Monday, May 4, 2009

கல் தோன்றி மண் தோன்றாக் காலம் - தமிழர் காலமா?


'உங்கள் மனங்கவர்ந்த பேச்சாளர்கள் யாரென்று கேட்டால் ஒவ்வொரு முறையும் நான் கொடுக்கும் பட்டியலில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் .ஜீவானந்தத்தின் பெயர் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.

ஏனெனில் அவரது ஆஜனபாகுவான உடலமைப்பும் அதற்கேற்ற அடர்த்தியான மீசையும், மைக்கில்லாமலேயே எட்டு ஊர்களுக்கும் கேட்கக் கூடிய பீரங்கிக் குரல், பெரியாரின் பாசறையில் வளர்ந்த பகுத்தறிவுவாதியாக இருந்தாலும் அண்ணா வழி வந்தவர்களை சகட்டு மேனிக்கு தாக்கும் குணமும், ஒரு பிரச்சினையை விளக்கும் போது குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் கையாளும் லாவண்யம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது.

இவை எல்லாவற்றிற்கும் மேல் ஜீவாவின் பேச்சில் காரசாரம் மட்டுமில்லாமல், முதல் தர நையாண்டியும் இருக்கும். புனிதமானது, இன்னதை சொன்னால் சிலருக்கு கோபம் வரும் என்ற கட்டுப்பாடெல்லாம் அவரிடம் கிடையாது. மனதில் தோன்றியதைச் சொல்லிவிடுவார். உதாரணமாக தமிழினத்தின் தொன்மையை சிலாகிக்கும் பேச்சாளர்கள் 'கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி' என்று குறிப்பிடுவது வழக்கம். ஜீவா ஒரு எழுத்தாளர் கூட்டத்தில் 'கல் தோன்றி மண் தோன்றா காலம் என்றால் உலகமே உருவாகவில்லை என்று தானே அர்த்தம். அப்போது தமிழினம் மட்டும் எப்படி தோன்றியிருக்க முடியும்?' என்று கிண்டல் செய்தார். பிறகும் கூட பல பேர் பேசிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள் அதை நான் கவனித்ததில்லை.

சமீப காலமாக இலங்கைத் தமிழர் பிரச்சனை கொழுந்து விட்டு எரிவதால் ஒரு பேச்சாளர் இதை குறிப்பிட்டதாக பத்திரிக்கைகளில் படித்த போது ஜீவாவின் பேச்சு ஞாபகம் வந்தது. தமிழறிஞர் டாக்டர் திருமலை அவர்களிடம் இதுபற்றி கேட்ட போது, அவர் தந்த விளக்கம் இது. 'ஜீவானந்தம் தப்பாக புரிந்துக் கொண்டு அப்படி சொல்லியிருக்கிறார். ஐயனாரிதனார் என்ற புலவர் இயற்றிய 'புறப்பொருள் வெண்பா மாலை' என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். 'மலை மீது வாழ்க்கை நடத்திய மறக்குடி மக்கள் சமவெளிக்கு வந்து விவசாயமோ, வேறு தொழில்களோ செய்யத் தொடங்கினார்கள் என்பது வரலாறு'. இங்கு புலவர் குறிப்பிட்டது அந்த காலத்தையும் மக்களையும் பற்றிய செய்தியாகும்.

இந்த தகவலைத் தந்த டாக்டர் திருமலை அவர்களுக்கு நன்றி கூறும் அதே நேரத்தில் 'மண் மூடிப் போன நகரங்கள்' என்ற புத்தகத்தைப் பற்றியும் சொல்ல வேண்டும். பல நகரங்களைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள் இதில் நிறைந்திருக்கின்றன. அவற்றில் சில:

ஜோர்டானின் பாலைவனப் பிரதேசத்தில் இருந்த பெட்ரா நகரம், அரேபியா, சிரியா, பாலஸ்தீனம், எகிப்து ஆகிய நாடுகளுக்குச் செல்லும் வர்த்தக மையமாக இருந்தது. அருமையான கட்டிடங்களும், கோவில்களும், கல்லறைகளும், நாடாகசாலைகளும் கட்டப்பட்டிருந்த இந்த நகரம் இரண்டாயிரம் ஆண்டுகள் காலம் புதைந்து கிடந்தது. ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ஒரு அறிஞர் இருநூறு வருடங்களுக்கு முன்பு இதைத் தோண்டியெடுத்தார்.

ஹோமரின் 'இலியாட்' என்ற காவியத்தில் ட்ராய் நகரம் இடம் பெற்றிருக்கிறது. முற்றிலும் கற்பனையான நகரம் என்றே இது பல காலமாக எண்ணப்பட்டு வந்தது. ஆனால் ஹென்றி ஷ்லீமன் என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர், துருக்கியில் ஹிஸர்லிட் என்ற இடத்தில் இந்த நகரத்தைக் கண்டுபிடித்தார் (1871ம் வருடம்). கண்டபடி வெட்டியதால் பல சேதங்கள் ஏற்பட்டன. ஆனால் ட்ராய் நகரம் மட்டுமல்லாமல் மேலும் ஒன்பது புராதன நகரங்களும் இங்கே இருந்தனவென்று தெரிந்தது. ஒரு நகரம் புதைந்து, அதன் மீது இன்னொரு நகரம் எழும்பி, அதுவும் புதைந்து அதன் மீது மற்றொரு நகரம் கட்டப்பட்டு, இப்படியே ஐயாயிரம் ஆண்டுகள் காலத்தில் ஒன்றன் மீது ஒன்றாக ஒன்பது நகரங்கள் அங்கே இருந்தனவென்று தெரிய வந்திருக்கிறது!

சிந்துவெளி நாகரிகம் என்பது நமக்குத் தெரிந்ததே. ஹரப்பா, மொஹஞ்சதாரோ என்ற நகரங்கள் சுமார் நூறு வருஷங்களுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டன. (இப்போது பாகிஸ்தானில் உள்ளன.) நாலாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன் இங்கே நாகரிகம் செழித்து வளர்ந்தது. ஆயிரம் வருஷங்கள் சிறப்பாக இருந்தபின் மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டது.

ராணி ஷீபா என்ற பெயர் பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த அரசியின் தலைநகரம் என்று 'பெரிய ஜிம்பாப்வே' என்ற இடத்தைக் கருதி வந்தார்கள். பிறகு அது தவறென்று நிருபணமாயிற்று. ஆப்பிரிக்க ஸஹாரா என்ற பிரதேசத்தில் இந்த நகரம் ஆயிரம் வருஷங்களுக்கு முன் மறைந்து விட்டது. இந்த நகரம் ஏன் கட்டப்பட்டது, ஏன் மறைந்தது என்று இன்று வரை விளங்கவில்லை.

பாரசீக சாம்ராஜியத்தின் நான்கு தலை நகரங்களில் ஒன்று பெர்ஸி போலிஸ். (இன்றைய ஈரானில் இருக்கிறது). தங்கத்திலும், வெள்ளியிலுமாக இவர்கள் படைத்த சிற்பங்களும் மாளிகைகளும் இந்த நகரத்தைக் குபேரபுரியாக ஆக்கின. இங்கே படையெடுத்த அலெக்சாண்டர் செல்வங்களைச் சுரண்டி எடுத்துக்கொண்டு நகரத்தையும் நிர்மூலமாக்கிவிட்டார்.

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் ப்யூப்லோ என்ற மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியேறி, மலைச் சரிவுகளில் வீடுகளைக் கட்டிக் கொண்டு, பயிர்த் தொழிலை செய்தார்கள். சுமார் அறுநூறு வீடுகள் இருந்தன. சில வீடுகள் 250 பேர்கள் வசிக்கக் கூடிய அளவுக்கு பெரியவை. ஆனால் இவர்கள் குடி பெயர்ந்துவிட்டதால் நகரம் அழிந்துவிட்டது.

(ஆயிரம் வருஷங்கள் கழித்து சென்னை மாநகரைத் தோண்டினால் என்னென்ன உண்மைகள் கிடைக்குமோ!)
ரா.கி.ரங்கராஜன்.

No comments: