Friday, March 20, 2009

தமிழக மக்களவைத் தேர்தல் - 2009


அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை. ஆனால் தமிழக அரசியலை பொறுத்தவரை, 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட காலத்திலிருந்து திமுகவும், அதிமுகவும் நிரந்தர எதிரிகளாக மாறி மாறி வெற்றி தோல்விகளைப் பெற்று தமிழகத்தின் பெரும் கட்சிகளாக தனித்தன்மையை இழக்காமல் தொடர்கிறது. 2004ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து 40க்கு 40 என்று வெற்றி பெற்றது. ஆனால் 13.05.2009 தேர்தலில் இந்த மெகா கூட்டணி தொடர வாய்ப்பில்லை என்பதே தேர்தல் பார்வையாளர்களின் கருத்து கணிப்பாகும். இப்பொழுது திமுக, காங்கிரஸ் ஒரு அணியாகவும் அதிமுக, மதிமுக, இரு கம்யுனிஸ்ட்டுகள் ஒரு அணியாகவும் இணைந்து மீதமுள்ள மற்ற சிறு கட்சிகளை வளைத்து போடுவது தேர்தல் போட்டியை விட பெரிய போட்டியாக இருக்கிறது.

Dr.ராமதாசின் பாமக, நடிகர் விஜயகாந்தின் தேமுதிக, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக கருதபடுவதால் முதல்வர் கலைஞரும் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவும் இக்கட்சிகளை தங்கள் அணியில் சேர்த்து கொள்வதற்கு காய்களை நகர்த்துகின்றனர். இம்மூன்று கட்சிகளுக்கும் தங்களை நோக்கி அரசியல் திரும்பி இருப்பதை நினைத்து குஷி தான். இக்கட்சிகள் யாருடன் சேர்வது என்பதை பிடி கொடுக்காமல் நழுவி கொண்டிருப்பது இரு பெரிய கட்சிகளுக்கும் சங்கடத்தையும் - கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாமகவும், தேமுதிகவும் ஆரம்பித்திலிருந்து இன்று வரை மோதல்களில் இருப்பதால் தாங்கள் இருக்கும் அணியில் தேமுதிக வராது என்ற நம்பிக்கையில் ராமதாஸ் யார் அதிக இடம் தருகிறார்களோ அந்த அணியில் சேர தயாராக இருக்கிறார். தான் உட்காரப் போகும் இடம் கார்டனா, அறிவாலயமா என்பதை தீர்மானிக்கும் படி இரு தலைவர்களுக்கும் பந்தை அடித்திருக்கிறார் ராமதாஸ் - அரசியல் புத்திசாலி.

விஜகாந்தின் கல்யாண மண்டபம் T. R. பாலுவால் இடிக்கப்பட்டது. ஜெயலலிதாவிடம் குடிகாரன் என்று அசிங்கப்படுத்தபட்டார். இருவரிடமும் சுமூகமான உறவு இல்லை. தனித்து நின்று கட்சியை ஒழித்து கட்டப்படுவதை விட யாருடனாவது அணி சேர வேண்டும் ஆனால் யாருடன் சேர்வது என்பதே அவருடைய குழப்பம். 'முன்னால் போனால் கடிக்குது - பின்னால் போனால் உதைக்குது' இதுதான் அவருடைய நிலை.

திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் இரண்டும் இலங்கை தமிழர் பிரச்சனையால் மோதும் சூழ்நிலை இருப்பதால் இதை சரி செய்வதற்கு கலைஞர் முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறார்.

இந்த தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சனையை கையில் எடுப்பார்கள் என்று நம்பபடுகிறது. தோழர்.தா.பாண்டியன், வை.கோ போன்றவர்கள் கலைஞர் அரசையும், மத்திய அரசையும் கண்டித்து ஈழ தமிழர் படுகொலைக்கு காரணமான இவர்களுக்கு வோட்டு போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஜெயலலிதா பக்கம் நின்று பேசுவதற்கு எவ்வளவு தூரம் வாக்காளர்கள் மத்தியில் எடுபடும் என்பது தான் கேள்வி? இலங்கை தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தாமல் மத்திய அரசு ஏதேதோ காரணம் சொல்லித் தப்பிக்க நினைப்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்புள்ளது. மத்திய அரசின் இந்த போக்கினால் திமுக போட்டியிடும் தொகுதிகள் கூட பாதிக்கபடலாம். இன்னும் காலம் கடந்து விடவில்லை மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து யுத்தத்தை நிறத்தினால் தமிழர்களின் ஆதரவு வோட்டுகளாக மாறி வெற்றியை கொடுக்கும் என்பது நிச்சயம்.

எது எப்படி இருப்பினும் ஒரு பலமான அணியே இந்த தேர்தலில் வெற்றி பெறும். கூட்டணி முடிவாகாத நிலையில் எந்த அணி வெல்லும் என்று கணிக்க முடியாது என்பதே அணி சேராத என் கூற்று.

நக்கீரன் - சென்னையிலிருந்து.

No comments: