Tuesday, May 12, 2009

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடுகிறது இலங்கையில் ரத்த ஆறு ஓடுவதாக கவலை தெரிவிப்பு


இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிறு காலை வரை சிங்கள ராணுவம் விதியை தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் பலியானதாக விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். அந்த புகாரை மறுத்த ராணுவம், இலகு ரக ஆயுதங்களால் மட்டுமே தாக்குதல் நடத்தியதாக கூறியது.

ஆனால், மருத்துவமனைக்கு மட்டும் சுமார் 300 பிணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், குண்டு காயங்களுடன் சுமார் ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். வன்னி பகுதியில் உள்ள அரசு மருத்துவ அதிகாரியே இந்த தகவலை வெளியிட்டார். இந்த சூழ்நிலையில், சிங்கள ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலுக்கு .நா. கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கையில் உள்ள .நா. செய்தி தொடர்பாளர் கார்டோன் வெய்ஸ் கூறுகையில், "சர்வதேச சமுதாயம் அச்சப்பட்டுக் கொண்டு இருந்த நிலைமை, தற்போது உண்மையாகி விட்டது. பாதுகாப்பு வளைய பகுதிக்குள் நடத்தப்பட்ட ஆர்ட்டிலரி தாக்குதலில் 100 குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இலங்கையில் ரத்த ஆறு ஓடுவதை .நா. உறுதியாக எச்சரிக்கிறது. கடந்த சில மாதங்களாகவே அப்பாவி மக்களின் சாவு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது'' என்றார்.

இதற்கிடையே இலங்கை நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக .நா. பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரப்பூர்வமற்ற அவசர கூட்டம் நடைபெற உள்ளது. சமீபத்தில் இலங்கை சென்று வந்த இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் இலங்கை போர் குறித்து நடவடிக்கை எடுப்பதில் .நா. பாதுகாப்பு கவுன்சிலுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. .நா. மூலமாக இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்துகின்றன. ஆனால், ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் சனிக்கிழமை இரவு சிங்கள ராணுவம் நடத்திய விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே சிதறி கிடக்கும் அப்பாவி தமிழர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும் மீட்கும் பணிகள் நடைபெறுகிறது. நேற்று மட்டும் 37 சடலங்கள் மீட்கப்பட்டன. மருத்துவ சிகிச்சை இல்லாமலும் ஏராளமானோர் இறக்கின்றனர்.

இது குறித்து, போர் முனையில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையின் டாக்டர் சண்முகராஜ் நேற்று கூறுகையில், "இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 430 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு எடுத்து வர ஆளில்லாமல், குண்டு காயங்களுடன் ஏராளமானோர் அவதிப்படுகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள், இந்த தகவலை என்னிடம் தெரிவித்தனர். எனவே, பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என்று நான் மதிப்பிடுகிறேன்'' என்றார்.

ஆனால், சனிக்கிழமையன்று சிங்கள ராணுவம் நடந்த தாக்குதலில் 3200 பேருக்கு மேல் கொல்லப்பட்டதாகவும், இதுவரை 1200 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்து உள்ளனர்.

அதே நேரத்தில், விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் சிங்கள ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும், முக்கிய தளபதிகளும் இருப்பதாக சிங்கள ராணுவம் நம்புவதால், அந்த பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
செய்தி கேட்டு இதயம் வலிக்கிறது -இந்தியம் தலை கவிழ்கிறது

இலங்கை மீதான இந்தியாவின் பிடி தளர்ந்து வருவதை விரும்பியோ விரும்பாமலோ இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் உண்ணாவிரத நாடகமும் மத்தியில் போர் நிறுத்த நாடகமும் அரங்கேறிய ஒரு சில நாட்களிலேயே இவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறியுள்ளது.

தாங்கள் தான் இந்த பிராந்தியத்தின் ஏக போக உரிமையாளர்கள் அல்லது காவலர்கள் என்று 'பாவ்லா' காட்டிக்கொண்டு திரிகின்ற இந்திய அரசு இனிமேலாவது தன்னைத் திருத்திக் கொண்டு தன் அயல் உறவுக் கொள்கையில் இந்தியப் பண்பாடான மனிதநேயத்தின் அடிப்படையில் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். (இது அமையப் போகும் புதிய அரசுக்கு இந்திய மக்களின் இறுதியான, உறுதியான வேண்டுகோளும், எச்சரிக்கையும் ஆகும்).

இந்த பிராந்தியத்தில் புதிய சண்டியர்களாக சீனாவும், பாகிஸ்தானும், பங்களாதேசும் உருவாகிவருவதற்கான முழுப் பொறுப்பையும் கடந்த கால (இந்திரா காந்திக்கு பின்னான) அரசுகள், அவற்றின் தலைவர்கள், உளவு அதிகாரிகள் ஆகியோர் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இலங்கையெனும் கேந்திர மையத்தை யார் ஆட்சி செய்வது என்ற குடிமிப் பிடி சண்டையில் ஈழத் தமிழினம் அழிந்துப் பட்டுப் போய்க் கொண்டிருப்பது தான் இதயம் வலிக்கின்ற மேற்செய்தியாகும். போது புலிகள் வெறும் கருவிகள் தான்.

'உலகப் பொது விதியை இந்தியாவே இந்த உலகுக்கு அளிக்கும்' என்ற புரட்சி கவி பாரதியின் தீர்க்க தரிசன வரிகளுக்கு வடிவம் கொடுக்க போவது யார்? எப்போது?

தேசப் பிரியன்

No comments: