Wednesday, May 6, 2009

கலைந்து போன கனவு ராச்சியம்


காட்சி - 1

இடம் திருக்கைலாயம்
எங்கும் புகை மண்டலம்
வாசனை திரவியங்களின் நறுமணம்
தேவ மங்கையர் ஒருபுறம், நந்தி தேவர் முதலானோர் மறுபுறம்
எழில் தோற்றத்துடன் இறைவனும் இறைவியும்
சிறிது நேர மௌனம் கலைந்து
எங்கும் மந்திர ஒலி 'ஓம் நம சிவாய'
மெல்லெனத் தொடங்கி, அகிலம் நிறைத்தது அவ்வொலி
மீண்டும் மௌனம்.

காட்சி - 2

இடம் ஓவியக் கூடம் திருக்கைலாயம்
தனிமையில் இறைவனும் இறைவியும்
இறைவனது கையில் ஒரு தூரிகை
இறைவியின் கையில் பல வர்ணம் நிறை தட்டு
திடீரென்று என்ன நினைத்தானோ
ஓவியம் ஒன்றை வரைய தொடங்கினான்,
இறைவன் எனும் ஓவியன்.
கை போன போக்கில் வரைந்து கொண்டே போனான்.
உலக வரைப் படம் போல் தெரிந்தது.
அவன் கற்பனைக் குதிரைக்கு எல்லை தான் ஏது
வரைந்து முடித்த அவன்
கையில் தூரிகயுடன்
தன் கை வண்ணம் ரசித்தான்
தூரிகை நுனியில் இருந்து
ஒரு சொட்டு வர்ணம்
தெறித்து நின்றது ஓவியத்தின் மீது
ஒரு கணம் திகைத்தவன் கோபம் ஆனான்.
என் கற்பனை தாண்டி
தூரிகைக்கு என்ன புது கற்பனை
தூரிகை மீது வந்த கோபம்
காரிகையால் கரைந்து போனது
தன் கற்பனையில் தோன்றாத ஒன்றை
ஏற்க மறுத்தது அவன் மனம்
விவரங்கள் உணர்ந்தவனுக்கு
விபரீதமும் புரிந்திருக்க வேண்டும்
அப்படியே விட்டு விட்டான்
தெறித்து நின்ற சிவப்பு துளியை.
அவன் கண்களுக்கு இப்போது
அது அழகாய் தெரிந்தது.

காட்சி - 3

இடம் அதே இடம் திருக்கைலாயம்
'யார் அங்கே!'
இறைவனின் அழைப்பிற்கு
விரைந்தனர் காவலர், திரண்டனர் சகாக்கள்
கொடுத்தான் ஓவியத்தை
உயிர் கொடுங்கள் என பணித்தான்
படைத்தல் பணி - காத்தல் பணி
அழித்தல் பணி - அருளல் பணி - மறைத்தல் பணி
என பஞ்சமப் பணிகளும் அரேங்கேறின
மிக மிக வேகமாய்....
அவரவர் கற்பனைத் திறனும் இறைவனின் ஓவியமும்
இணைந்து உயிர் பெறத் தொடங்கின
அழகழகாய்! அற்புதமாய்! வகை வகையாய்!
வித விதமாய்....என வார்தகளால்
விவரிக்க முடியாத கலை அழகோடும் நயத்தோடும்.
சாதாரண கற்பனைக்கு வராத
என்னென்னமோ எல்லாம் தோன்றின..
தோன்றிக் கொண்டே இருந்தன
தோன்றின எல்லாம் மறையும் என்றும்
மறைந்தவை மீண்டும் தோன்றும் என்றும் பேசப்பட்டது.
சற்று நேரம் யாரும் யாருடனும்
எதுவும் பேசிக்கொள்ளவில்லை
வேலைப் பளுவும் பணியில் பற்றும் தான் காரணம்

காட்சி - 4

இடம் மீண்டும் அதே இடம் திருக்கைலாயம்
'வாருங்கள் வித்தகர்களே! முடிந்ததா யாவும்!'
இது இறைவனின் அழைப்பு
எல்லாம் திறம்பட முடித்த செருக்கோடு
இறைவன் முன் வந்தனர் சகாக்கள்
தங்கள் அதிவேக அதிவிவேக செயல் திறன் குறித்த
உயர்வு நவிற்ச்சியை பெறுவதற்கு.

ஒவ்வொன்றாய் ரசித்தான் இறைவன்
இறைவியும் கூடவே ரசித்தாள்
அவற்றில் அவனுக்கு முதலில் பிடித்தது
மனித இனம் மட்டும் தான்
ஏனெனில் அது அவன் சாயலில் இருந்தது
ஒவ்வொன்றாய் ஆய்ந்தவன்
தனக்கு மட்டுமே ஆன ஆக்கற்திறனை அகற்றி
உருமாற்ற திறனை மட்டும்
அவனுக்கு அளித்தான்
மற்றும் படி சகலமும் அவன் போலவே!
அவனது மனம்
இப்போது எதோ ஒன்றை மட்டும்
தனியாக தேடியது - நாடியது
ஆம்! அந்த எஞ்சிய சிந்திய துளி விவகாரம் தான்

பார்த்தவன் திகைத்தான் கொதித்தான்
'என்ன இங்கே மட்டும் ஓர வஞ்சனை
எல்லா இடங்களிலும் மனிதர்கள்
இங்கே மட்டும் மாறுப்பட்டதாய்...?
ஏன் இந்த முரண்பாடு?
இறைவனின் ஆவேச கேள்வி இது

'இறைவா!
தங்களின் கவனக்குறைவால்
தூரிகை துப்பிய மிச்சம் அல்லவா இது
உங்கள் கற்பனையில் வராத இதற்கு
புதிதாக எதைச் செய்ய...?
எமது கற்பனையில் விளைந்த எச்சத்தை
விட்டு விட்டோம் அப்படியே'
என்று பணிந்தனர் வித்தகர்கள் வித்தியாசமாய்

முரண் பாட்டின் சூட்சுமம் உணர்ந்த இறைவன்
வெடிச் சிரிப்பொன்றை உதிர்த்தான்
பரலோகம் அதிர்ந்தது அனைவரும் திகைத்து நின்றனர்
இறைவன் சிரித்தான்...மீண்டும் சிரித்தான்...
மீண்டும் மீண்டும் சிரித்தான்...
கண்ணில் நீர் வரச் சிரித்தான்...
அவன் கண்களில் இருந்து வழிந்து வந்த
அந்த ஒரு துளி நீர்
அவனது தூரிகை துப்பிய
செவ்வர்ணத்துளியை
நனைத்து சிதறியது

திடீரென்று சிரிப்பை நிறுத்திக் கொண்டான் இறைவன்
எங்கும் மயான அமைதி
அனைவரும் விக்கித்து நின்றனர்
திடீரென்று மௌனம் கலைத்து
'எனது கனவு ராச்சியம் கலைந்தது போங்கடா ...!'
என்று இரைந்தான் உரத்த குரலில் பேரிறைவன்

திடுக்கிட்டு கண்ணில் நீரோடு நானும் விழித்தேன்
வலைத் தளத்தில் மேய்ந்து மேய்ந்து
உடல் சலித்து மனம் வலித்து
மேய்ப்பர்கள் அற்றுப் போன
என் உறவுகளின் தவிப்போடு அல்லாடி
மேசையில் சாய்ந்தபடி
நானறியாது தூங்கிப்போனதும்
என் கனவு ராச்சியம் உண்மையில் கலைந்து போனதும்
இப்போது நிஜமாக தெரிகிறது

குழந்தைக் கவிஞன்

No comments: