Thursday, May 21, 2009

இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை மற்றும் நிவாரணம் - அமெரிக்கா வலியுறுத்தல்


இலங்கையில் விடுதலைப்புலிகளை முற்றிலுமாக தோற்கடித்து விட்டதாகவும் போர் முடிந்து விட்டதாகவும் அதிபர் ராஜபக்சே நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த சூழ்நிலையில் சிங்களர்களுக்கு நிகராக தமிழர்களுக்கு சம உரிமை மற்றும் அதிகாரங்களை அளிக்குமாறு சர்வதேச நாடுகள் இலங்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் இயன் கெல்லி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீவிரவாதத்தை இலங்கை அரசு தோற்கடித்து இருப்பது உண்மையானால் போரினால் காயமடைந்த மக்களுக்கு நிவாரணம் பணிகளை உடனடியாக தொடங்குவது அவசியம். ஜனநாயகம், அனைவருக்கும் வளமான வாழ்க்கை, சகிப்பு தன்மை ஆகியவற்றை கொண்ட ஒருங்கிணைந்த இலங்கையை உருவாக்க வேண்டும். தமிழர், சிங்களர் ஆகிய இரு தரப்புக்கும் சம நீதிக்கான பணிகளை தொடங்க வேண்டும்.

சிங்கள, தமிழ் மற்றும் இதர மக்கள் இணைந்து பணியாற்றுவதிலேயே இலங்கையின் நிரந்தர அமைதி இருக்கிறது. புதிய அதிகார பரவலாக்கும் ஏற்பாடுகளை தொடங்குவதோடு அனைத்து இலங்கை மக்களும் சம உரிமை பெற வழி வகுக்க வேண்டும்.

இலங்கையின் வட பகுதியில் கடந்த சில மாதங்களாக நீடித்த போரினால் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த மக்களின் நிலைமை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைகிறது. சமீபத்திய போரினால் உள்நாட்டிலேயே அகதிகளான தமிழர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.

அந்த மக்களுக்கு சர்வதேச தரத்திலான உதவிகளை வழங்குவதற்கு .நா., செஞ்சிலுவை சங்கம் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு இலங்கை அரசை கேட்டுக் கொள்கிறோம். இலங்கையின் அனைத்து மக்களுக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்க செய்வதற்கு இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்க தயாராக இருக்கிறது. முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைத்து மக்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுடைய வீடுகளுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளுக்கு கோரிக்கை

இதற்கிடையே, இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சுய நிர்ணய அதிகாரம் அளிக்க வேண்டும் என்று `இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை மற்றும் நிவாரணம்` என்ற அமெரிக்க அமைப்பு வலியுறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், `விடுதலைப்புலிகளை வெற்றி பெற்று விட்டதாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தி இருப்பது ஒரு அரசியல் தவறு. அந்த நாட்டில் உள்ள மக்களுக்கு உரிமை கிடைக்காதவரை போர் முடிந்தது என்பது நம்ப முடியாதது. இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் போர் முடிந்து ஒரு அமைதி நிலவ வேண்டும் என்பது மட்டும் சர்வதேச சமுதாயத்தின் விருப்பமாக இருக்க கூடாது. பாதிக்கப்பட்ட தமிழ் சமுதாயத்துக்கு சம உரிமை மற்றும் சுய அதிகாரம் கிடைப்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் இலங்கை நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக .நா. பொதுச் செயலாளர் பான் கி - மூன் நாளை (மே 22) கொழும்பு செல்கிறார். இரண்டு நாட்கள் அங்கு பயணம் மேற்கொள்ளும் அவர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான அவசர தேவை குறித்தும் அனைவருக்கும் சம உரிமை கிடைக்கச் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தகவலை ஜெனீவாவில் பான் கி-மூன் நேற்று தெரிவித்தார். அவருடைய மூத்த உதவியாளரான விஜய் நம்பியார், ஏற்கனவே இலங்கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: