Wednesday, May 20, 2009

நடுக்கடலில் 9 நாட்கள்


`நடுக்கடலில் 9 நாட்கள் தவித்தபோது பட்டினியால் இறந்த 8 பேரின் உடல்களை கடலில் தூக்கி போட்டோம்' என்று மண்டபம் முகாமுக்கு வந்த அகதிகள் கதறி அழுதபடி கூறினார்கள்.

இலங்கை முல்லைத் தீவில் இருந்து கடந்த மாதம் படகில் தப்பி வந்த அகதிகள், திசை மாறி ஆந்திரா கடல் பகுதிக்கு சென்றனர். 9 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த அவர்களில் பலர் பட்டினியால் இறந்து விட்டனர்.

மீதம் இருந்த 11 பேரை ஆந்திர மீனவர்கள் காப்பாற்றி காக்கிநாடாவுக்கு கொண்டு வந்தனர்.

அங்கு சில நாட்கள் தங்க வைக்கப்பட்ட அவர்கள் அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு பின்னர் கொழும்பு மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

யாழ்பாணம் பருத்திதுறையை சேர்ந்த இந்திரகுமார் (வயது 29), ஜெயநிரஞ்சனா, இந்திர மேனன்(25), சாந்தா (33), ஜெயமாலை சகாய தேவி(60), யாழ்பாணம் குருல்நகரியை சேர்ந்த அருள்தாஸ் (26), மேரி ஜெபின் (53), பாத்திமா (18), சேசுராசு(29), முல்லை தீவை சேர்ந்த ஜெகதீஸ்வரன், 8 மாத குழந்தை குபேரன் ஆகிய 11 பேரும் நேற்று மண்டபம் ரெயில் நிலையம் போய் சேர்ந்தனர்.

அவர்களை கிïபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மண்டபம் அகதிகள் முகாமுக்கு அழைத்து சென்றார். அங்கு 11 பேரின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு கமலாபாய், கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் மத்திய புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது 11 பேரும் எதுவும் சொல்ல முடியாமல் அழத்தொடங்கினர். பின்னர் அவர்களை சமாதானம் செய்து விசாரித்த போது அவர்கள் கல்மனதையும் கரையவைக்கும் சம்பவத்தை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

இலங்கையில் போர் காரணமாக உயிர் பிழைத்தால் போதும் என்று யாழ்பாணத்தை சேர்ந்த நாங்கள் 23 பேர் முல்லை தீவு மத்தாளத்தில் இருந்து கடந்த மாதம் 20-ந்தேதி பிளாஸ்டிக் படகில் புறப்பட்டோம். கடலில் வரும்போது திடீரென அதிகமாக காற்று வீசியதால் படகு திசைமாறி ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதிக்கு சென்று விட்டது. திசை மாறியதால் கரை செல்ல வழி தெரியாமல் 9 நாட்களாக நடுக்கடலில் போதிய உணவு இல்லாமல் நடுக்கடலில் தத்தளித்தோம். குழந்தைகள் பசி, பட்டினியால் வாடி அழத்தொடங்கின.

நாட்கள் செல்லச்செல்ல எங்களுடன் வந்த மேரி திரேசிகா(வயது 32), நிரேஷன் (10), தங்கமானன்(12), அமநேசன், ஹரிகரன்(4), சகாய ராஜ் (14), குழந்தை பிரசாந்த் ரவி ஆகியோர் உடல் சோர்வடைந்து ஒவ்வொருவராக பட்டினியால் படகிலேயே இறந்து விட்டனர். வேறு வழியில்லாததால் எங்கள் கண் முன்னே உயிரிழந்த அவர்களை கடலில் தூக்கி வீசிவிட்டோம்.

இதைப்பார்த்து பயந்து போன படகோட்டி மகாலிங்கம், மரியதாஸ், சூசைதாஸ், வாலதாஸ் ஆகியோர் நீந்தி தப்பிவிடலாம் என்று கடலில் குதித்து நீந்திச்சென்றனர். அவர்கள் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை. மேலும் 8 மாத கைக்குழந்தையை காப்பாற்ற தாய்ப் பால் கொடுத்ததால் உடல் சோர்வடைந்து பட்டினியால் ஜெகதீஸ்வரன் மனைவி இறந்துவிட்டார்.

மீதம் உள்ள 11 பேரும் உயிர் பிழைப்போமா? கரை சேருவோமா? என்று கவலையில் ஆழ்ந்திருந்த நிலையில் கடலில் தத்தளித்த எங்களை அந்த வழியாக மீன் பிடித்து விட்டு வந்த மீனவர்கள் காப்பாற்றி காக்கிநாடா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மருத்துவமனையில் எங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 29-ந்தேதி ஆந்திரமாநில கியூ பிரிவு சப்-இன்ஸ்பெக்டரின் பாதுகாப்புடன் சென்னை வந்தோம். அங்கிருந்து ரெயிலில் மண்டபம் வந்தோம். எங்கள் நிலைமை இனி எந்த ஒரு மனிதனுக்கும் வரக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

No comments: