Thursday, May 14, 2009

இலங்கை ராணுவ குண்டு வீச்சுக்கு செஞ்சிலுவை சங்க ஊழியர் பலி


இலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் உள்ள பகுதிகளை மீட்பதற்காக ராணுவம் கடுமையாக சண்டை போட்டு வருகிறது. அந்த பகுதியில் சிங்கள போர் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன. சுமார் இரண்டரை சதுர கி.மீ. பரப்பளவிலான பகுதியில் விடுதலைப்புலிகளை சுற்றி வளைத்து கடுமையான தாக்குதலில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இரண்டு மூத்த ராணுவ அதிகாரிகளே இந்த தகவலை உறுதி செய்தனர்.

போர் முனையில், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சார்பாக நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. போர் முனையில் இருக்கும் ஒரே தொண்டு நிறுவனம், செஞ்சிலுவை சங்கம் மட்டுமே. இந்த சூழ்நிலையில், போர் முனையில் நேற்று பிற்பகலில் நடந்த குண்டு வீச்சில் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த 31 வயது ஊழியர் கொல்லப்பட்டார். அவருடைய தாயாரும் குண்டு வீச்சுக்கு பலியானார்.

இந்த தகவலை, செஞ்சிலுவை சங்கத்தின் செய்தி தொடர்பாளர் சராசி விஜேரத்னே தெரிவித்தார். எனினும், யார் குண்டு வீசியது என்ற தகவலை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.

இதற்கிடையே, பெயர் குறிப்பிட விரும்பாத தூதரக அதிகாரி ஒருவர் நேற்று கொழும்பில் பேசும்போது, "இந்தியாவில் தேர்தல் முடிந்த பிறகு, முழு அளவிலான தாக்குதலில் அவர்கள் (சிங்கள ராணுவம்) ஈடுபடுவார்கள். இனிமேல் மக்களிடையே கருத்து வேறுபாடுகளை களைந்து இணக்கமாக இருக்கச் செய்வது என்பது மிகவும் கடினம். அது நேரத்தை வீணாக்கும் செயலாகும்'' என்றார்.

மேலும், வெளிநாடுகளின் தலையீட்டை தவிர்க்க இலங்கை அரசு விரும்புகிறது. அதனால் தான், விடுதலைப்புலிகளை விரைவிலேயே முற்றிலுமாக அழிக்க மிகவும் ஆர்வம் காட்டி வருகிறது. அதே நேரத்தில், ஐ.நா. சார்பாக இலங்கையில் சமீபத்தில் எடுத்த செயற்கை கோள் படங்களை மனித உரிமை அமைப்புகள் ஆய்வு செய்தன. அதில் கொத்து வெடிகுண்டுகளை வீசியதற்கான ஆதாரங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

No comments: