Saturday, May 2, 2009

உறவுகள் தொடர்கதை

உறவுகள் ஒரு வகையில் சுமைதான். ஆனால் அந்தச் சுமையில் ஓர் அலாதி இன்பம்; சுகமான துயரம். அதை உள்ளம் தாங்கிக் கொள்கிறது. ஆனால் பிரிய நேரிடும்போது சித்தம் கலங்குகிறது; சோகம் நெஞ்சைப் பிழிகிறது.

காலமெல்லாம் மனித வாழ்வில் உணர்வுகளின் போராட்டம். வேறு வழியில்லை. போராடித்தான் ஆக வேண்டும். உறவு பிரிவு, நட்பு, பகை, சஞ்சலம், சந்தோஷம், ஜனனம், மரணம்... இப்படி எத்தனை எத்தனை பாதைகளில் வாழ்க்கைப் பயணம். சொர்க்கத்துக்குப் பக்கத்திலேயே நரகம்; இன்பத்திற்கு அருகிலேயே கண்ணீர்.

தனிமனித வாழ்க்கை என்பது பல மனிதர்கள் சம்பந்தப்பட்டது. இந்த உலகிற்குள் தனித்தனியாக வந்தாலும்கூட, சேர்ந்து சேர்ந்தே வாழ்கின்றோம். பிரிவதற்கு மனமில்லாமல் தவிக்கின்றோம்; பிரிவுகளில் துடிக்கின்றோம்.

பழுத்த இலைகள் உதிர்கின்றன. மண்பாண்டங்கள் என்றோ ஒரு நாளில் உடைந்து போகின்றன. நண்பர்கள் வருகிறார்கள் போகிறார்கள். உறவுகள் சேர்கின்றன பிரிகின்றன. காதல் கைகூடுகிறது கலைந்துவிடுகிறது. கற்பனைகளும் கனவுகளுமே தொடர்கின்றன. நினைவுகள் நெஞ்சை அழுத்திச் சித்திரவதை செய்கின்றன. இப்படியெல்லாம் இல்லையென்றால் வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போய் விடுமோ என்னவோ!

குதிபோட்டுச் செல்கின்ற ஆற்றுவெள்ளம் கடலில் கலந்து தன்னைத் தொலைத்துவிடுகிறது. அதற்காக ஆறு கவலைப்படுவதில்லை; கடலும் பாரப்படுவதில்லை. வருவோர் போவோரைப் பற்றிக் கவலை கொள்ளாமல் உலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. நாம்தாம் கலங்குகின்றோம்.

அன்பிற்குரியவர்களை இழக்க நேரிடும்போது அழுது புலம்புகின்றோம். ஆற்றமுடியாத வேதனையில் தூக்கம் கெட்டுக் கிடக்கின்றோம். மனம் கதறுகிறது; பிரிவை ஏற்க மறுக்கிறது.

அன்பு வலுமிக்கது. உறவுகளை வலுப்படுத்துவதும் அன்புதான். மனிதனை பலவீனப்படுத்துவதும் அன்புதான். மிகவும் வேண்டிய ஒருவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மனம் அலறித் துடிக்கிறதே. நேற்று தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியவர் இன்று இயற்கை எய்தி விட்டார் என்பதை அறிந்ததும் இதயத்துடிப்பு எகிறுகிறதே. கூடியிருந்தும் பேசிக் களித்தும் வளர்ந்தவர்களில் ஒருவர் காலமாகிவிட்டால் மற்றவர்களின் ஓலமும் ஒப்பாரியும் அவலப் பாட்டாகிக் கண்ணீர் கரைபுரள்கிறதே.

இது இயற்கையின் நியதி என்று தெரிந்திருந்தும்கூட, இழப்புகளை மனிதமனம் அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்வதில்லை. ஏன்? சதையும் இரத்தமும்தானே மனிதன். எனவே உள்ளத்திற்கு உண்மைகள் புரிந்திருந்தாலும், மாம்சீகத்தில் நாம் அழுகின்றோம்; பிரிவுத் துயரங்களில் விம்முகின்றோம்.

திருமாலின் வாகனமான கருடாழ்வாரை, ஞாயிறு தரிசித்தால் நாட்பட்ட பிணியகலும்; வெள்ளி, சனி தரிசித்தால் பூரண ஆயுள் கிடைக்கும் என்றெல்லாம் சொல்கிறார்களே! யாரை தரிசித்தால் சாகாதிருக்க முடியும் என்பதைச் சொல்லவில்லையே!

கால வெள்ளத்தில் மனித வாழ்க்கை இழுத்துச் செல்லப்படுகிறது. கைகோத்து வருபவர்கள் பாதி வழியிலேயே கைநழுவிப்போகிறார்கள். காலமெல்லாம் சேர்ந்திருப்போம் என்றவர்கள் திடீரெனக் கண்மூடிவிடுகிறார்கள். தனித்து விடப்பட்ட உறவுதான் தவிக்கிறது. போனவர் வந்துவிட மாட்டாரா என ஏங்குகிறது.

சாலவ இளவரசன் சத்தியவானுக்கு அற்ப ஆயுள் என்பதை அறிந்த பின்னும், `மணந்தால் அவனைத்தான் மணப்பேன்' என்று கூறிவிட்டாள் சாவித்திரி. அவளின் தந்தையான மன்னன் அசுவபதியின் மனதை நாரதர்தான் மாற்றினார். சத்தியவானுக்கும் சாவித்திரிக்கும் திருமணம் நடந்தது. சாவித்திரி தன் கணவனுடன் அவனது நாட்டிற்குச் சென்றாள். எதிர்பாராதவிதமாக பகை மன்னனின் படையெடுப்பு. நாடிழந்த சத்தியவான் தன் மனைவியுடன் வனம் புகுந்தான்.

காட்டில் விறகு வெட்டிக்கொண்டிருந்தான். திடீரென மார்பு வலி, துடிதுடித்தான், மயங்கிச் சாய்ந்தான். சாவித்திரியின் மடியில் உயிரை விட்டான். சாவித்திரி என்ன அவனைச் சுடுகாட்டிற்கு அனுப்பிவிட்டாளா? இல்லை. எமனைச் சந்தித்தாள். அவனோ நழுவிச் செல்ல முற்பட்டான். அவளோ விடவில்லை.

`நான் கற்புநெறி தவறாதவள் என்பது உண்மையானால் நான் கேட்கும் வரத்தை நீ தந்துவிட்டுச் செல்' என்று உடும்புப் பிடியாகப் பிடித்தாள். எமதர்மனுக்கு மீறிச்செல்ல முடியவில்லை. கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தான். அவள் சுமங்கலியாக குழந்தை பெற்று பெருவாழ்வு வாழ்வதற்கான வரத்தையும் கொடுத்தான். மறுகணமே நித்திரை கலைந்தவன்போல் சத்தியவான் உயிர்பெற்று எழுந்தானாம்.

அற்புதம், மகா அற்புதம்! இப்படியே எல்லோருக்கும் நடந்துவிட்டால் மரணம் என்பதே இருக்காது. ஜனத்தொகை கூடிக்கொண்டே இருக்குமேயொழிய ஒரு நாளும் குறையாது. வருவனவெல்லாம் நிலைத்துவிடில் பிரிவெதற்கு, துயரெதற்கு. ஆனால் அதுவல்ல உலகின் பெருமை!

வள்ளுவன் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான் பாருங்கள். `நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு'. அதாவது, நேற்றிருந்தவன் இன்றில்லை என்று கூறப்படும் நிலையாமையின் பெருமையை உடையது இவ்வுலகமாம். அன்று உயிர்பெற்றெழுந்த சத்தியவானும் பின்னொரு நாளில் இறக்கத்தானே செய்தான்.

மின்சாரக் கம்பியில் அடிபட்டு ஒரு காகம் இறந்து கிடக்கிறது. அதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நூற்றுக்கணக்கான காகங்கள் நின்று ஓலமிடுகின்றன. தாயைப் பிரிந்த குட்டி யானை கண்ணீர் வடிக்கின்றது. ஜோடியைப் பிரிந்த காதல் பறவை உள்ளம் உடைகிறது.

லாசரு என்பவன் இறந்துவிட்டான். அவனது சகோதரிகளான மார்த்தாளும், மரியாளும் இயேசுவை எதிர்கொண்டு அழுது புலம்புகிறார்கள். அவர்கள் அழுவதைக் கண்டு, துக்கம் தாளாமல் இயேசு கண்ணீர் விட்டார்.

போர்க்களத்தில் கர்ணனுக்கு உதவியாக வந்த துர்ஜயனை பீமசேனன் வதம் செய்தான். அடிபட்ட பாம்புபோல் மண்ணில் புரண்டுகொண்டிருந்த துர்ஜயனைப் பார்த்து கர்ணனுக்குத் தாங்கவில்லை. கர்ணமாவீரன் அங்கே கண்ணீர்விட்டு அழுதான். இரத்தத்தில் உடல் நனைந்து வீழ்ந்து கிடந்த துர்முகனைப் பார்த்தபோதும் கர்ணன் கண்ணீர் விட்டான்.

துன்பத்திலும் கண்ணீர் வருகிறது; இன்பத்திலும் கண்ணீர் வருகிறது. இழப்பிலும் கண்ணீர்; ஆனந்தத்தின் உச்சநிலையிலும் கண்ணீர். அது ஓர் மௌனமொழி. கண்ணீரைச் சுரக்கச் செய்கிறதே, லாக்ரிமல் என்னும் சுரப்பி. அந்தச் சுரப்பிக்கு நன்றி சொல்வோம்.

வாழ்க்கைப் பயணத்தில் உறவுகளின் பிரிவுகளில் கண்ணீர்தான் ஆறுதலாகிறது. நினைவுகளின் மோதல்களில் பரிதவிக்கும் நெஞ்சுக்கு கண்ணீர்தான் மருந்தாகிறது. உறவுகள் இனிமை; பிரிவுகள் கொடுமை. எனினும் எல்லாவற்றையும் சந்தித்தாக வேண்டும். அத்தகைய அனுபவங்களிலிருந்துதான் நாம் வாழ்வின் யதார்த்தங்களைப் புரிந்துகொள்ள முடியும்; ஒரு புதிய ஞானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இழப்பில் பெறுகின்ற அனுபவம்தான் ஆழமான சத்தியங்களை நமக்கு உணர்த்துகின்றது. தோல்வியில் கிடைக்கின்ற அனுபவம்தான் வெற்றியின் இரகசியங்களை நமக்குச் சொல்லித் தருகின்றது. மரணம் மனித வாழ்வின் முத்தாய்ப்பாய் அமைகிறது. மரணம்தான், ஓடிக் களைத்த மனித வாழ்க்கைக்கு ஓய்வளிக்கின்ற பெருமையைப் பெறுகின்றது.

`கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை; காதலி மாட்டு உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; ஒண்பொருள் செல்வம் என்பார்க்கும் துயில் இல்லை; அப்பொருள் காப்பார்க்கும் இல்லை துயில்' என்கிறது நான்மணிக்கடிகை. யார்யாருக்கெல்லாம் உறக்கம் இல்லை என்பதை இப்பாடல் கூறுகிறது. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒருநாளில் நிம்மதியான நீளுறக்கத்தைத் தொடங்கி வைக்கிறான் கூற்றுவன்.

பெற்றோரை இழந்த பிள்ளைகள்; துள்ளித் திரிகின்ற வயதில் பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோர்; வாழ்க்கைத் துணையிழந்து ஒற்றைச் சிறகான ஜீவன்கள்... அந்தோ பரிதாபம்! மீண்டும் பெற முடியாத உறவுகள், வாயடைத்து மௌனமாய் விடைபெற்றுச் செல்லும்போது, சோகத்தில் சிக்கிய உள்ளம் வெடித்துச் சிதறுகிறது. எதையும் தாங்கிக்கொண்டு இருந்தபடியே இருப்பதற்கு மனித இதயமென்ன இரும்பா? இல்லையே. இழப்பு நேரிடும்போதெல்லாம் ஞானியரும் யோகியரும்கூட அழத்தான் செய்தார்கள்.

குழந்தையற்ற பட்டினத்துப்பிள்ளைக்கு ஒரு மகன் கிடைத்தான். மருதப்பிரான் என்று பெயரிட்டு செல்வச் சிறப்போடு வளர்த்தனர். அவனுக்குப் பதினாறு வயதானபோது, `காதற்ற ஊசியும் வாராது கடைவழிக்கே' என்னும் வாக்கியம் எழுதிய நறுக்கையும், ஒரு காதற்ற ஊசியையும் ஒரு பெட்டியில் வைத்துத் தாளிட்டு, தன் தாயிடம் கொடுத்துவிட்டு மறைந்து போய்விட்டான்.

வெளியே சென்றிருந்த பட்டினத்தார் வீட்டிற்கு வந்தார். மனைவி கொடுத்த பெட்டியைத் திறந்து, காதற்ற ஊசியையும் நறுக்கையும் பார்த்தபோது அவருக்கு ஞானோதயமானது. இதுவரையில் தமக்கு மகனாக இருந்தவன் பரமசிவன் என்பதை உணர்ந்தார். தமது செல்வங்களையெல்லாம் துறந்துவிட்டுத் துறவு பூண்டார். அவ்வூரிலேயே பிச்சை எடுத்து உண்டார். அப்படித் துறவியாகச் சுற்றித் திரிந்த பட்டினத்தாரே, தமது தாய் மரணமடைந்தபோது அழுதுவழியத்தான் செய்தார்.

"ஐயிரெண்டு திங்களா வங்கமெலா நொந்துபெற்றுப்பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்யவிரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பே னினி' என்று பாடிப் புலம்புகிறார்.

பிரிவை தாங்கிக்கொள்ள முடியாதுதான். இழப்பை ஏற்றுக்கொள்வது கடினம்தான். எனினும் இவையெல்லாம் இயற்கையின் நியமங்கள். இந்த நியதியின் அடிப்படையில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நம்மை விட்டுக் கடந்து சென்றவர்களின் நற்பண்புகளைக் கடைபிடிப்போம். அதுதான் அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. தமக்கு அன்பானவர்களை இழந்து, துக்கத்தில் இருப்போர்க்குப் பக்கத்தில் இருப்போம். ஆறுதல் செய்வோம். அதுதான் மனிதனுக்கு மனிதன் செய்யும் பேருதவி.

இழப்பு என்பது ஞானத்தின் ஊற்று.
ஆறுதல் என்பது இதமான காற்று.
-தியாரூ-

1 comment:

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/