Wednesday, April 29, 2009

தேர்தல் பாடல்

இந்தியத் தேர்தல் மேடைகளில் ஈழத்தமிழன் படும் பாடும் அரசியல்வாதிகள் பாடும் பாடலும் கேளுங்கள்......(ஏன்பிறந்தாய்,மகனே..எனும் பாடல்மெட்டில்.)

ஏன் பிறந்தாய் தமிழா!
ஏன் பிறந்தாயோ!
என்று வரும் வாழ்க்கை என்று,
தேடியே பிரிவதற்கா?
இலங்கையில் நீ பிறந்தாய் ஈழத்தமிழா!


வாழ ஒரு தேசமில்லை
சேர ஒரு நேசமில்லை
அகதியாய் வாழ்வதற்கா நீ பிறந்தாய்?

சொந்த மண்ணில் நீதி இல்லை
வந்த மண்ணில் நாதி இல்லை
போக ஒரு பாதை இன்றி நீ தவித்தாய்.

ஈவிரக்கமில்லாத சிங்களவன் ஆட்சியிலே
சீரழிந்து சாவதற்கா நீ பிறந்தாய்?

மண் மீதோ அடக்குமுறை
வான் பொழியும் குண்டு மழை
கண்ணீரில் வாழ்வதற்கா நீ பிறந்தாய்?
( ஏன் பிறந்தாய் ...)

தொப்புள் கொடி உறவு என்று
தப்புக் கணக்காகி விட்ட
இந்தியாவை நம்பி வந்தாய் உன் தவறா?

பாரதத்தாய் கருணை எங்கே?
தமிழகத்தின் தயவு எங்கே?
சிங்களத்தை ஆதரித்தால் , இது முறையா?

கல் நெஞ்சக்காரர்களும்
அரசறம் பிழைத்தோரும்
ஈழத்தமிழ் சொந்தமுன்னை
ஏன் மறந்தார்?

இங்கு ஒரு மாற்றம் வரும்
ஈழமண்ணில் விடிவும் வரும்
கொஞ்ச நாள் பொறுத்திருப்பாய்-என் தமிழா!
கொஞ்சும் தமிழ் பாடி நிற்பாய்-மறத் தமிழா!

வரிகள்: வரகவி.

No comments: