Monday, May 11, 2009

நேரத்தை நிர்வகிப்பது நீங்களோ...?


பெரிய நிறுவனங்களின் அதிபர் அவர். வேலைகள் முடித்து வீடு திரும்ப தினமும் தாமதம் ஆகிவிடும். ஓர் இரவு வீடு திரும்பிய போது அவருடைய ஆறு வயது மகன் உறங்காமல் அவருக்காக விழித்திருப்பதைக் கண்டார்.

'என்ன மகனே?' என்று கேட்டார்.
'அப்பா...

ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?' என்று மகன் கேட்டான்.


சிறு வயதிலேயே வியாபாரத்தில் ஆர்வம் காட்டும் மகனை தொழிலதிபர் மகிழ்ச்சியுடன் பார்த்தார்.
சில கணக்குகள் போட்டார். 'பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பேன் ஏன் மகனே?' என்றார்.


மகன் தன் பிஞ்சுக் கைகளை அவர் முன் நீட்டி 'எனக்கு ஐந்தாயிரம் ரூபாய் கடனாக கொடுப்பீர்களா அப்பா? வளர்ந்து வேலைக்கு போனதும் திருப்பித் தருகிறேன்' என்றான்.


தந்தை அதிர்ந்தார் 'உனக்கு எதற்கு ஐந்தாயிரம் ரூபாய்?'


'உங்களுடைய நேரத்தில் அரை மணி நேரத்தை எனக்காக வாங்குவதற்கு அப்பா!' என்றான் மகன்.

இந்த கதை எதை உணர்த்தி நிற்கிறது என்பதை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.

எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும், எதை இரண்டாம் பட்சமாகக் கருதலாம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கிறார்கள். எல்லோருக்கும் ஒரு விதி பொருந்தாது.

ஒன்றைப் புரிந்து கொளுங்கள், வீட்டு வேலை ஆனாலும் சரி, தொழில் நடத்துவதானாலும் சரி நேரங்கடந்து செய்யும் பல வேலைகள் அர்த்தமற்று போய் விடுகின்றன. வேறு எதை தொலைத்தாலும் திரும்ப பெற வாய்ப்புண்டு. தொலைந்து போன விநாடிகளை எப்பேற்பட்டவராலும் மீட்க இயலாது.

எந்த நேரத்தில் எதைச் செய்து முடிப்பதென்று, இருக்கும் நேரத்தைப் பங்கிட்டு பயன்படுத்தும் எளிதான வேலைதான் உங்களுடையது. தேவை இல்லாமல் அதைச் சிக்கலாக்கி கொள்வது நீங்கள் தான். நேரத்தை நிர்வகிப்பது பற்றி அதிகம் கவலைப் படுபவர்களாக நாம் இருக்கிறோம்.

இது வேடிக்கையானது. தன் சுழற்சி, சூரியனை வலம் வரும் பாதை என்று எல்லாவற்றையும் வைத்து நேரத்தை பூமி அல்லவா நிர்வகித்து கொண்டிருக்கிறது. 24 மணி நேரம் 30 நாட்கள் 365 நாட்கள் என்பதை எல்லோருக்கும் பொதுவாக பூமியல்லவா கவனித்துக் கொள்கிறது.

ஒவ்வொரு கணத்திலும் டிக் டிக் என்று கரைந்து கொண்டிருப்பது நேரமல்ல, உங்கள் வாழ்க்கை. இது தத்துவமோ அல்லது வேடிக்கைப் பேச்சோ அல்ல சத்தியமான உண்மை. நேரத்தின் மதிப்பைப் பற்றி தெளிவான கவனத்துடன் இருந்தால், வாழ்க்கையை பற்றி தெளிவாக இருப்பீர்கள்.

நேரத்தின் மதிப்பை அறிந்திருப்பது மனிதர்களுக்கான அடிப்படை கண்ணியமாகும். நேரம் மதிப்பு மிக்கதென்பதால் தான் யாரையாவது காத்திருக்க வைப்பது பெருமையென்று நினைக்கின்ற சிலரைப் பார்த்து கோபப் பட வேண்டியுள்ளது. உங்கள் நேரம் எப்படி உங்கள் வாழ்க்கையோ, அவர்கள் நேரமும் அவர்களுடைய வாழ்க்கை. மற்றவர்களுடைய வாழ்க்கையை வீணடிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

நீங்களே ஒரு கால இயந்திரம் தான். இறந்த காலமும் எதிர் காலமும் உங்களுக்குள் இக்கணத்தில் பொதிந்திருக்கின்றன. இந்தக் கணத்தின் பிரமாண்டத்தை அனுபவிக்க தெரியாத போது தான் இல்லாத எதோ வேறொரு கணத்தில் நீங்கள் இருக்க பார்க்கிறீர்கள்.

நேரத்தின் அருமை புரியாதவர்கள் தான் வேலைகளை தள்ளி போடுவதை தீர்வு என்று பழக்கமாக்கி கொள்வார்கள். அதே சமயம் இடைவெளியே இல்லாமல் உழைப்பதும் தவறு. உடலுக்கும் மனதுக்கும் அவ்வப்போது ஓய்வு கொடுத்தால் தான் முழுமையான திறமை வெளிப்படும்.

நீங்கள் எவ்வளவு மணி நேரம் செயல்படுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதில் நீங்கள் எவ்வளவு நேரம் உங்கள் திறைமையை முழுமையாகப் பயன்படுத்திச் செயல் படுகிறீர்கள் என்பது தான் உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

உங்கள் வாழ்க்கையில் எது சிறப்பாக நடைபெற வேண்டுமென்பதில் நீங்கள் நூறு சதவீதம் உறுதியாக இருந்தால் அந்த தெளிவே அதற்கான நேரத்திற்கு முன்னுரிமை கொடுத்துவிடும். உங்கள் செயலில் பதட்டம் இருக்காது, குழப்பம் வராது, களைப்புத் தாக்காது. எனவே;

நீங்கள் நிர்வகிக்க வேண்டியது நேரத்தை அல்ல... உங்களைத் தான்!


சத்குரு ஜக்கி வாசுதேவ் உரையிலிருந்து......
தொகுப்பு
அனிகா

No comments: