Friday, March 20, 2009

லங்கா ராணி - அருளர்

1977 ஆகஸ்டில் இலங்கையில் இனக்கலவரம் நடந்ததல்லவா? அதில் பாதிக்கப்பட்ட 1200 தமிழ் அகதிகளைச் சுமந்து கொண்டு 'லங்கா ராணி' என்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, தெற்கு நோக்கி வந்து, இலங்கைத் தீவைச் சுற்றிக் கொண்டு, வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறைத் துறைமுகத்துக்குச் செல்கிறது. கப்பல் கொழும்பில் புறப்படுவதுடன் தொடங்கும் கதை, இரண்டு நாட்களில் பருத்தித்துறையைச் சென்றடைவதோடு முடிகிறது.

இது கற்பனைக் கதையல்ல. முற்றிலும் உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட உயிர்த் துடிப்புமிக்க கதை. இரண்டே நாட்களில் நடக்கும் கதையைப் போலத் தோன்றினாலும், இதில் அங்கங்கே 2500 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இலங்கை எப்படி இருந்தது? விடுதலை பெற்ற பிறகு - ஏன் 1958 இல் ஒரு பயங்கரமான இனக் கலவரமும், பிறகு 1977 ஆகஸ்டில் ஓர் இனக்கலவரமும் அங்கே ஏற்பட்டன. கலவரங்களின் விளைவுகளை மறந்து, தமிழர்களும், சிங்களவர்களும் இனி எதிர்காலத்தில் அங்கு இணைத்து வாழ முடியுமா? இவை போன்ற பல அடிப்படைப் பிரச்சினைகள் இந்த நாவலில் அலசி ஆராயப்படுகின்றன.

சரித்திர நாவல் என்ற பெயரில் யதார்த்தத்திற்கு விரோதமான கொச்சைத் தனங்கள் மட்டுமே, எழுத்தாக்கபடுவது தமிழ் நாவலுலகத்தில் வழக்கம்! இன, மொழி, வாழ்நிலை, வரலாற்று உரிமைகளை தக்கவைத்துக் கொள்ளப் போராடும் போராளிகளின் செயற்பாடுகளைச் சித்தரிப்பனவே சரியான வரலாற்று நாவல்களாக இருக்க முடியும். இந்தவகையில் லங்காராணி நிகழ்ச்சிப் போக்குகளின் நிதர்சன வடிவமான ஒரு மிகச் சிறந்த வரலாற்றுப் படைப்பாகத் திகழ்கிறது. 77 கலவரத்தின் இரத்தவாடையும் அதனால் எழுச்சி பெற்ற இளைஞர்களின் புரட்சி மனமும் பதிந்து நிலைத்திருக்கிறது இந்த நாவலில். இந்நூல் ஆசிரியர் அருளர் ஒரு மனித உரிமைப் போராளி மட்டுமல்ல ஒரு பொருளாதார அபிவிருத்தி சம்மந்தமான சிந்தனையாளரும் கூட.

லங்கா ராணி எழுதப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் ஒரு விடுதலை போராட்டத்தில் இருந்து உருவானதால் கடந்த 30 ஆண்டுக்காலத்தின் அனுபவங்களை இந்நூலில் கூறப்பட்ட கருத்துகளோடும் சம்பவங்களோடும் ஒப்பிட்டு பார்க்கும் வாய்ப்பினை இன்றைய வாசகர்கள் பெறமுடியும்.

No comments: