Monday, May 18, 2009

அரசியலில் இளைஞர்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்திய ராகுல் காந்தி


இந்த பாராளுமன்ற தேர்தலின் மூலம், அரசியலில் இளைஞர்களின் ஆதிக்கத்தை ராகுல் காந்தி ஏற்படுத்தி உள்ளார். புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 82 பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவார்கள்.

சோனியா காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான 39 வயது ராகுல் காந்தி இந்த தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார். காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள அவர், இந்த தேர்தலில் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.

குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் அவர் மும்முரமாக பிரசாரம் செய்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றிக்கு ராகுல் காந்தியின் பிரசாரமும் ஒரு முக்கிய காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேசாமல், முக்கியமாக காங்கிரசின் கொள்கைகள், திட்டங்கள், நாட்டின் எதிர்கால வளர்ச்சி ஆகியவை பற்றி மட்டுமே அவர் பேசியது மக்களை பெரிதும் கவர்ந்தது. குறிப்பாக அவரது பேச்சு இளைஞர்களை கவர்வதாக அமைந்தது.

தனது பிரசாரத்தின் மூலம், நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒரு வலுவான அடித்தளத்தை ராகுல் காந்தி ஏற்படுத்தி உள்ளார். ஒரு காலத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் மிகவும் செல்வாக்கு பெற்று விளங்கிய காங்கிரஸ், பின்னர் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளின் வளர்ச்சியினால் அங்கு பெரும் சரிவை சந்தித்தது.

இந்த தேர்தலில் மூலம் உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் செல்வாக்கை ராகுல் காந்தி மீண்டும் நிலை நிறுத்தி இருக்கிறார் என்றால் அது மிகை அல்ல. அந்த மாநிலத்தில் தனியாக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. கடந்த 2004 தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு வெறும் 9 இடங்கள்தான் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பாராளுமன்ற தேர்தலில் புதிதாக வாக்கு அளித்தவர்களில் சுமார் 10 கோடி பேர் இளைஞர்கள் ஆவார்கள்.

இளைஞர்களின் ஆதிக்கம்

இந்த தேர்தலின் மூலம் அரசியலில் இளைஞர்களின் ஆதிக்கத்தை ராகுல் காந்தி ஏற்படுத்தி உள்ளார் என்றால் அது மிகை அல்ல. அரசியலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வற்புறுத்தி வரும் ராகுல் காந்தி, காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்விலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் முக்கிய கவனம் செலுத்தினார். இந்த தேர்தல் மூலம் 15-வது பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களில் 226 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவார்கள். 82 பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள்.

50 வயதுக்கும் குறைவான வயதுடைய இளம் எம்.பி.க்களில் 77 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 116 பேர்களில் கணிசமான பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள்.

காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள இளம் எம்.பி.க்களில் ஒருவரான முகமது எச்.சயீத்துக்கு 26 வயதுதான் ஆகிறது.

புதிய எம்.பி.க்களில் 147 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்களில் அதிக வயதானவர் ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ராம்சுந்தர் தாஸ். 88 வயதான இவர் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

76 வயதான பிரதமர் மன்மோகன்சிங் தனது புதிய மந்திரிசபையில் ராகுல் காந்திக்கு இடம் அளிக்கப்போவதாக ஏற்கனவே விருப்பம் தெரிவித்து உள்ளார். எனவே ராகுல் காந்தி தவிர மேலும் பல இளைஞர்களுக்கு அவர் வாய்ப்பு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுலுக்கு புகழாரம்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றியை தேடித் தந்ததில் ராகுல் காந்தியின் பங்கு மத்தானது என்று இளம் காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.

இந்தியா முழுவதும் இருந்து பல இளைஞர்கள் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில்; ராகுல் காந்தியின் தலைமையை மக்கள் வரவேற்று உள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து பல இளைஞர்கள் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த பெருமை காங்கிரஸ் கட்சியையே சேரும் என்று குறிப்பிட்டார். பிரதமர் மன்மோகன்சிங்கின் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள் என்றும், அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எடுபடவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேபோல் மற்றொரு இளம் எம்.பி.யான ஜிதேன் பிரசாத்தும், காங்கிரசுக்கு கிடைத்த வெற்றிக்கான பெருமை ராகுல் காந்தியையே சேரும் என்றார்.

இதற்கிடையே, தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றியை காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் டெல்லியில் நேற்று ராகுல் காந்தி கொண்டாடினார். தேர்தல் வெற்றிக்கான உத்திகளை வகுப்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தனியாக ஏற்படுத்தப்பட்டு இருந்த அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அகமது பட்டேல், ஜனார்தன் திவிவேதி, ஆஸ்கார் பெர்னாண்டஸ், ஜெய்ராம் ரமேஷ், தீபேந்தர் ஹோடா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் ஜனார்தன் திவிவேதி; கூட்டத்தில் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் ராகுல் காந்தி நன்றி தெரிவித்தாகவும் கூறினார்.

ராகுல் காந்தி மத்திய மந்திரி ஆவாரா? என்று கேட்டதற்கு; இதுபற்றி சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும் ஏற்கனவே கூறி இருக்கிறார்கள் என்றும், ராகுல் காந்தி மந்திரிசபையில் சேர பிரதமர் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் ஆனால் இதுபற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் ஜனார்தன் திவிவேதி தெரிவித்தார்.

No comments: