Friday, May 8, 2009

தேசமே தேகமாய் கொள்

எண்ணில்லா உறுப்புக்களைக் கொண்டியங்கும் தேகம் போல, எனது தேசமும் பல் இன மக்கள் குழுவைக் கொண்டது.

எனவே எனது தேகத்தை நேசிப்பது போலவே, எமது தேசத்தையும் நேசிக்க விளைகிறேன்.

என் உறுப்புக்கள் எதுவும் என்னிடம் கேட்டு இயங்குவதில்லை.

என் தேகமும் அவற்றைக் கட்டுப் படுத்துவதில்லை.

அதைப் போலவே பல் இன குழுக்களை கொண்ட என் தேசமும், அவர்களின் மொழி கலாச்சாரப் பண்பாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை, கட்டுப்படுத்துவதில்லை.

இருந்த பொழுதிலும் தேகத்தின் இயக்கத்திற்கு ஒரு பொதுமை விதி இருப்பது போல ஒரு தேசத்தின் இயக்கத்திற்கும் பொது விதி உண்டு.

அதுதான் அரசியலமைப்புச் சட்டம்.

எனது தேசத்தின் பொது விதியின் உயர்ந்த பண்பே ஜனநாயக கோட்பாடும், மதநல்லிணக்கமும் ஆகும்.

தேக உறுப்புகளை சீராக இயங்கச் செய்ய மூளை எனும் நரம்பு மண்டலம் இருப்பது போல் என் தேசத்திற்கு ஒரு அரசும் அரச இயந்திரமும் இருக்கிறது.

தேகத்தின் அனைத்து பகுதிக்கும் சீராக ரத்தம் பாய்ச்சும் இதயம் போல், ஜனநாயகக் கோட்பாட்டையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் அரசியலமைப்புமிருப்பதால் மேலும் எனக்கு என் தேகமும் தேசமும் ஒன்றாக தெரிகிறது.

இதயத்தில் எழும் எண்ண அலைகளும், புதிய சிந்தனைகளும், மூளை மண்டலம் சென்று செயல் வடிவம் பெறுவது போல, என் தேசத்தின் செயல்பாடுகளும் அன்பின் வழி தொடங்கி அறியியல் செயல்பாட்டில் விஞ்சி நிற்கிறது.

எனது தேகத்தில் ஐம்புலன்கள் அனைத்தையும் உணர்வது, உள்வாங்குவது போல் எனது தேசத்தின் அரசியல் அமைப்பும் ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்டு மக்களை வழி நடத்துகிறது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதநல்லிணக்கம் போன்ற அம்சங்களைக் கொண்ட இறையாண்மை பூண்ட சமதர்ம, சமய சார்பற்ற மக்களாட்சி குடியரசு எனது தேசம்.

எனவே தான் என் தேசம் எனக்கு என் தேகமாகவே தெரிகிறது.

தேகத்தின் உறுப்புகளின் சீரிய இயக்கத்தில் எங்கே ஒரு தடை விழுந்தாலும் எல்லாமே சீர் கெட்டுவிடும் அபாயம் உள்ளது.

அதைப் போல ஜனநாயகப் பண்பாட்டினை உயர்த்திப் பிடிக்கும் உயரிய பண்பு கொண்ட எனது தேசத்தின் செயல்பாடுகளில் எங்கே ஒரு தடை அல்லது ஓட்டை விழுந்தாலும் தேசம் பாழ் பட்டு விடும்.

அதனால் தான் எனது தேகத்தைப் போல, எனது தேசத்தைப் பாதுக்காக்க விரும்புகிறேன்.

உலகம் எங்கும் விதம் விதமான உயிர் கொல்லி நோய்கள் உருவாகி உலகை உலுக்குவதைப் போல;

எமது தேசத்திலும், தேசத்தைப் பாழ்படுத்தும் கொடிய நோய்களான லஞ்சம், ஊழல், தேச துரோகம், பிரிவினைவாதம், மதபேதம் போன்றவற்றை இனம் காண மறுத்து அல்லது மறந்து அதனால் உண்டான விளைவினை இன்று உணர தொடங்கியுள்ளோம்.

எமது தேசத்தின் உயரிய ஜனநாயக மாண்பினை சீர்குலைக்கும் இந்த நோய்களின் காரணிகள் எவை தெரியுமா?

கள்ள வாக்குகள், பணத்திற்காக வாக்கினை விற்றல், வாக்கினை பயன்படுத்தாதுவிடல், சரியான நேரத்திற்கு வாக்களிக்க செல்லாமல் விடுதல், வாக்களித்தலின் மீதான அலட்சியப் போக்கு போன்றவை தான்.


தேகத்தை காக்க வருடா வருடம் ஒருமுறை உடற்கூறு மருத்துவ சோதனை செய்வது போல், எமது தேசத்திற்கும் அப்படி ஒரு சோதனையை செய்ய வேண்டிய கால கட்டத்திற்கு வந்து விட்டோம்.

அந்த சோதனை தான் பாரளுமன்ற தேர்தல் 2009.

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை எமக்கு கிடைக்கின்ற ஒரு அரிய வாய்ப்பு இந்த தேர்தல்.

சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது.

சரியான சிகிச்சை வழங்கும் நிபுணர்களை கண்டுபிடிக்க வேண்டிய, மாபெரும் தருணம் இது.

தவிர்க்க கூடாத கடமை இது.

'பொறுப்புக்களை நிராகரிப்போர் உரிமைகளை இழப்பர்! கடமைகளை நிராகரிப்போர் அதிகாரங்களை இழப்பர்!' என்பது அரசியல் அறிஞர் வாக்கு.

இன்று எம்மிடையே புரையோடி போயிருக்கின்ற ஜனநாயக விரோத செயல்பாடுகளான கள்ள வாக்கிடுதல், வாக்குகளை காசுக்கு விற்றல், வாக்குகளுக்காக காசுகளை பெறுதல், வாக்களிக்காது விடுதல், பழக்க தோச வாக்களிப்பு, நேரத்திற்கு வாக்களிக்க செல்லாமை போன்றவற்றில் இருந்து விடுபட்டு;

உண்மையாகவே இந்த தேசத்தின் மீது அக்கறையும், நம்பிக்கையும் வைத்து; எமது ஜனநாயகப் பண்பினை முன்னிறுத்தி சரியான ஒருவரை தெரிவு செய்ய முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

சரியானவர் உங்கள் தொகுதியில் இல்லையெனில் உங்கள் வாக்கினை பிறர் பயன்படுத்தாது இருப்பதற்கும் 49 A எனும் பிரிவின் படி வாக்களித்து ஒரு புதிய கலாச்சாரத்தை எமது தேசத்தில் உருவாக்குவோம்.

தேசப் பிரியன்

No comments: