவது அறிவு

No comments: