Friday, May 15, 2009

தமிழர்கள் படுகொலையை உடனே நிறுத்து - இலங்கைக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை


இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை சம்பவம், பேரழிவாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனைகள் மற்றும் அப்பாவி தமிழர்களை குறிவைத்து தாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.

இலங்கையில் அப்பாவி மக்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று கூறிக்கொண்டே விமானம் மூலமாகவும் பீரங்கி மூலமாகவும் தாக்குதலை தொடருகிறது. இதனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் பலியாகினர். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர்.

எனவே போரை நிறுத்துமாறு அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இலங்கை அரசுக்கு மேலை நாடுகள் கடுமையாக நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார்.

வாஷிங்டனில் நேற்று பேட்டியளித்தபோது ஒபாமா கூறியதாவது:-

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன. சமீப நாட்களாக அங்கிருந்து வரும் செய்திகள் அனைத்துமே மிகவும் வருத்தமடைய செய்கின்றன. மிக அவசரமான நடவடிக்கையை எடுக்காவிட்டால், தற்போது மனித உரிமை மீறலாக இருக்கும் இந்த சம்பவமானது பேரழிவாக மாறக்கூடும் என்று எச்சரிக்கிறேன். எனவே, மூன்று முக்கிய நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.


மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி கொண்டு இருப்பதால் குண்டுகளை வீசுவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். போர் முனையில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற தனது உறுதிமொழியை இலங்கை அரசு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவதிப்படும் அப்பாவி மக்களுக்கு உதவி செய்வதற்காக .நா., மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.


விடுதலைப்புலிகளும் ஆயுதங்களை கைவிட வேண்டும். அப்பாவி மக்களை வலுக்கட்டாயமாக தங்கள் அமைப்பில் சேர்க்க கூடாது. அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தாமல் விடுவிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மட்டுமே அப்பாவி மக்களுக்கு அவர்கள் செய்யும் சேவையாக இருக்கும்.


இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

இந்த அறிக்கையை வெளியிட்ட ஒபாமா, நிருபர்களுக்கு பேட்டி எதுவும் அளிக்கவில்லை. எனினும், இலங்கை பிரச்சினைக்காக மட்டுமே அமெரிக்க அதிபர் ஒரு அறிக்கையை வெளியிடுவது வெள்ளை மாளிகை வரலாற்றில் மிகவும் அரிதான நிகழ்ச்சி ஆகும்.

இலங்கைக்கு கண்டிப்பு

ஒபாமாவின் அறிக்கை வெளியாவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை இணை மந்திரி ரிச்சர்டு பவுச்சர் பேட்டி அளித்தார். தெற்காசிய நிருபர்களுக்காக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம், பாதுகாப்பு வளைய பகுதிக்குள் தாக்குதல் நடைபெறாது, விமான தாக்குதல் நடத்த மாட்டோம், பெரிய அளவில் ராணுவ நடவடிக்கைகளை கிடையாது ஆகிய அறிவிப்புகளை இலங்கை அரசு கூறியபோது நாங்கள் அவற்றை நம்பினோம். ஆனால், இலங்கை அரசு தனக்கு தானே அறிவித்த உறுதிமொழிகளை பின்பற்ற தவறிவிட்டது. அந்த உறுதிமொழிகளை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் (அமெரிக்கா) எதிர்பார்க்கிறது.

அப்பாவி மக்களின் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. அது மிக அதிகமான ஏமாற்றமாக இருக்கிறது. விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும். அவர்கள், போரை நிறுத்துவதற்கு இதுவே சரியான தருணம். மூன்றாவது நடுநிலை நாட்டின் முன்பு அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்கலாம். மேலும், அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் பிடித்து வைத்திருப்பதும் கண்டனத்துக்குரியது. அப்பாவி மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இலங்கையில் அனைத்து மக்களும் அமைதியாகவும் சுயாட்சியுடனும் வாழும் வகையிலான ஜனநாயகம் உருவாக்கப்பட வேண்டும். அங்கு நிலவும் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு அவசியம்.

இவ்வாறு ரிச்சர்டு பவுச்சர் தெரிவித்தார்.

.நா. பாதுகாப்பு கவுன்சில் கவலை

இலங்கையில் நிலவும் இனப்படுகொலை குறித்து .நா. பாதுகாப்பு கவுன்சில் முதன் முறையாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. 15 நாடுகள் அங்கம் வகிக்கும் .நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இலங்கை பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேறிய தீர்மானத்தில், `இலங்கையில் வடகிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து .நா.பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக, கடந்த சில நாட்களாக அப்பாவி மக்கள் அதிக அளவில் பலியாகும் செய்திகள் மிகுந்த கவலை அளிக்கின்றன' என்று கூறப்பட்டுள்ளது.

No comments: