Sunday, May 17, 2009

தியாகமே தெய்வீகம்


மற்றவர்களின் நலனுக்காக, சமுதாய மேம்பாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்தாம் மனித வரலாற்றில் மகான்களாகப் போற்றப்படுகிறார்கள். தியாகத் திரியாய் எரிந்து, ஒளிகொடுத்துச் சிறந்தவர்கள்தாம் இதயங்கள்தோறும் அணையா விளக்காய் ஏற்றப்படுகிறார்கள்.

தியாகமே மிகப்பெரிய தர்மம். அதுதான் தெய்வீகத்தின் அடிப்படை அம்சம். பிறருக்காய் தன்னை ஒடுக்கிக் கொள்கிற அந்தப் புண்ணியம் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. ஒருவருக்காய் ஒருவர் தமது சுகங்களைத் துறப்பதும், ஒருவருக்காய் ஒருவர் தமது மகுடத்தை இழப்பதும் லேசான காரியமா!

நல்லமனம் கொண்டவர்கள் மட்டுமே மற்றவர்களின் நலனைப் பற்றிச் சிந்திக்க முடியும். உயர்ந்த உள்ளங்களிலிருந்தே உன்னதமான சிந்தனைகள் எழுந்து வருகின்றன. அத்தகைய உள்ளங்களில் போட்டி, பொறாமை, பகை, துவேஷம் ஆகியவற்றிற்கு இடமில்லை. மாறாக, ஒவ்வொரு சிந்தனையிலும் அன்பொன்றே அடிநாதமாய் இழையோடும். அந்த அன்பே தியாகத்தின் திறவுகோல்.

அதனால்தான் `அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' என்றான் தெய்வப்புலவன். அன்பு கனிந்த உள்ளம் அனைத்தையும் தாங்குகின்றது; அனைத்தையும் கொடுக்கிறது; கொடுப்பதில் மகிழ்கிறது.

மற்றவர்களிடமிருந்து பெறும்போது மட்டும் சிலருக்கு வேகமாகக் கைநீளும்; கொடுக்க வேண்டுமென்றால் மனம் வாடிப்போகும்; கைசுருங்கிக் கொள்ளும். பைசா செலவில்லாமல், தயாளப் பிரபுபோல் மணிக்கணக்காக வாய்கிழியப் பேசுவதற்கு அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். ஆனால் எதையாவது கொடுக்கச் சொல்லுங்கள்; வறட்டு வேதாந்தம் பேசுவார்கள்.

`தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டென்போன், சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்; தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்' என்றான் அல்லவா பாரதிதாசன். அத்தகைய வீணர்களுக்கு ஊரைப் பற்றி என்ன கவலை; யாரைப் பற்றிதான் என்ன கவலை!

வேளை தவறாமல் உண்ணுவதும், உறங்குவதும் மட்டுமே வாழ்வின் கடமைகளல்ல. அதற்கென்று ஒரு வாழ்க்கை தேவையும் அல்ல. தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியுமே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு, தான் வாழ்கின்ற சமுதாயத்தின் மீது என்னதான் அக்கறை இருந்துவிடப் போகிறது!

நமக்காக நாம் வாழ்வதும், நம்முடைய குடும்ப நலனில் கரிசனை கொள்வதும் மிக மிக அவசியம். அப்படியானால்தான் குடும்பம் தழைக்கும்; இல்லறம் சிறக்கும். அதே சமயம், ஒருவன் தன் குடும்ப நலனுக்காக மற்றவர்களின் நலனை அழிக்கத் துணிவதோ, பொதுநலச் சிந்தையின்றிக் குறுகிய வட்டத்திற்குள் முடங்கிக் கொள்வதோ நியாயமல்ல.

ஈவு, இரக்கம், தூய அன்பு, சேவை மனப்பான்மை, சுயநலத் தியாகம் ஆகியவற்றிற்காகவே ஒரு இல்லறவாசியின் வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. சுயநலத் தியாகத்தை விடவும் உன்னதமான திருநிலை என்று வேறு எதையும் நாம் சொல்லிவிட முடியாது.

தியாகம் என்பது அன்பு, கருணை, பக்தி ஆகியவற்றின் உச்சநிலை. சந்தனக் கட்டையை தேய்த்தாலும் மணம்தான்; அரைத்துக் கரைத்தாலும் மணம்தான். கரும்பைக் கடித்தாலும் சுவைதான்; ஆலையில் கசக்கிப் பிழிந்தாலும் சுவைதான். தர்ம சிந்தை உள்ளவர்களின் வாழ்க்கையும் அப்படியே. அவர்களின் வாழ்வில் எப்போதும் அன்பின் சுவை; தியாகத்தின் நறுமணம்.

படைத்தலைவனும் மாவீரனுமான பிலிப் சிட்னி போர்க்களத்தில் அடிபட்டுக் கிடக்கிறான். இரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. பயங்கர வேதனை. கொடிய தாகம். எனினும், நாவறட்சியைத் தீர்ப்பதற்காக அவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்ணீரை அவன் குடிக்கவில்லை. தன்னைப் போன்றே போரில் அடிபட்டு வீழ்ந்து கிடந்த இன்னொரு படைவீரனுக்குக் கொடுத்தான். என் தேவையைக் காட்டிலும் உன் தேவை பெரிது என்று சொல்லி அவனுடைய தாகத்தைத் தணித்து, அவனுக்காக தன்னுடைய உயிரையே இழந்தானாம்.

தியாகம் செய்வதற்குப் படிப்பறிவு தேவையில்லை. வேத சாத்திரங்களைக் கரைத்துக் குடித்த ஞானியராக இருக்க வேண்டும் என்பதில்லை. அன்பு ஊற்றெடுத்துப் பொங்கிப் பெருகுகின்ற உள்ளம் இருந்தால் போதும்.

ஜெட் என்றொரு அல்சேஷியன் நாய். இரண்டாம் உலகப் போரில் லண்டன் மீது விமான குண்டுவீச்சு நடைபெற்றபோது, பலரைக் காப்பாற்றிய பெருமை இதற்குண்டு. அதன் வீரத்தைப் பாராட்டி மிக உயர்ந்த விருதளித்துக் கௌரவித்தார்கள். 1949-ல் அதன் எஜமானி வீட்டுத் தோட்டத்தில் கொண்டுபோய் விட்டார்கள். அப்போது அந்த ஜெட், மெதுவாக நடந்து சென்று தனது எஜமானியின் மடியில் தலைவைத்து உயிரை

விட்டது.மனிதர்களுக்காகப் போராடியது. பல உயிர்களைக் காப்பாற்றியது. தன் உயிரைத் தியாகம் செய்தது. அந்த நாயின் உள்ளம், மனித வம்சத்திற்கு அப்பாற்பட்ட வானுறை தெய்வ உள்ளம்.

வைரம் என்பது சாதாரண கரிதான். `கிரிஸ்டலைஸ்' ஆகியிருக்கும் கரி. அவ்வளவுதான். ஆனால் அதற்கு அப்படியொரு மதிப்பு எப்படி வந்தது? அதன் அணுவின் கட்டட அமைப்பினால், ஒளியைப் பிரதிபலிக்கும் பிரகாசத்தினால் வந்ததாம். மனித வாழ்க்கையும் வெறும் பூஜ்ஜியம்தானே. ஆனால் அது எப்போது மதிப்பைப் பெறுகிறது? அளவற்ற அன்பின் ஒளியை தன்னலமற்ற செயல்களின் மூலம் பிரதிபலிக்கும் போதுதான் அல்லவா.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடினார் வள்ளலார். பிற உயிர்களைக் கொன்றழிப்போரின் வலைகளையும், தூண்டிலையும், கண்ணிகளையும் காண நேரிடும் போதெல்லாம் உள்ளம் நடுங்குகிறார். அதை அவர் எப்படிப் பாடுகிறார் பாருங்கள்:

துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்
தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறவுயிர் பதைக்கக்
கண்டகா லத்திலும் பதைத்தேன்
மண்ணில் வலையுந் தூண்டிலும் கண்ணி
வகைகளுங் கண்ட போதெல்லாம்
எண்ணியென் னுள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தைநின் திருவுள மறியும்!

வள்ளலாரின் இந்த திருவருட்பாவில், அவருடைய அன்பின் ஆழத்தையும் கருணையின் ஈரத்தையும் நம்மால் உணர முடிகிறது. ஒருவனுடைய அன்புதான் அவனை தியாகத்திற்குத் தூண்டுகிறது. அவனுடைய தியாகம்தான் பலருக்கு வாழ்வளிக்கும் ஊற்றாக மாறுகிறது.

புறாவுக்காக தன் உயிரையே கொடுப்பதற்குத் தயாரான சிபிச் சக்கரவர்த்தியின் உயரத்திற்கு நம்மால் வரமுடியாது என்றாலும், ஓரளவிற்காவது தர்ம சிந்தையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்காக சிறுசிறு தியாகங்களையாவது செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

உங்கள் நண்பர் அல்லது உறவினர் யாராவது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாரா?. அப்படியெனில், வாரத்திற்கு ஒருமுறையாவது அங்கு சென்று உங்கள் நேரத்தில் ஒரு சிறுபகுதியை அவருடன் செலவிடுங்கள். ஏதோ நீங்கள் மட்டும்தான் பிஸியாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு, தட்டிக் கழிக்காதீர்கள். ஏனெனில், மற்றவர்களுக்காக நீங்கள் கொடுக்கும் நேரம்கூட தியாகம்தான்.

பக்கத்து வீட்டில் ஏதாவது பிரச்சினையா? ஓடிச் சென்று உதவி செய்யுங்கள். தேவைப்பட்டால் சிறிதுநேரம் அவர்களுடன் இருங்கள். இரவு முழுவதும் கண்விழித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மகிழ்ச்சியுடன் செய்யுங்கள். அதுவும் தியாகம்தான்.

சாலையில் ஒருவன் பசியால் மயங்கிக் கிடப்பதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், உங்கள் கையிலிருக்கும் உணவைக் கொடுத்துவிடுங்கள். உணவில்லை என்றால் கொஞ்சம் தண்ணீராவது கொடுங்கள். அதுவும் தியாகம்தான்.

படிக்க வசதியற்ற ஏழைக்குப் பண உதவி செய்யுங்கள். இல்லையெனில், பழைய புத்தகங்களைக் கொடுங்கள். உங்கள் ஆடைகளில் ஒன்றிரண்டைக் கொடுங்கள். அந்த தர்ம சிந்தை தியாகம்தான்.

ஏழைகளை அரவணைப்பதற்கும், துக்கப்படுவோரின் கண்ணீரைத் துடைப்பதற்கும் உங்கள் கைகளைப் பயன்படுத்துங்கள். மற்றவர்களின் நலனுக்காக, அல்லது ஏதோ ஒரு பொதுநன்மைக்காக நீங்கள் எதையாவது இழந்து பாருங்கள். அர்த்தமுள்ள வாழ்க்கை என்ற மனநிறைவைப் பெற்றுக் கொள்வீர்கள்.

உங்களை நம்பி வந்தவரின் தேவையை நிறைவேற்றுங்கள். எப்பாடுபட்டாவது செய்து முடியுங்கள். அரிய செயல்களில் ஈடுபடுங்கள். அவற்றை நிறைவேற்றுவதற்குத் தியாகங்கள் தேவையெனில், தயங்காதீர்கள்.

உன்னத செயல்களுக்குத் தியாகங்கள் தேவைப்படுகின்றன. சாதனைகளுக்குக் காயங்கள் அவசியமாகின்றன.

சு-தோக்கு என்பவர் ஒரு காலத்தில் ஜப்பானில் மன்னராக ஆட்சி புரிந்தார். அவர் புத்தர்பிரானைப் பற்றி ஒரு நூலை எழுதியிருக்கிறார். ஒரு மன்னர் புத்தரைப் பற்றி நூல் எழுதுவதில் என்ன வியப்பு. ஒன்றுமில்லைதான். ஆனால் அந்த நூலின் 135 பக்கங்களையும் சு-தோக்கு தன் உடல் ரத்தத்தைக் கொண்டே எழுதினாராம்.

காலங்களைக் கடந்து தியாகங்கள் பேசப்படுகின்றன. ஏனெனில், உலகின் எந்தவொரு முன்னேற்றமாயினும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாயினும் ஒரு சிலரின் தியாகங்கள் மூலமாகவே அவை சாத்தியமாகியிருக்கின்றன. ஊசி முதல் விமானம் வரையில் ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் எத்தனை எத்தனை விஞ்ஞானிகள் தங்கள் உறக்கத்தையும் உல்லாசங்களையும் தியாகம் செய்திருக்கிறார்கள்.

தொழுநோயாளிகளின் மறுவாழ்விற்காக, ஏழை எளியோரின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக எத்தனை எத்தனை சமூக சேவகர்கள் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.

நாட்டின் விடுதலைக்காக, பெண்ணுரிமைக்காக, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் முயற்சிகளுக்காக எத்தனை எத்தனை சமூகப் போராளிகள் தங்கள் இளமையைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.

அவர்கள் எல்லோரும் வணங்கப்பட வேண்டியவர்கள். காலமெல்லாம் எண்ணி எண்ணி வாழ்த்தப்பட வேண்டியவர்கள். மற்றவர்களுக்காக, மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக ஒருவன் தன்னை இழக்கின்ற தியாகம் புனிதமானது; பூஜிக்கத்தக்கது.

நண்பனே,
சுயநலத் தியாகமே உன்னத தர்மம்;

பொதுநலச் சிந்தையே தெய்வீகம்.


தியாரூ

No comments: