Sunday, May 10, 2009

குழந்தைகளை மதிப்பீடு செய்யாமல் அன்பு காட்டுங்கள்


பெற்றோர்கள் குழந்தையின் மீது காட்டும் அக்கறைக்கு அளவே இல்லை. அவர்கள் அதிக விருப்பத்துடன் குழந்தைகளை பராமரிக்கிறார்கள். அதன்பொருட்டு ஒவ்வொரு செயலிலும் குழந்தைகளை மதிப்பீடு செய்து பார்க்கிறார்கள். அதில் குறை ஏதும் உணர்ந்தால் அவர்களை கண்டும், காணாமலும் விட்டுவிடுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. அதை அடையாளம் கண்டு குழந்தைகளை வெற்றிக்கு அழைத்துச் செல்வது பெற்றோரின் கடமை.

ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டே பிறக்கின்றது. அக்குழந்தையின் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த அதற்குரிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோர்களின் கடமை. ஒவ்வொரு குழந்தையும் அனைத்து அம்சங்களையும் தங்களிடம் கொண்டுள்ளன.

இன்றைய உலகம் நேற்று குழந்தைகளாக இருந்தவர்களால் உருவாக்கப்பட்டதைப் போல நாளைய உலகம் இன்று குழந்தைகளாக உள்ளவர்களால் உருவாக்கப்பட உள்ளது என்பது உண்மைதான்.

உலக அதிசயங்கள், அறிவியல் கண்டுபிடிப்புக்கள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய அனைத்தும் மனித சிந்தனையின் வெளிப்பாடே. மனிதனின் மூளை என்பது பரிணாமத்தின் உச்சம் என்று கூறலாம்.

குழந்தைகளை வளர்க்கும்போது "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்ச்சி'' என்பதற்கேற்ப வளர்க்க பெற்றோர்கள் எண்ண வேண்டும். ஒரு செயலைச் செய்ய பழக்கும்போது நம் குழந்தையால் முடியும் என்று மனமாற நம்பினால்தான் குழந்தைக்கும் தன் திறமை மேல் நம்பிக்கை ஏற்படும்.

குழந்தைகளின் பேச்சு, நடை உடை பாவனைகள் பெரும்பாலும் பெற்றோர்களையே ஒத்திருக்கும். சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் ஒரே மாதிரியும் இருக்கலாம் அல்லது மாறுபட்டும் இருக்கலாம். ஆனால் முரண்படாமல் ஆக்கப் பூர்வமாக சிந்தித்து செயல்பட பெற்றோர்கள் பிள்ளைகளை பழக்க வேண்டும். பெற்றோர்கள் முன்மாதிரியாக நடந்து கொள்வதன் மூலமே இது சாத்தியம்.

கருவுற்ற நாய் ஒன்று விபத்தில் தனது பின் கால்களை இழந்தது. அதனால் நடக்கும்போது பின்பக்கத்தை தாங்கி தாங்கியே நடந்தது. நாளடைவில் அந்த நாய் நான்கு நாய் குட்டிகளை ஈன்றது. அந்த குட்டிகளுக்கு கால்களில் எந்தவித குறைபாடும் இல்லை. ஆனால் தங்களது தாய் நடப்பதைப் பார்த்து, பார்த்து தாங்களும் பின்கால்களைப் பயன்படுத்தாமல் தாங்கித் தாங்கி நடந்ததாக அறிகிறோம்.

மனித குலத்திற்கு சிந்திக்கும் ஆற்றல் இருந்தாலும் தனித்தன்மை இருந்தாலும் குடும்பசூழல், பெற்றோர்களின் வளர்ப்பு முறை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றது. குழந்தைகளின் மூளை என்பது கன்னிநிலம் போன்றது. அதில் எது விதைக்கப்படுகின்றதோ? அதன்படியே வளர்ச்சியும் அமையும். ஒவ்வொரு குழந்தையின் ஆற்றலையும் இளம் வயதிலேயே இனங்கண்டு அதைத் தூண்டும் விதத்தில் வளர்க்கும்போது ஒவ்வொருவரும் அவரவரின் ஆற்றலுக்கு ஏற்ப சிறந்து விளங்கும் வாய்ப்பு ஏற்படும்.

உங்களுடைய குழந்தைக்கு உற்சாகத்தை ஊட்டுவதே நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் சிறந்த பரிசாகும். உங்கள் குழந்தை சிறந்த அறிவாளியாக விளங்க வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. ஏன் அவர்கள் சிறந்த அறிவாளியாக செயல்பட வேண்டும்? என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும். உலகில் சிறந்தது எதுவோ அதை உங்கள் குழந்தை பெற வேண்டும் என்று எண்ணுவது தவறில்லை. நீங்களும் உங்களிடம் உள்ள சிறந்த அம்சங்களை உங்கள் குழந்தைகளுக்கு அளியுங்கள்.

சிறப்புத் தன்மை எது?
ஒரு தந்தை தனது மகனை சிறந்த முறையில் வளர்த்து நன்றாக படிக்க வைத்து உயர் பதவியில் சிறப்பாக செயல்பட வைத்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் ஒன்று பெண் குழந்தை மற்றொன்று ஆண் குழந்தை. இரண்டு குழந்தை களையும் மிகவும் அக்கறையாக வளர்த்தார் அவர். தன் தந்தை எவ்வாறெல்லாம் தன்னை வளர்த்தாரோ அதே விதத்தில் இரண்டு குழந்தைகளையும் வளர்த்தார்.

பெண் குழந்தை அனைத்து சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக படித்தது. ஆனால் அவரது ஆண் குழந்தைக்கு எவ்வளவு கவனம் செலுத்தினாலும் சிறப்பாக படித்து மதிப்பெண்கள் பெற முடியவில்லை. இது தந்தைக்கு கவலையை அளித்தது.

ஒரு நாள் அந்தக் குழந்தைகளின் தாத்தா இறந்துவிட்ட தகவல் கிடைத்தது. உடனே குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டார் தந்தை. அங்கு தாத்தாவின் இறுதி காரியங்களை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆண் குழந்தை, அதாவது இறந்தவரின் பேரக்குழந்தை தன் தாத்தா எவ்வாறெல்லாம் தன்னை தூக்கி வளர்த்து அன்பு காட்டினார் என்று நினைவு கூர்ந்தான். இறுதி மரியாதை செய்ய வருகை புரிந்த பெரியவர்களை கைபிடித்து அழைத்துச் சென்று உதவினான். இறுதியில் ஊர்வலம் புறப்பட்டவுடன் தானே முன்வந்து தன் தாத்தாவை சுமந்து செல்லும் சவப்பெட்டியை தானும் ஒரு புறம் தோள் கொடுத்து தூக்கிச் சென்றான்.

இதையெல்லாம் கவனித்த அவனது தந்தை, தன் பையனின் பொறுப்பான செயல்பாடுகளைப் பார்த்து மனம் நெகிழ்ந்தார். இத்தகைய அன்பின் வெளிப்பாட்டை அவர் இதுவரை பார்த்ததில்லை. அவர் வைத்திருந்த அளவுகோல் தனது இரண்டு குழந்தைகளும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதே. அவர் போட்ட கணக்கில் அவரது மகனால் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை. ஆனால் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவதில் அவரது மகன் நிறைய மார்க் வாங்கியது அவருக்கு புதிய அர்த்தத்தை அளித்தது.

விரும்புவது எது?

எது குழந்தைகளுக்கு சிறந்தது? என்பது குழந்தைகளின் உளப்பாங்கை பொருத்ததே. ஒருவர் விளையாட்டில் சிறந்தவராக விளங்கலாம். ஒருவர் விஞ்ஞானியாக உருவெடுக்கலாம். மற்றவர் சிறந்த தொழில் அதிபராக விளங்கலாம். ஒருவர் கருணையுடன் பிறருக்கு சேவை செய்வதை தன் பணியாகக் கொள்ளலாம். ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என்று எண்ணும்போது குழந்தைகளின் விருப்பத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சிறு குழந்தைகளின் கவனம் இரண்டு நிமிடங்கள்தான் ஒருபொருளின் மீதோ அல்லது ஒரு காட்சியின் மீதோ இருக்கும். அதன்பிறகு குழந்தைகளுக்கு நாட்டம் குறைந்துவிடும் என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். எப்போது கண்டித்து வளர்க்க வேண்டும், எப்போது அன்பு பாராட்ட வேண்டும், எப்போது தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். அன்பு, அறிவு ஆகிய இரண்டும் முக்கியம். அன்பும், அறிவும் இணைந்து செயல்படும் இளைஞர்கள்தான் தங்களை உயர்த்திக் கொண்டு சமுதாயத்தையும் உயர்த்த முடியும்.

நவீன தகவல் உலகத்தில் வாழும் இன்றைய குழந்தைகள் அந்த நவீனத்தில் தொலைந்துபோய் விடாமல் திறம்பட கையாள கற்றுத்தர வேண்டும். ஒரு தாய் தனது குழந்தைக்கு கற்பது என்பது ஒரு இனிமையான அனுபவம் என்று இளம் வயதிலேயே பழக்கப்படுத்தினார். அந்தக் குழந்தை நன்கு வளர்ந்த பின்பும் கற்பது, விளையாடுவது, நண்பர்களுடன் சேர்ந்து பழகுவது ஆகிய அனைத்தையும் இனிமையாக செய்தது. இது நல்ல வளர்ப்பு முறையையே காட்டுகின்றது.

விருப்பப்படியே வாழ்வு
குழந்தைகளுக்கு அவர்களது விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை பெற்றோர்கள் வழங்க வேண்டும். ஒரு கோடீஸ்வரர் ஆரம்ப காலத்தில் சாதாரண பணியில் சேர்ந்து உழைப்பால் முன்னேறி தனது சேமிப்பை பங்குச் சந்தையில் முதலீடு செய்து பின்னர் செல்வந்தராக ஆனார். ஆனால் அவர், தான் எளிமையாக வாழ்ந்த வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவில்லை. அவரால் வசதியை அனுபவிக்க முடியும். ஆனால் அவருக்கு அதில் விருப்பம் இல்லை.

ஒரு செல்வந்தர் ஆடம்பரமாக வாழலாம், எளிமையாகவும் வாழலாம். ஆனால் வறுமையில் வாழ்பவர் வசதியாக வாழ முடியாது. அவரவர் விருப்பமே அவரவர் தேவையை நிர்ணயிக்கின்றது. ஏணியின் உச்சி வரை ஏற நினைப்பவர்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைத்து மேலே ஏறவேண்டும். இருப்பது போதும் என்று நினைப்பதும் அவரவர் மனநிலையை பொறுத்ததே.

ஆகவே எந்தவித நிர்ப்பந்தமும் விதிக்காமல், மதிப்பீடு செய்யாமல் குழந்தைகளிடம் அன்பு பாராட்டினால் அவர்களும் அவர்கள் அடைய நினைக்கும் இலக்கை அடைவது உறுதி.

. சுரேஷ்குமார்