Saturday, May 16, 2009

கரியமில வாயுவிலிருந்து எரிபொருள்!


புவி வெப்பமயமாதலைப் பற்றிய சூடான விவாதங்கள் உலகமெங்கும் நடைபெற்று வருகின்றன. இதைப் பற்றி ஏராளமான திரைப்படங்களும், கதைகளும் வெளிவந்துள்ளன. அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதியான அல் கோர் உலக வெப்பமயமாதலைப் பற்றி எடுத்த `அன் இன்கன்வீனியன்ட் ட்ரூத்' என்ற டாக்குமென்டரி படத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு சில வருடங்களுக்கு முன்னால் வழங்கப்பட்டது.

உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் வாயுக்கள் `பசுமை இல்ல வாயுக்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பசுமை இல்ல வாயுக்களில் கரியமில வாயு என்று அழைக்கப்படும் `கார்பன்-டை-ஆக்சைடு' வாயுதான் பிரதானமாகக் கருதப்படுகிறது. இயற்கையில் மனிதன் தன் சுவாசத்தின் மூலம் கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறான். மேலும் எரிமலைகள் சீறும் பொழுதும் இந்த வாயு வெளிப்படுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையிலும் கரியமில வாயுவின் ஆதிக்கம் பெருமளவில் காணப்படுகிறது.

18-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் காரணமாக ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகின. பூமியில் முன்பு இருந்த கரியமில வாயுவின் அளவை விட சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமான கரியமில வாயு தொழிற்புரட்சியின் காரணமாகவே உருவாகியது என்று நம்பப்படுகிறது.

குப்பைகள் மற்றும் தேவையற்ற நச்சுப் பொருட்களில் இருந்து நல்ல பல பொருட்கள் ஆராய்ச்சிகள் மூலமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. எல்லா விதமான குப்பைகளையும் மறு சுழற்சி செய்து மீண்டும் உபயோகிப்பதற்கான தொழில்நுட்பம் இப்போது வந்து விட்டது. அந்த வகையில் புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான கரியமில வாயுவில் இருந்து பெட்ரோலைப் போன்ற `மெத்தனால்` எரிபொருளை உருவாக்கி விஞ்ஞான உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர், சிங்கப்பூரைச் சேர்ந்த `பயோ இன்ஜினீயரிங் மற்றும் நானோ டெக்னாலஜி' கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.

கரியமில வாயுவுடன் வேதி வினை புரியும் தன்மையுள்ள `என்-ஹெடிரோசைக்ளிக் கார்பீன்' என்ற கிரியா ஊக்கியை உலர்ந்த காற்று இருக்கும் இடத்தில் இணைத்தார்கள். இந்தக் கலவையுடன் சிலிக்கா மற்றும் ஹைட்ரஜன் கலந்த `ஹைட்ரோசிலேன்' என்ற வேதிப் பொருளை சேர்த்து `ஹைட்ரோலிசிஸ்' என்ற முறையில் `மெத்தனால்` என்ற எரிபொருளை உருவாக்கினார்கள். இந்த `மெத்தனால்' தாவர எரிபொருள் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் `என்-ஹெடிரோசைக்ளிக் கார்பீனை` ஏற்கனவே நோய் எதிர்ப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியிலும், மாற்று எரிபொருள்கள் உருவாக்கும் ஆராய்ச்சியிலும் ஈடுபடுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்பொழுது மெத்தனால் தயாரிப்பிலும் ஈடுபடுத்த முடியும் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

பெரிய அளவில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுப் புறச் சூழல் சீர்கேட்டிற்குக் காரணமாக இருக்கும் கரியமில வாயுவிற்கு ஒரு முடிவு கட்ட முடியும். உலகில் அதிகப்படியாக இருக்கும் கரியமில வாயு இந்த முறையில் உபயோகமான எரிபொருளாக மாற்றப்படுவதால் இனிமேல் பெட்ரோலுக்குக் கோடிக்கணக்கில் வளைகுடா நாடுகளுக்குக் கொட்டிக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மெத்தனாலை எரிபொருளாக உபயோகப்படுத்துவதால் சுற்றுப் புற சூழ்நிலையும் பெருமளவில் பாதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

jothi said...

good article

உளறுவாயன் said...

நன்றி

தொடர்ந்து எமக்கு ஊக்கமும்,
ஆதரவும் தருவீர்கள் என நம்புகிறோம்.