Tuesday, April 28, 2009

கண்ணீர் தேசம்


வீட்டுத் தோட்டத்தில் விளைகின்ற பழங்களை வைத்து மட்டுமே பல மாதங்கள் பசியாறி விடக் கூடிய வளமையான வாழ்வை வாழ்ந்தவர்கள் 'அம்மா பசிக்குது' என்று கதறும் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஒருநாளைக்கு, ஒரு வேளைக்கான உணவைக்கூட தர இயலாமல் விக்கின்ற சோகத்தை கண்டிருக்கிறீர்களா?

உயிரையாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என்று வீட்டை விட்டு, நாட்டை விட்டு வெளியேறி ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் காலத்திலும் 'ஐயோ வீட்டில் இருக்கிற மாட்டுக்கு யாரு தீனி வைப்பார்கள்....' என்று கவலை கொள்ளும் எளிய மனிதர்களுக்கு எந்த வார்த்தைகளால் ஆறுதல் சொல்வீர்கள்.


ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் மின் வெட்டு விழுவதால் 'ஆட்சியாளர்கள் சரியில்லை' என்று ஆதங்கபடுகிறோமே... மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறையை தெரியுமா?

உயிர் வாழத் தேவையான அரிசி, பருப்பு, கடுகு போன்ற உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகமாகவும் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள், வாலிபர்கள் என்று மனிதர்களின் உயிர் வெகு மலிவாகவும் இருக்கிற ஒரு தேசத்தை அறிவீர்களா?

தாய் தகப்புனுக்கு முன்னால் நிர்வாணப் படுத்தி, ராணுவ உடையின் அதிகாரத் தோரணையில் சீரழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு கொன்று வீசப்பட்ட மகளின் கதையை சொன்னால் குறைந்த பட்சம் அழாமல் கேட்கிற இரும்பு இதயம் நம்மிடம் இருக்கிறதா?

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆண்களை இழுத்து போய் வீதியில் மக்களின் கண்ணெதிரில் சுட்டு விட்டு, பயந்து நடுங்கிய அவர்களை 'பயங்கரவாதிகள்' என்று முத்திரை குத்திய சோகம் புரியுமா?

நாற்பது வயது தாண்டியதும் ரத்த அழுத்தம் சர்க்கரை, இதயம், கல்லீரல், கணையம் என்று எல்லா உறுப்புகளும் சரியாக இயங்குகிறதா என்று பரிசோதித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறோம். நடக்க முடியாத அளவு நோய்வாய்ப்பட்ட அம்மாவை தோளில் சுமந்துக் கொண்டு உயிருக்கு அஞ்சி மூச்சிரைக்க ஓடியதில் வழியிலேயே அம்மா இறந்துபோன விபரம் தெரியாத மகனின் வலி புரியுமா நமக்கு.

தாழப் பறக்கும் விமானத்தை அதிசயமாகக் காட்டி குழந்தைக்கு சோறூட்டும் தமிழகத்து அம்மாக்களே! விமானத்தின் சத்தம் கேட்டதுமே உடல் நடுக்கத்தில் 'இப்போ செத்துபோவோமோ என்று கேட்க தெரியாமல் 'அம்மா இப்போ ஷெல் அடிப்பாங்களா' என்று கேட்கிற குழந்தையை முந்தானையால் போர்த்தி இழுத்தணைத்து கண்ணீர் சிந்துகிற அம்மக்களுக்கு எவ்வளவு வலிக்கும்.

பாதுகாப்பு சோதனைகள் என்னும் பெயரில் கண்களில் வழியும் வக்கிரங்களோடு உடலில் கை வைக்கும் போது 'ஏன் தமிழ்ப் பெண்ணாகப் பிறந்தோம்' என்று மருகும் இளம் பெண்களின் விசும்பல், அதிரும் திரை இசை பாடல்களின் சத்தத்தில் நமக்கு கேட்பதேயில்லை.

துப்பாக்கிக்கும், ரவைகளுக்கும், வானத்திலிருந்து பூக்களைப்போல தூவப்பட்ட வெடிகுண்டுகளுக்கும் பலிகொண்ட மனிதர்களின் எண்ணிக்கை லட்சம் தாண்டியிருக்கும் என்கிறார்கள். அப்படி 'இறந்து போனவர்கள்' நமக்குக் குறைந்தப்பட்சம் எண்ணிக்கையிலாவது வந்துவிடுகிறார்கள். பயத்தில், நோய்களுக்கு மருந்தின்றி, உணவின்றி தினம் தினம் இறந்து கொண்டிருப்பவர்கள் இயற்கை மரணம் அடைந்தவர்களின் பட்டியலில் காணாமல் போய்விடும் துர்பாக்கியத்திற்கு விடுதலை எப்போது?

நம் விவசாயிகளுக்கு 'காடு வெளஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்' என்று பாடவாவது முடிகிறது. ஈழத்து தமிழர்கள் பல நேரங்களில் 'கையும் காலும் கூட மிச்சமில்லாமல் வெடித்துச் சிதறி ஊனமுற்றோர்களாகிற அவலம் யார் அறிவார்?

பசியால் அழும் குழந்தை இறந்து கிடக்கும் தாயின் மார்பகத்தில் பால் குடிக்க முயற்சிக்கிறது. இறந்து போன தாயின் மார்பகத்தில் இரத்தம் வழியும் காரணம் தெரியாமல் மீண்டும் வீறிடுகிறது குழந்தை. இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தையிடத்தில் கண்ணீரும் தீர்ந்துபோகும். இந்த போர்காட்சியை எந்த கவிஞனால் முழுமையாகப் பாட முடியும்?

உயிருக்கு அஞ்சி, உடைமைகளைத் துறந்து கோயில்களிலும், சர்ச்களிலும் அடைக்கலமாகி நொடிக்கு நொடி அவர்கள் செத்துப்பிழைக்க காரணம் இதுதான்...

அவர்கள் தமிழ் பேசுகிறார்கள்! 'யானை கட்டி போர் அடித்து' நெல் விளைந்த இலங்கைத் தமிழர்களின் நிலங்களில் 'இனவாதம் கட்டி அடித்த 'போரினால் இப்போதெல்லாம் "ஷெல்' (குண்டு) விதைக்கப்படுகிறது!

இலங்கையில் நம் முப்பாட்டன் நிலத்தத்தைத் தோண்டியபோது புதையல் கிடைத்தது. வயலுக்கு நீர் கிடைத்தது. கனிம வளங்கள் கிடைத்தன. அடுத்த தலைமுறை நிலத்தைத் தோண்டினால் குண்டுகளும் வெடிமருந்து வாசமுடைய எலும்புக்கூடுகளும் மட்டுமே கிடைக்கும். இப்போதெல்லாம் ஈழத்துத் தமிழர்களுக்கு இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன. போரில் உடல் சிதறி மொத்தமாக இறந்து அனாதைப் பிணமாகலாம். அல்லது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு எங்கேயாவது தப்பித்து அடைக்கலம் தேடி தினம் தினம் அவமானங்களால் தோலுரிக்கப்படும் அகதியாகலாம். 'இறந்து போனவர்கள் பாக்கியசாலிகள்' என்கின்றனர் அகதிகள்.

இடதுபுறம் ஒரு கண்ணனை மூடி துப்பாக்கியால் எதிர்த்தரப்பைக் குறி வைக்கிறார்கள் போராளிகள். வலதுபுறம் ஒரு கண்ணை மூடி எதிர்த்தரப்பைத் துப்பாக்கியால் குறிவைக்கிறது ராணுவம். இருவருக்கும் இடையில் அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள். இரண்டு தரப்பு துப்பாக்கிகளிலிருந்து புறப்படுகிற குண்டுகள் அப்பாவிகளைக் கொன்று குவிக்கின்றன. அதனால் இலங்கையிலிருந்து வருகின்ற காற்றுக்கு கனம் அதிகம்.

இந்திய - இலங்கை கடலோரப் பகுதியில் பிடிபடுகிற மீன்களை உப்பிடாமல் சமைக்கலாம். உடைமை துறந்து, உறவைத் தொலைத்து உயிரேந்தி வருகிறவர்களின் கண்ணீரால் உப்புத் தன்மை கூடிய கடலில் வாழும் மீன்கள் உப்புக் கரிகாமல் என்ன செய்யும்? விலங்குகளை, பறைவகளை துன்புறுத்தினால், வதைத்தால் கேள்வி கேட்க அவைகளைப் பாதுகாக்க சங்கங்கள் இருக்கின்றன. 'துன்புறுத்தாமல் படம் எடுத்திருக்கிறோம்' என்று சான்றிதழ் வழங்க வேண்டியிருக்கிறது. உதைத்தாலும் உடலைக் கொண்டு சிதைத்தாலும் ஏனென்று கேட்க நாதியற்றுப் போவதற்கு விலங்குகளும் பறவைகளும் தமிழ் பேசுவதில்லையே?

சற்று நேரத்திருக்கு முன்பு கண்ணெதிரே விளையாடிக்கொண்டிருந்த தங்கள் குழந்தையின் பெருமைகளை, குறும்புகளை ரசித்து தாலாட்டு பாடத் தயாரான அம்மாவை திடீரென்று ஒப்பாரிப் பாடும்படி வற்புறுத்துகின்றது வன்முறை. அதிர்ச்சியில் தொண்டைக்குழிக்குள் தற்கொலை செய்துகொண்ட வார்த்தைகளை துப்பாக்கிகள் கொலை செய்த தங்கள் வாழ்கையை ஓலமாக வெளிப்படுத்துகிறார்கள் தமிழ்ப் பெண்கள்.இது தொடர்ந்தால்.... இன்னும் நூற்றாண்டுகள் கழித்து உலக வரைபடத்தில் இலங்கையின் கணிசமான நிலப் பகுதியைக் காட்டி 'இது தான் உலகத்திலேயே மிகப் பெரிய மயானம். முன்பு இங்கு தமிழர்கள் வாழ்ந்தார்கள்' என்று மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள் வரலாற்று ஆசிரியர்கள். சில புத்திசாலிக் குழந்தைகள் அப்போது கேட்க கூடும் 'ஆறு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் கூப்பிடுதூரத்தில் வாழ்ந்தார்களே அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?' என்று.

போர் நிறைய கேள்விகளை கேட்க வைத்துவிடும்.... என்ன பதில் சொல்ல போகிறோம்?


.செ.ஞானவேல்
நன்றி குங்குமம்

No comments: