Thursday, May 7, 2009

இலங்கை ராணுவம் போரை நிறுத்த வேண்டும் - ராஜபக்சேவிடம் ஐ.நா. தலைவர் வலியுறுத்தல்


போர் முனையில் சிக்கி தவிக்கும் அப்பாவி பொதுமக்களுக்கு உணவு, மருந்து வினியோகிக்க வசதியாக இலங்கை ராணுவம் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று, இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம், ஐ.நா. சபை பொது செயலாளர் பான்-கி-மூன், டெலிபோனில் கேட்டுக்கொண்டார்.

அப்போது அவர், "இலங்கையில், மனிதாபிமான முறையில், தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு, ராணுவ தாக்குதலை நிறுத்த வேண்டும். இரு தரப்பினரும் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

இந்த தகவலை, பான்-கி-மூன், நியூயார்க் நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

போர் நிறுத்தம் செய்வதன் மூலம், போர் முனையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி பொது மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து பொருட்களை வினியோகிக்க வழி ஏற்படும் என்றும், அங்குள்ள நிலைமை குறித்து ஆராய, ஐ.நா.குழுவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் ராஜ பக்சேயிடம் தெரிவித்தேன்.

பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கனரக ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் ராணுவம் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதே நேரத்தில், சிறுவர்களை படைகளில் சேர்ப்பதை, விடுதலைப்புலிகள் தவிர்க்க வேண்டும், போர் நடைபெறும் பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற விடுதலைப்புலிகள் அனுமதிக்க வேண்டும்.

போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை இரு தரப்பும் மேற்கொள்ள வேண்டும். போர் பகுதியில் மனித உரிமை மீறல்கள் நடக்கிறதா? என்றும் கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு பான்-கி-மூன் கூறினார்.

ராஜபக்சே பேட்டி

ஐ.நா. தலைவருடன் பேசிய டெலிபோன் பேச்சு பற்றி, இலங்கை அதிபர் ராஜபக்சே கொழும்பு நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கைக்கு வருமாறு, ஐக்கிய நாட்டு சபை செயலாளரை ஏற்கனவே கடிதம் மூலம் அழைத்து இருக்கிறேன். அவருடன், டெலிபோனில் பேசியபோது, நான் ஏற்கனவே எழுதிய கடிதத்தை உறுதிபடுத்தும் வகையில், இலங்கைக்கு வருமாறு மீண்டும் அவரை அழைத்தேன்.

போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தங்கி இருக்கும் நிவாரண முகாம்களை பார்வையிடும்படி அழைத்தேன். இதன் மூலம் தமிழர்களுக்கு கொடுக்க உணவுப்பொருள், மருந்து, மற்றும் நிவாரண பொருட்கள், கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உண்டு.

மேலும், நிவாரண முகாம்களில் தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள்? என்பதையும் அவர் நேரில் தெரிந்து கொள்ள முடியும்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், கேடயமாக பயன்படுத்தப்படும் தமிழர்கள் இன்னும் இருக்கிறார்கள். இதை ஐ.நா. தலைவரிடம் நாங்கள் நேரில் விளக்கமாக எடுத்துக்கூறி, தமிழர்களை மீட்க, மனிதாபிமான உதவிகளை கோர முடியும். இதன்மூலம் ஏராளமான உயிர்களை காப்பாற்ற முடியும்.

ஐக்கிய நாட்டு சபை தலைவர் இலங்கை வரும் தேதி இன்னும் முடிவாக வில்லை. அவரது வருகையால், இலங்கைக்கும், ஐக்கிய நாட்டு சபைக்குள் உள்ள உறவு, மேலும் வலுப்பெறும்.

இங்கிலாந்து நாட்டு எம்.பி.க்கள் குழுவினர், இன்னும் சில நாட்களில் இலங்கை வர இருக்கிறார்கள். போர் பகுதிகளையும், வவுனியாவில் நிவாரண பணிகளையும் அவர்கள் பார்வையிடுவார்கள். இதன் மூலம், வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பரப்பும் தகவல்கள் பொய்யானவை என்பது, உலக மக்களுக்கு தெரிய வரும்.

இவ்வாறு ராஜபக்சே கூறினார்.

No comments: