Wednesday, March 18, 2009

வானலையின் வரிகள் - இளையதம்பி தயானந்தா

தொடர்பியல் என்பது இருபதாம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் குறிப்பாக 60களில் இருந்து, முக்கிய சமூக ஆய்வியல் துறையாகப் பயின்று வரப்படுகிறது. இதில் ஊடகங்களின் இயல்பு, பயன்பாடு, தாக்கம் ஆகியன மிக விரிவாக எடுத்து ஆராயப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் பத்தாண்டில் இனங்காணக் கூடியதாக உலகக் கணிப்புப் பெற்ற 'பூகோள மயமாக்கம்' என்ற முதலாளித்துவப் பாய்ச்சல், ஊடகங்களின் வலிமையினாலேயே சாத்தியப்பட்டது. சந்தைப் பொருளாதரத்தில் ஊடகங்கள் முக்கியம் பெறத் தொடங்கவே வெகுசனப் பண்பாடு (Mass Culture) உருப்பெறத் தொடங்கி, அதன் பரிணாமமாக ஊடகப் பண்பாடு (Media Culture) எனும் நிகழ்வு (Phenomenon) நிகழ்ச்சி ஆகிற்று (Event). ஊடகப் பண்பாட்டின் இந்த வளர்ச்சியில் வானொலியின் பங்கு மிக மிகக் கணிசமானது. இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் அனைத்துலக தொடர்பாடலுக்கான சாதனமாக விளங்கிய வானொலி, 1950-60களில் தென்னாசியாவில் தன் முக்கியத்துவத்தைப் பதித்துக் கொண்டது.

இந்த வானொலி முக்கியத்துவப் பதிப்பில் அக்காலத்தில் 'ரேடியோ சிலோன்' என அழைக்கப்பட்ட இலங்கை வானொலியின் பங்கு மிக மிகக் கணிசமானது. 50களின் பிற்கூற்றிலும், 60களிலும், ஹிந்தி முதல்தமிழ் வரை இதன் செல்வாக்கு ஓர் ஏகாதிபத்தியமாகவே இருந்தது என்றுகூடச் சொல்லலாம். அனைத்திந்திய வானொலி நிலையம் தன்னுடைய நிகழ்ச்சி அமைப்பு முறையை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை இது ஏற்படுத்தியது. இப்பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பே.

அதில் தயானந்தாவின் குரலும், ஒலிபரப்பு அணுகுமுறையும் காய்ந்து வறண்டு கிடந்த மண்ணில் பெய்த கனத்த மழை போன்று இருந்தது. அறிவிப்பில் ஒரு கனதி, எடுத்துக் கூறும் விடயங்களில் ஓர் செவிநுகர் வனப்பு, கேட்போர் எல்லோர் கவனத்திலும் விழுந்தது. தயானந்தாவின் திறன் வெளிப்பாட்டின் வலுமிக்க அம்சமாக இருப்பது அவரது நேர்காணல்களே. நேர்காணல் என்பது நேர்காணப்படுபவரின் தராதர விவரணமாகவும், தங்களின் கருத்து யாதோ! என்கிற வியங்கோளாகவும், தங்கள் வானொலி நேயர்களுக்கு விடுக்கும் செய்தி யாது என்கிற பிரார்த்தனையாகவும் விளங்கிய நேரத்தில், நேர்காணப்படுபவரை சற்று மடக்கிப் பிடிப்பதுமான ஒரு தொடர்பாடலாக ஆக்கி, நேர் காணப்படுபவரின் முழு ஆழுமையையும் வெளிக்கொணரும் வகையில் இவரது நேர்காணல்கள் அமைந்திருக்கின்றன.

தயானந்தாவின் நேர்காணல்கள் உலகத்தரமானவை. வானலையின் வரிகள் நூல் அதைச் சாற்றி நிற்கிறது.

No comments: