Sunday, May 10, 2009

இலங்கை தமிழர்கள் சம உரிமையுடன் வாழ இந்தியா நடவடிக்கை எடுக்கும் - மன்மோகன்சிங் அறிக்கை


இலங்கையில் நடந்த சம்பவங்கள் மிகுந்த கவலையை அளித்தன. இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளாக தமிழர்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் முக்கியமான நேரத்தில் முடிவுக்கு வந்துள்ளன. இலங்கையில் தமிழர்கள் அனைவரும் அமைதியாக வாழ்வதற்கான சம உரிமை, கவுரவம், வீடுகளில் பயமின்றி வசிக்கும் நிலைமை ஏற்படுத்தி தருவதற்கு உறுதி அளிக்கிறேன். அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுவதற்கு இந்த அரசால் என்னென்ன செய்ய முடியுமோ, அவை அனைத்தும் தொடர்ந்து செய்யப்படும்.

இந்த விஷயம் தொடர்பாக இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார்.

அங்கு நடக்கும் துயர சம்பவங்கள் பற்றி கவலை தெரிவிப்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆகியோர் இலங்கைக்கு சிறப்பு தூதராக சென்றனர். அதைத் தொடர்ந்து அங்கு நடந்த யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதாக இலங்கை அரசு அறிவித்தது. தமிழர்களை காப்பாற்றுவதற்கு முழு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அந்த அரசு கூறியுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கான பிரச்சினைக்கு ராணுவ ரீதியான நடவடிக்கைகள் தீர்வாகாது என்பதை இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்துக்கும் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் பேச்சு வார்த்தை மற்றும் அமைதியான வழியில் தீர்வு காண வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகளின் கருத்தை கேட்டறிந்து, ஒருங்கிணைந்த அரசியல் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசு முன்வர வேண்டும். மேலும், ஆண்டாண்டு காலமாக அங்கு வசிக்கும் தமிழர்களின் மாகாணங்களுக்கு உண்மையாக அதிகார பகிர்வு அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் இலங்கை அரசு செய்ய வேண்டும்.

போர் பகுதியில் சிக்கி தவித்து வெளியேறி இருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் உடனடி தேவையாக உள்ளது. போர் பகுதியில் சிக்கி வெளி வர முடியாமல் இருக்கும் தமிழர்கள் அனைவரும் உடனே வெளியே கொண்டு வரப்பட வேண்டும். போரினால் ஆங்காங்கு சிதறி கிடக்கும் மக்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு அழைத்துவரப்பட வேண்டும்.

இந்த நோக்கத்தில் இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதற்கு ரூ.100 கோடியை ஒதுக்கி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டேன். தமிழகமும் தன் பங்குக்கு ரூ.25 கோடியை அறிவித்துள்ளது. எனவே இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை உடனே செய்து முடிக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளேன்.

இலங்கை தமிழர்களின் துயர் துடைப்பதற்காக சமீப காலத்தில் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்திய மருத்துவமனைகளை ஏற்படுத்தி, போர் பகுதிகளில் சிக்கி படுகாயமடைந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. நிவாரண முகாம்களுக்கு வந்தவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உணவுப் பொருட்கள், உடைகள், பாத்திரங்கள் அடங்கிய பாக்கெட்டுகள் அங்குள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்களுக்கு தமிழகத்தில் இருந்து கொடுத்துள்ளோம். தேவையான மருந்துகளை தனியாக அனுப்பி இருக்கிறோம். இதற்கான நமது பங்களிப்பை தமிழர்கள் பெருமளவில் வரவேற்றுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வவுனியாவில் இந்திய ஆஸ்பத்திரி விரைவில் அமைக்கப்படும்.

சென்னையில் இருந்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு, உடை பாக்கெட்டுகள் விரைவில் கொண்டு செல்லப்பட உள்ளன. 5 ஆயிரம் தமிழர்கள் பாதுகாப்பாக வசிப்பதற்கு தேவையான தளவாடங்களை விரைவில் அனுப்ப இருக்கிறோம். போரினால் இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருப்பதால், அவர்கள் வீடு மற்றும் வசிக்கும் பகுதிகளில் வைக்கப்பட்டு இருக்கும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக குழுக்களை அனுப்புகிறோம். இதனால் விரைவில் அவர்கள் வீடு திரும்புவார்கள்.

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கும், போரில் சிதைந்த அவர்கள் வாழ்விடங்களை மறுசீரமைக்கவும் கூடுதல் உதவிகளை வழங்குவதற்கு இந்தியா எப்போதும் தயாராக இருக்கிறது. அங்கு நல்ல அரசியல் தீர்வு ஏற்படவும், அங்கு தமிழர்கள் அனைவரும் அமைதியாகவும், கவுரவமாகவும் சம உரிமை பெற்று வாழவும் இந்தியா தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும்.

No comments: