Monday, May 4, 2009

குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்


அலையோடு விளையாடி அழகாக வளரும் இளம் பருவக் காதல், சூழல் புயலால் சுனாமி ஆகிக் கொந்தளிப்பதே 'குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்.'

முட்டத்தின் விடலை மாணவன் கூச்சனுக்கு (அறிமுகம் ராமகிருஷ்ணன்) அம்மாவே உலகம். அந்த ஊருக்குப் புதிதாக வரும் துளசிக்கு (அறிமுகம் தனன்யா) அவரது பாட்டிதான் ஒரே சொந்தம். கூச்சனின் தாய் துளசிக்கு அடைக்கலமும் ஆறுதலும் தருகிறார். காதல் துளிர்க்கிறது விஷயம் தெரிந்து வில்லியாகும் கூச்சனின் அம்மா (அறிமுகம்தான்... ஆனால், நடிப்பில் அசத்தும் முகம்!) துளசியை அவமானப்படுத்தி ஊரை விட்டுத் துரத்துகிறார். திரும்பி வரும் காதலனோ காத்திருக்கும் காதலியைச் சந்திக்க முடியாமல் போக... விதியின் விளையாட்டு அந்தப் பெண்ணை அடுக்கடுக்காக அலைக்கழித்து மறுபடி கொண்டுவந்து அந்தக் கிராமத்திலேயே ஒரு சக்கையாக துப்புகிறது!

பழைய காதலர்கள் புதிய சோகங்களுக்கு நடுவே என்ன ஆகிறார்கள் என்பதைச் சோகம் பிழியச் பிழியச் சொல்லிக்கொண்டே போகிறது கதை! கூட்டம் கூட்டமாக அத்தனை புதிய முகங்களை வைத்துக்கொண்டு, முட்டம் கடலோரத்தை நம் காலடியில் அலையாட விட்டிருப்பது ஒரு புதுமுக இயக்குனர் (ராஜமோகன்) என்றால், நம்பத்தான் முடியவில்லை. ரத்தச்சுவடுகள் காயாத தெருப் பாதையும், எல்லாத் திசைகளிலும் அடர்த்தியாகக் கவிழ்ந்திருக்கும் மௌனமும், அத்தனை பேர் முகத்தில் அப்பியிருக்கும் சோகமுகமாகத் துவங்கும் ஆரம்பக் காட்சி எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

அதற்கேற்ப, சடாரென்று கலகலப்பாகும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் கள்ளமில்லாத காதலையும், வெள்ளந்தியான நண்பர்களையும் முன்னால் நிறுத்தி விறுவிறுப்பைக் கூட்டுகிறது. ஆனால், பின்பாதி? 'ஐயையோ' என்ற அடித்தொண்டை அலறலும், 'டேஏஏஏஏய்' என்ற செவி கிழிக்கும் சவாலுமாக மென்மை முழுக்கத் தொலைத்து, எதிர்பார்ப்பு ஏவுகணையைத் தரை தட்ட வைத்துவிடுகிறது.

அசட்டுச் சிரிப்பு முகம்... அதுவே பிறகு அத்தனை சீரியஸ் என்று ஆச்சர்யப்படுத்துகிறார் ராமகிருஷ்ணன். இயக்குனர் சேரனின் உதவியாளராமே! சில எக்ஸ்ப்ரஷன்கள் கூட அதை ஞாபப்படுத்துகிறது.

சட்டை மாட்டிய மாணவியாக தொடங்கி, வாழ்ந்து கெட்ட மனைவி வரைக்குமாக நாயகி தனன்யாவும்தான் அசத்தியிருக்கிறார். முகச் சுருக்கங்களையும் தாண்டி கையேந்தி நின்று பரிதாபப் பார்வை பார்க்கும் இடங்களில் பாட்டி நாகம்மாள் நம் இதயத்தில் நச்சென்று நங்கூரம் பாய்ச்சுகிறார்.

சட்டமிட்ட வண்ண ஓவியத்தில் இருப்பது போல் முட்டத்தை காட்டியிருக்கும் கேமெராமேன் சித்தார்த்தின் கைகளைத்தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் 'ராசாத்தி கிளியே', 'சின்னஞ் சிறுசுக...' பாடல்களில் யுவனின் இசை கடற்கரை மென்காற்று!

குழந்தைத்தனமான வார்த்தைகள், விடலைத்தனமான குறும்புகளை ரசித்து லயித்துக் கொண்டு இருக்கும்போதே... தடாலடியாக எட்டிப் பார்க்கிறது அறிவுஜீவித்தனமான 'நிலா தத்துவம்'! அதன் பிறகு வரும் பல காட்சிகளிலும் ஃபார்முலா எட்டிப் பார்க்க ஆரம்பித்து, முன் பாதியின் பிளஸ்களையும் தட்டிப் பறித்து விடுகிறது.

நன்றி விகடன் விமர்சனக் குழு

ஆக மொத்தத்தில் தரமான தமிழ் படங்களைப் பார்க்க விரும்புவோரும் தரமான படங்களைத் தயாரிக்க விரும்புவோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம்.

No comments: