Tuesday, March 17, 2009

தொடங்கிவிட்டது இந்தியாவில் தேர்தல் திருவிழா . . .


மற்ற நாடுகளில் எப்படியோ நம் நாட்டை பொறுத்த மட்டில் தேர்தல் என்பது பல்வேறு பொழுதுபோக்குகள் நிறைந்த அதிக செலவு மிக்க திருவிழா போன்று மாறிவிட்டது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைநடைபெறுகின்ற இந்த திருவிழா வழக்கம் போல் பலத்த எதிர்பார்ப்புகளுடன் களைகட்ட தொடங்கிவிட்டது.

இந்திய சுதந்திரத்திற்கு பின் முதன்முதலாக பாராளுமன்ற தேர்தல் 1951ம் Oct தொடக்கம் 1952ம் ஆண்டு Feb மாதம் வரை 5 மாதங்கள் பல்வேறு கட்டங்களாக நடந்தது. சுதந்திரத்திற்கு பின்னான இந்த தேர்தலை நடத்தி முடிக்க ஆனா செலவு ரூ. 10 கோடியே 45 லட்சம். ஆனால் இன்று ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது செலவுகளாக அதிகரித்து நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு ரூ. 10,000 கோடிக்கும் அதிகமாக செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ஜனநாயக நாடான, பல இன மக்கள் வாழுகின்ற இந்தியாவில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது என்பதே ஒரு மாபெரும் சாதனைதான். மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் குளறுபடியின்றி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தொடங்கி தேர்தல் ஊழியர் நியமனம், மின்னனு வாக்குபதிவு இயந்திர பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பது என்பது வரை எளிதான காரியம் அல்ல.

தேர்தலை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்தி முடிக்க அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் தேர்தல் செலவு போன்ற பல்வேறு நடத்தை விதிகளையும், கட்டுப்பாடுகளையும், தலைமை தேர்தல் கமிஷன் விதித்திருக்கிறது. மாநிலத்திற்கு மாநிலம் ஒரு வேட்பாளர் தேர்தலுக்கு செலவிடும் பணத்தொகை அதிகபட்சம் 25 லட்சமும் குறைந்தபட்சம் 10 லட்சமும் என மாறுபடுகிறது.

தேர்தலின் போது ஒட்டப்படும் சுவரொட்டிகள், கொடி, தோரணங்கள், பேனர்கள், ஊர்வலங்கள் போன்றனவற்றைப் பார்த்தால் வேட்பாளர் செய்யும் செலவுகள் தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள செலவு வரம்புக்குள் அடங்காது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். சமீப காலமாக தேர்தலில் அரசியல் கொள்கைகளின் ஆதிக்கத்தை விட பணத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. வெற்றிக்காக எந்தவொரு செயலையும் செய்ய துணியும் கட்சிகளும் வேட்பாளர்களும் மலிந்து கிடக்கின்றனர். வாக்காளர்களுக்கு பணத்தைக் கொடுத்து அவர்களின் ஓட்டுக்கு விலை பேசும் அசிங்கமான அரசியல் போக்கு அதிகரித்துவிட்டது. தேர்தலின்போது தொகுதியில் கரன்சி நோட்டுக்களை விதைத்து 5 ஆண்டுகளில் பதவியின் அதிகாரபலத்தின் மூலம் அதிக விளைச்சலைப் பார்த்துவிடலாம் என்கிற வியாபார மனப்போக்கு நம் தேசத்தின் அரசியலில் மலிந்து விட்டது.

இவ்வாறான மனப்போக்கு வாக்களர்களுக்கு தெரியாததல்ல. இருந்தாலும் இந்த வியாபாரத்தில் அவர்களும் பங்காளர்களாகி விடுகிறார்கள். தேர்தலில் வேட்பாளர் வெற்றி பெற்று விட்டால் அதன் பிறகு அவருக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இருக்காது என்கிற வரலாற்று அனுபவமும், கிடைத்தவரை லாபம் என்று கருதும் பொறுப்பற்ற தன்மையும் அல்லது அறியாமையும் தான் இன்றைய இந்த நிலைக்கு காரணம்.

தேர்தல் முடியும் வரை திருவாளர் பொது ஜனத்திற்கு இராஜ மரியதை தரும் வேட்பாளர்கள் தேர்தல் முடிந்து விட்டால் நீ யாரோ நான் யாரோ என்கின்ற நிலைக்கு வந்துவிடுகிறார்கள். பணம் வாங்கி விட்டு ஓட்டு போட்டால் அவர்களை யார்தான் திரும்பிப் பார்ப்பார்கள். கை நீட்டி வாங்கிவிட்டால் அவர்களை கை நீட்டி கேள்வி கேட்க முடியாதென்பதை வாக்காளர்கள் உணர வேண்டும்.


ஜனநாயகத்தில் மக்கள் தான் மன்னர்கள் என்பது யாவரும் அறிந்ததே. வரும் தேர்தலில் வாக்காளர்கள் மன்னர்களாக இருக்க போகின்றர்களா? அல்லது ஜனநாயகத்தை பணநாயகமாக்கி அடிமைகளாக இருக்க போகின்றார்களா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

No comments: