Monday, May 18, 2009

பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு நன்றி. இலங்கை தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு அயராது பாடுபடுவோம் - கருணாநிதி அறிக்கை


பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு நன்றி என்றும் இலங்கை தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு அயராது பாடுபடுவோம் என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அணிகலன் ஆக்கும் வினையாற்றுபவன்; அந்த அணிகலன் இரும்பால் ஆனதா- அல்லது செம்பு பித்தளையா- பொன்னால் ஆன கரணைகள் கொண்டதா- வைர மணி மாலையா- எந்த ஒரு உலோகத்தினால் உருவாக்கப்படுவதாக இருப்பினும், அணிகலனின் வனப்பு வசீகரத்தை விட அதை நீண்ட சங்கிலியாக இணைத்திருக்கும் ஒவ்வொரு கரணையும் ஒன்றையொன்று வலிவு குறையாமல் விளங்கி இணைந்திருக்கிறதா என்பதை முதலில் ஆய்வு செய்வதையே வழக்கமாக கொள்வார்கள்.

அப்படி கண்ணீரிலும், செந்நீரிலும் தோய்த்தெடுத்த கரணைகளை இணைத்திட்டதும் வனப்பும் வலியும் மிகுந்ததுமான திராவிட இயக்கம் எனும் இந்த அணிகலனைத்தான் அய்யா பெரியாரும், அறிஞர் அண்ணாவும் நம்மிடத்திலே ஒப்படைத்து, நன்கு காத்திடுவோம் என்ற நம்பிக்கையுடன் நம்மை வாழ்த்திச் சென்றுள்ளார்கள்.

நாம், போர்க்குரல் கொடுக்கும் எதிர்கட்சி வரிசையில் இருந்தும்; தமிழ்ப்புலியாளும் வரிசையில் இருந்தும்; இந்திய திருநாட்டின் ஆக்கமும் ஆற்றலும் வளர்த்திடும் பொறுப்புகளில் பங்கேற்றும்; பாருக்குள்ளே நல்ல "ஜனநாயக நாடு'' எனும் பெரும் புகழை நாமும் பெற்று இந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.

தெற்கு தேறுகிறது

அறவழிப்போர் வாயிலாக அயராது தியாகம் புரிந்த அண்ணல் காந்தியடிகள் அருவியது இந்திய மக்களுக்கான சுதந்திரம்- இதில் பேதா பேதங்களோ, சாதி மத வேறுபாடுகளோ- உயர்வு தாழ்வுகளோ- மதசார்பற்ற நிலைக்கு மாறானதும்- மத நல்லிணக்கத்துக்கு வேறானதுமான- சிக்கலைப்படைக்கும் சிந்தனைகளோ எழாதவாறு கட்டிக்காக்கும் பொறுப்பேற்றுள்ள கடமையாளர்களாக, முற்போக்கு எண்ணங்களுக்கு முன்னுரிமை தந்து அடிமை இருள் நீங்கினால் மட்டும் போதாது- அறிவு ஒளியும் பரவிட வேண்டும் என்ற பகுத்தறிவு சங்க நாதமும் ஒலித்துக் கொண்டிருக்கிறோம்.

மத்திய பேரரசு எனும் பதக்கத்துடன் கூடிய மாநில சுயாட்சிக்குரல் கொடுத்து வரும்- வலிமையும் வனப்பும் கொண்ட கரணையாகவும் இந்த சங்கிலியில் நமது தமிழ் மாநிலமும் உறுதியுடன் பிணைந்தே இருக்கிறது. கடந்த மே திங்கள் பத்தாம் நாள் சென்னை தீவுத்திடலில் தியாகத்திருவிளக்கு சோனியா காந்தியுடன் நான் கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில், "முன்பெல்லாம் வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது'' என்றிருந்த நிலை மாறி- இங்குள்ள அரசும், இந்திய மத்திய அரசும் இணக்கமான நிலை பெற்றிருப்பதால் இப்போது "வடக்கு வாழ்கிறது- தெற்கு தேறுகிறது'' என்ற சிறப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான பட்டியலை விவரித்தேன்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் இன்னும் காட்டப்பட வேண்டிய அக்கறையை அதே கூட்டத்தில் அம்மையாரும், நானும் தெளிவுபடுத்தியிருப்பதுடன்; இந்த தேர்தல் முடிவுக்கு பிறகும் அதனை மத்திய அரசுக்கு நாள்தோறும் நினைவூட்டி கொண்டிருக்கிறேன். அங்கே உருவாக்கப்பட வேண்டிய அரசியல் தீர்வுக்கும்- அமைதி தெளிவுக்கும் அண்ணாவழியில் நான் அயராது பாடுபடத்தான் போகிறோம்.

இங்கிருக்கும் இந்திய மக்களையும்- இனிய நம் தமிழ்நாட்டு மக்களையும்- "உலகம், வான் நோக்கி வாழ்வது போல், குடிமக்கள் கோனோக்கி வாழ்கிறார்கள்'' என்று அய்யன் வள்ளுவன் நல்லாட்சிக்கு வகுத்த இலக்கணத்தை எள் முனையளவும் தவறாமல் கடை பிடித்து- சாதனைகள் படைத்து- சமத்துவம், சமதர்மம் போற்றி- இந்த சாமானியர்களால் சாமான்ய மக்களுக்கு துன்பமிலா தொடர்பணியாற்றிட முடியும் என்பதற்காக வழங்கப்பட்டுள்ளதே; இந்த பதினைந்தாவது பாராளுமன்ற தேர்தலின் மிகப்பெரும் வெற்றியாகும். இந்த நன்றி அறிக்கையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டுள்ளது போல, அணிகலனின் கரணைகளின் இணைப்புக்கும், பிடிப்புக்கும்- வனப்பும் வலிவும் தேவைப்படுவது போல்; தமிழ் மாநிலம் எனும் கரணையும் அவ்வாறு திகழ்ந்திடவும்- இத்தகைய கரணைகளின் உறுதியால் இந்திய திருநாடு எனும் அணிகலன் சிறப்புறவும் செயல்படுவோம்.

மறப்போம்-மன்னிப்போம் "உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்''

என்பது நாம் மறந்துவிடாமல் எப்போதும் இருக்கின்ற லட்சிய முழக்கமன்றோ!

இடி, மழை, சூறைக்காற்று, கடல் கொந்தளிப்பு- இவற்றையன்னியில் தூற்றல்- துணிந்து பொய்யுரைத்தல் போன்ற நிலைகள்- தரமற்ற விமர்சனங்கள்- தேர்தல் நேரமெனில் இவை தவிர்க்க முடியாதவை சிலருக்கு- சில தலைவர்களுக்கு- சில ஏடுகளுக்கு! அவற்றையெல்லாம் மறந்து விடுவோம்! "மறப்போம்-மன்னிப்போம்'' என்ற மாபெரும் தலைவனின் வழி வந்தவர்கள் நாம் என்பதை மட்டும் என்றும் மறவாமல் இருப்போம்.

என் செய்வது? உயிருக்கே மிக மிக ஆபத்து என்ற 2 கண்டங்களில் இருந்து நான் பிழைத்து எழுதிருப்பதே ஓயாது உழைத்து உழைத்து- ஒரு பெரும் வெற்றியை தேடித்தந்துள்ள உன் போன்ற- உடன் பிறப்புகளின்- உற்ற தோழமைக்கட்சி முன்னோடிகளின்- திருக்கரங்கள் பற்றி "நன்றி! நன்றி!'' என நாளெல்லாம் என் நாதழுதழுக்க நன்றிகளை குவிக்கத்தானே! எழுச்சி கொண்ட வாக்காள பெருமக்கள் - இணைந்து நின்று இடையறாப்பணி புரிந்த தோழமை கட்சிகளின் தோன்றல்காள்!

அடி தொழுகிறேன் உம்மை! பிடி தளராமல் இருப்பேன் என்றும் கொள்கையில் என்பது மட்டும் உறுதி சிதறாத உண்மை! நன்றி மறவேன்; இன்றல்ல; என்றும் மறவேன்.

No comments: