Sunday, May 3, 2009

காதல் விடும் கண்ணீர்

மனைவி தற்கொலை செய்துவிட்டதால், குழந்தையை வளர்க்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தான் அவன். கல்லூரிக்கு படிக்க போய்க்கொண்டிருந்தாள், ஜானகி. அவள் பார்வையில் அவன் படுகிறான். `இவர் இந்த குழந்தையை வளர்க்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்..!' என்று அவள் பரிதாப உணர்ச்சி கொள்கிறாள்.

எந்த சினிமாவில் அப்படி ஒரு அசட்டுத்தனமான `கருணைக் காட்சியை' பார்த்து தொலைத்தாளோ! `நாமே இவருக்கு வாழ்க்கை கொடுத்து இந்தக் குழந்தையை வளர்த்தால் என்ன?' என்ற கேள்வி அவளுக்குள் எழ, அவனது பெற்றோரிடம் சென்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தினாள். `அவன் குடிகாரன்.. கல்யாணம் பண்ணிக்காதே' என்று அவர்கள் சொன்னபோதும் கேட்காமல் அவனையே திருமணம் செய்துகொண்டாள்.

திருமணமான தொடக்கத்திலே நரகத்தில் சிக்கிக்கொண்டது போன்ற நிலை. தினமும் குடித்துவிட்டு வருவான். தாய்மையடைந்தாள். அன்று குடித்துவிட்டு வந்த அவனால் அவள் கடுமையாக தாக்கப்படுகிறாள். ரத்தம் வழிய, அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தத்திற்கு வந்த அவள், `என்னை போலீஸ் நிலையத்தில் கொண்டு சேர்த்திடுங்கள்' என்று டிரைவர்களிடம் கெஞ்சுகிறாள். அவர்கள் `சென்னை கிறிஸ்தவ சமுதாய தொண்டுக் குழு'விடம் சேர்க்கிறார்கள்.

பத்து நாட்கள் அந்தப் பெண் அங்கு வைத்து பராமரிக்கப்பட, அதை எப்படியோ தெரிந்துகொண்ட அவன் தேடி வந்து அவள் காலில் விழுகிறான். `இனி குடிக்கவும் மாட்டேன் உன்னை அடிக்கவும் மாட்டேன்' என்று கூறி அவள் மனதைக் கரைத்து தன்னுடன் அழைத்துச் செல்கிறான். அவளை மீண்டும் கர்ப்பிணியாக்கிவிட்டு, திரும்பவும் தன் வன்முறையைத் தொடங்கியிருக்கிறான். அவள் மீண்டும் அந்தக் குழுவிலே தஞ்சம் அடைய, அங்கேயே பிரசவம் பார்த்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

"தெரியாமல் இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்துவிட்டேன். இரண்டு குழந்தைகளும் ஆகிவிட்டன. இனி என்ன செய்வது? வாழ்ந்துதானே ஆக வேண்டும் என்கிறாள், ஜானகி. எப்படியாவது அவருடன் வாழ்ந்தாக வேண்டும் என்ற எண்ணத்துடன் அவள் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்...''-என்கிறார், தொண்டு குழுவின் குடும்ப நல ஆலோசகர் பில்லா செல்வமணி.

சுசித்ராவும், இளைஞனும் ஏற்றுமதி ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார்கள். அவளுக்கு 17 வயது. அவனுக்கு 24. அவர்களுக்குள் காதல் புகுந்து கொண்டது. இரண்டு வருடம் கடந்ததும் சுசித்ரா அவனையே திருமணம் செய்துகொள்வேன் என்று ஒற்றைக்காலில் நின்றாள். அவளது பெற்றோர் திருமணம் செய்து வைத்து அவனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கினார்கள்.

உடனே அவன் வேலைக்கு போவதை நிறுத்தினான். `நீ விரும்பியதால்தானே திருமணம் செய்தேன். உன் வீட்டோடுதானே இருக்கிறேன். அதனால் நான் கேட்பதை எல்லாம் வாங்கிக்கொடு..' என்று கேட்டுக் கொண்டே இருந்தான். அவள் தரப்பில் இருந்து கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். பணம் கொடுப்பதை நிறுத்தியதும் மனைவியை அடிக்கத் தொடங்கினான். 2 குழந்தைகளும் பிறந்தன. அவனது அடி உதையை பொறுத்துக்கொள்ள முடியாத அவள், தற்கொலை செய்வதற்காக கிணற்றில் குதித்தாள். படுகாயம் அடைந்தாள். வழக்கு பதிவானது. தன்னை காட்டிக்கொடுத்து விடக்கூடாது என்று கணவன் கேட்டுக்கொள்ள அவள் போலீசிடம், `தண்ணீர் எடுக்கும் போது தவறி கீழே விழுந்துவிட்டேன்' என்றாள். அவள் சில வருடங்கள் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்க அவனோ வெளிïருக்கு வேலை தேடி போகிறேன் என்று கூறிக்கொண்டு காணாமல் போய்விட்டான். சில வருடங்களில் அவனை கண்டுபிடித்தபோது, இன்னொரு பெண்ணை திருமணம் செய்து, குழந்தையும் பெற்று குடும்பம் நடத்திக்கொண்டிருந்தான்.

"அவனை வசமாக சிக்கவைத்து பாதிக்கப்பட்ட மனைவியையும், அந்த குழந்தைகளையும் சந்திக்க வைத்தோம். அவன் அந்த குழந்தைகளை எட்டிக்கூட பார்க்கவில்லை. எந்த குற்ற உணர்வும் இல்லாதவனாக அவன் நின்று கொண்டிருந்தான்..'' என்று உருக்கமாகச் சொல்கிறார், குழுவின் இன்னொரு ஆலோசகரான மெர்சி.

சுமாரான அழகு என்றுகூட சொல்ல முடியாத சுப்பிரமணி, அழகான அந்தப் பெண்ணை ஒரு தலையாக காதலித்தான். அவளை கல்யாணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தான். அவள் மறுப்பு தெரிவித்ததும், `நீ என்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்' என்று மிரட்டினான். திருமணம் நடந்தது.

அடுத்த சில மாதங்களிலே அவன், அவள் மீது சந்தேகப்பட ஆரம்பித்தான். அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்த பின்பும், அவன் சந்தேகம் குறையவில்லை. புடவை ஒதுங்கிக் கிடந்தால் கூட `எந்த ஆணால் அது ஏற்பட்டது?' என்பான். பூ சற்று கசங்கி இருந்தால், `யாரால் அது கசக்கப்பட்டது?' என்று கேட்பான். வேலைக்கு போய்விட்டு அவள் வீடு திரும்பியதும், உடையை அவிழ்த்துகூட `பரிசோதனை' செய்ய ஆரம்பித்திருக்கிறான்.

"அவளால் பொறுத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது அவன் கட்டிய தாலியை கழற்றி அவன் முகத்திலே வீசிவிட்டாள்''-என்று தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார், குழுவின் மூத்த ஆலோசகரான ïஷோ சேவசங்கர்.

எம்.சி.சி.எஸ்.எஸ். அமைப்பு தமிழக சமூக நல வாரியத்தின் நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்கும் இடம், கவுன்சலிங், சட்ட உதவி, மருத்துவ வசதி, வேலைக்கான பயிற்சி போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது.

இதன் செயல் செயலாளர் இசபெல் சொல்கிறார்...

"கடந்த ஏப்ரல் முதல் இந்த மார்ச் மாதம் வரை திருமணமாகி கணவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் 176 பேர் எங்களிடம் உதவி கேட்டு வந்திருக்கிறார்கள். அதில் 83 பேர் காதல் திருமணம் செய்தவர்கள். பெரும்பாலான பெண்கள் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் வரை எப்படியாவது சமாளித்து வாழ்ந்துவிட வேண்டும் என்று போராடிப் பார்க்கிறார்கள். அதற்கு வாய்ப்பே இல்லாத நிலை உருவாகும்போது எங்களிடம் உதவி கேட்டு வருகிறார்கள்''-என்கிறார், இசபெல்.

காதல் திருமணங்கள் கண்ணீரில் முடியாமல் இருக்க, இவர்களுடன் வார்டன் செல்வியும் சேர்ந்து தரும் ஆலோசனைகள்:

* சினிமாக்கள், டெலிவிஷன் தொடர்களை பார்த்துவிட்டு அந்த காட்சிகள் போல் நிஜத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.

* குடிப்பழக்கம் கொண்ட ஆண்களை திருமணம் செய்வதற்கு முன்பு அவர்களிடம், திருமண வாழ்க்கை தேவையா அல்லது குடி தேவையா? என்பதை தீர்மானிக்கச் சொல்லுங்கள். குடியை மறக்க முன்வந்து அதற்கான சாத்தியங்கள் இருந்தால் மட்டுமே பெண்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வேண்டும்.

* பெற்றோருக்கு சந்தேக நோய் இருந்தால், அந்த பாரம்பரிய பாதிப்பு அவர்களுடைய மகன்களில் ஒரு சிலருக்கும் இருக்கக்கூடும். குடிக்கு அடிமையானவர்களிடம் சந்தேக நோய் இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது.

* மனைவியை இழந்தவர், மனைவியை இழந்துவிட்டு குழந்தையை வளர்க்க முடியாமல் தவிப்பவர்கள் மீது அனுதாபம் ஏற்பட்டு அவர்களுக்கே வாழ்க்கையை அர்ப்பணித்துவிடலாம் என்ற தவறான முடிவுக்கு பெண்கள் ஒருபோதும் வரக்கூடாது.

* அழகாக இருக்கும் பெண்களால் காதலிக்கப்படும் ஆண்கள் ஓரளவாவது அழகாக இருக்கவேண்டும். அவர்கள் அழகற்றவர்களாக இருந்தால் சில ஆண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் அழகான மனைவியை சந்தேகப்படும் சூழ்நிலை உருவாகிறது.

* பைக்குகளில் காதலர்கள் இரண்டறக் கலந்த நிலையில் பயணிப்பதையும், ஜோடியாக சினிமாவுக்கு செல்வதையும், ஐஸ்கிரீம் சுவைப்பதையும் பார்த்து தானும் அதற்காக காதலிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு பெண்கள் செல்லக்கூடாது.

* அவசரப்படாமல் பெற்றோர்களிடம் உங்கள் காதல் பற்றி மனம்விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்வதையும் கேட்டு நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.

* 90 சதவீத காதலர்கள் திருமணத்திற்கு முன்பே `உறவு' வைத்துக்கொள்ளும் நிலைக்கு சென்றுவிடுகிறார்கள். இரண்டு மூன்று முறை காதலரோடு வெளியே சென்றுவிட்டாலே, காதலர்கள் `அதற்கான' சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறார்கள். எக்காரணம் கொண்டும் திருமணத்திற்கு முன்பே உறவு வைத்துக்கொள்ள இடம் கொடுத்துவிடக்கூடாது. ஒருவேளை எல்லை மீறிவிட்டாலும் அதற்கு பிராயசித்தமாக அவரையே திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கவும் ஆக்கி விடக்கூடாது.

* அனுதாபம் ஒருபோதும் காதலாகி விடாது. அப்படி உருவாகும் காதலில் துளிர்க்கும் வாழ்க்கை ஆரம்பித்த கொஞ்சக் காலத்திலேயே பட்டுப்போகவும் வாய்ப்பு அதிகம்.

* பெண்கள் தான் இந்த விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

No comments: