Tuesday, May 12, 2009

உலகின் சிரிப்பு - சார்லி சாப்ளின்


அவர் சிறுவனாக இருந்த போது, வாட்டர் லூ ரோட்டில் இலவசக் கஞ்சி வாங்கி குடிக்கக் காத்து நின்றிருக்கிறார். அனாதை விடுதியில் முதுகு வலிக்க உழைத்திருக்கிறார். அவரை வளர்க்க அவருடைய தாய், வீட்டிலிருந்த சாமான்கள் - தன் கல்யாண மோதிரம் உட்பட அடகு வைத்தது அவருக்குத் தெரியும். அந்த துயர நினைவுகளை அவர் மறப்பதில்லை. அதனாலேயே செல்வத்தின் அருமை அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.

அவர்தான் உலகப் புகழ் பெற்ற, உலகைச் சிரிக்க வைத்த, உலகின் சிரிப்பென போற்றப்படும் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் அவர்கள். தனது 28வது வயதில் அவர் உலகப் புகழப் பெற்றுவிட்டார். அவருக்குக் கிடைத்த அளவு வருமானம், அப்போது உலகில் வேறு எந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. ஆனாலும் சாப்ளின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சிறு அறையில் தான் வசித்து வந்தார்.

தன் படங்களின் மூலம் உலகையே மகிழ வைத்த இந்த மனிதனுக்கு 54 வயது வரையில் வாழ்கையில் சந்தோசம் இருந்ததில்லை. அவருடைய மூன்று திருமணங்களும் விவாகரத்தில் முடிந்து இருக்கிறது. புகழப் பெற்ற அமெரிக்க நாடக ஆசிரியர் ஒநீல் என்பவரின் மகள்தான் சாப்ளினின் நான்காவது மனைவி. அவரை மணந்து கொள்ளும் பொழுது அந்த பெண்ணுக்கு வயது 18.

'இவ்வளவு வயது வித்தியாசமா? நிச்சயம் இதுவும் விவாகரத்தில் தான் முடியும்' என்று எல்லோரும் சொனார்கள். அந்த யூகம் பொய்த்துவிட்டது. சாப்ளின் தம்பதிக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். முதல் பையனுக்கு 18 வயது நடக்கும் போது கடைசிக் குழந்தைக்கு ஒரு வயது கூட நிரம்பியிருக்க வில்லை. 'குழந்தைகளின் எண்ணிக்கை பற்றி எனக்குக் கவலை இல்லை. புதிது புதிதாகப் பெயர்கள் தேட வேண்டியிருக்கிறதே அதைச் சொல்லுங்கள்' என்பாராம் சாப்ளின் வேடிக்கையாக.

1952 ஆம் வருடத்தில் 'லைம் லைட்' என்ற தன் படத்தில் எத்தனையோ புதிய முகங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார். அனுபவம் இல்லாத அவர்களுடைய நடிப்பால் அவர் எவ்வளவோ சிரமப்பட வேண்டியிருந்திருக்கிறது. இருந்தும் பழைய நண்பர்கள் பலருக்கு அதில் நடிக்கச் சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறார். இதனால் படத்தின் வெற்றி பாதிக்க படுமோ என்று கவலைப்பட்டதே இல்லை.

16.04.1889 இல் இந்த பூமியில் அவதரித்த இந்த சிரிப்பரசர் 25.12.1977 இல் இவ்வுலகிலிருந்து விடைப் பெற்ற போது உலகமே அழுதது. 88 வயதை நிறைத்த இந்த மேதை ஒரு புகழப் பெற்ற நடிகர் மட்டுமல்ல, டைரெக்டர், வசனகர்த்தா ஆகவும் முத்திரைப் பதித்தவர். அவருக்கு பிரான்ஸ் தேசம் கௌரவப் பட்டம் வழங்கியும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்தும் கௌரவித்திருக்கின்றன.

அவர் ஒரு எழுத்தாளரும் கூட. பதினெட்டு மாதங்களில் இரண்டு இலட்சம் வார்த்தைகளில் அவர் தன் சுயசரிதையை எழுதியிருக்கிறார். புத்தகம் வெளியாவதற்கு முன்பே அதைப் பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியிட, எத்தனையோ பத்திரிக்கைகள் அவருக்கு அழைப்பு அனுப்பி இருக்கிறது.

'எனக்கு வயது செல்லச் செல்ல உலகம் இளமையாகிக் கொண்டு வருகின்றது' என்று சிரித்துக் கொண்டே சொல்வாராம் 'உலகின் சிரிப்பு' என போற்றப்படும் அனுபவத்தால் முதிர்ந்த இந்த மேதை.

இன்றும் கூட அவரது திரைப் படங்களைப் பார்த்து சிரித்துச் சிரித்து நாங்களும் இளமையாகிக் கொண்டு தான் இருக்கிறோம்.

நன்றி .வி

No comments: